உதுமானியப் பேரரசு
utumāṉiyap pēraracu
இப்பொழுது துருக்கி என்று சொல்லப்படும் மேற்காசிய நிலப்பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாக மேல்நாட்டு நாகரிகங்களும் கீழ்நாட்டு நாகரிகங்களும் கூடும் இடமாகவும், அதுவே பல நாகரிகங்களின் தோற்றுவாயாகவும் இருந்தது.
இப்பொழுது துருக்கி என்று சொல்லப்படும் மேற்காசிய நிலப்பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாக மேல்நாட்டு நாகரிகங்களும் கீழ்நாட்டு நாகரிகங்களும் கூடும் இடமாகவும், அதுவே பல நாகரிகங்களின் தோற்றுவாயாகவும் இருந்தது.
உதுமானியப் பேரரசை நிலைநிறுத்திய அரசர் உசுமான் (Osman) கி.பி. 1259 முதல் கி.பி. 1326 வரை வாழ்ந்தவர் இவர் தம் தந்தை எர்ட்டோ குருவிடமிருந்து ஒரு சிறிய அரசைப் பெற்றார். இந்தக் குடும்பத்தில் உசுமானே முதலாம் காசி ஆகையால், அவருடைய அரசும் உசுமான்லிப் பேரரசு என்று துருக்கிய வரலாற்றில் வழங்கப்படுகிறது. உதுமான் (Othman) என்ற அராபியப் பெயரே துருக்கியில் உசுமான் என்றாயிற்று. புருசா நகரம் இதன் தலைநகரம்.
சுல்தான் ஒர்கான் ஆட்சியில் (1326–1360) உதுமானியப் படையினர் ஐரோப்பியப் பகுதியிலிறங்கி, பால்கன் நாடுகளின் பல இடங்களைக் கைப்பற்றினர். அவர்கள் ஏசியன் கடல் தீவுகளையும் மாசிடோனியாவையும் திரேசையும் கொள்ளையடித்தனர். கலிபொலி நகரம் அவர்கள் வசமாயிற்று. உதுமானியர் தம் ஐரோப்பியப் பகுதிகளுக்கு ஏட்ரியா நோப்பிளைத் தலைநகராக அமைத்தனர். உதுமானியர் வடக்கு நோக்கிப் படையெடுத்துச் சென்று தான்யூபு (Danube) ஆற்றின் தென்பகுதிகளை வென்று, அங்கேரி, ஆசுத்திரியா, இத்தாலி, கிரேக்கம் முதலிய நாடுகளைக் கொள்ளையடித்தனர். மேற்காசியாவிலும் பல நாடுகளை அவர்கள் வென்றனர்.
முதலாம் ஒர்கானும் முதலாம் மூராதும் அரசாங்க அமைப்பை நிறுவினர்; அரசாங்க அதிகாரங்களைக் கூடுதலாக ஆக்கி, நாட்டில் புதிதாக வந்து குடியேறிய அராபியர்களையும் இரானியரையும் வரவேற்று, முசுலிம், கிறித்தவ, யூத மக்களை அரசாங்கப் பணிகளில் அமர்த்தி, வென்ற நாடுகளில் புதிய மாறுதல் செய்யாமல் உள்ளூர் வழக்கங்களே நடைமுறையிலிருக்குமாறு செய்தனர்; வென்ற நாடுகளிலுள்ள நிலங்களிலிருந்து வந்த வருமானத்தைப் போர் வீரர்களுக்களித்து, அவர்களுடைய பணியையும் வரையறை செய்தனர்.
இவர்கள் சிறந்த குதிரை வீரர்களும் ஆவர். திறமான பயிற்சி பெற்ற அடிமை வீரர் படையும் சுல்தானுக்கு உதவி செய்தது. சுல்தான் பயாசிடு 1,000,00 ஆங்கில, பிரஞ்சு, பிளமிக, செருமானிய பிரபுக்களடங்கிய ஒரு படையைச் சிலுவைப் போரில் தோற்கடித்தார் (1396). இவர் பல நகரங்களை வென்று உதுமானியப் பேரரசை தெற்கே யூபிரட்டிசு ஆறு முதல் வடக்கே அங்கேரி வரை விரிவாக்கினார்.
சுதந்தர நாட்டமுடைய துருக்கியக் காசிகளே இவர் காலத்திலும், இவருக்குப் பின்வந்த அரசர்கள் காலத்திலும் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்தனர். பல காசிகள் சுதந்தர ஆட்சியாளர்களாகவே இருந்- தனர். செல்வம்மிக்க உதுமானியக் குடும்பங்களும் அப்போது செல்வாக்குடனிருந்து வந்த திறம் மிக்க ஆட்சியாளர் வகுப்பும் சுல்தானுடைய அதிகாரத்துக்குத் தடையாக இருந்தன. முதலாம் முகமதின் ஆட்சியில் ஐரோப்பிய நிலப்பகுதியில் அல்பேனியா, வாலாச்சியா முதலிய பாகங்கள் துருக்கியப் பேரரசுடன் இணைக்கப்பட்டன. உதுமானியச் சுல்தானுக்கு எதிரிகளாக கரமான் (Karaman) என்ற சிறிய நாட்டை ஆண்ட காசி அரசர்கள் அடிக்கடிக் கலகம் செய்தும் கலகங்களைத் தூண்டியும் வந்தனர். இரண்டாம் மூராதின் காலத்தில் துருக்கியர் சலோனிகா (Salonika) நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். ஆனால் பெருவீரரான போலிசு (Polish) அரசராகிய இலாடிசுலாசு (Ladislas) பெரும்படையுடன் வந்து துருக்கியப் படைகளைத் தோற்கடிக்கவே, மூராது வாலாச்சியாவை (Wallachia) விட்டுவிட்டு இலாடிசுலாசுடன் கி.பி. 1444 இல் பத்தாண்டுகளுக்கு அமைதி உடன்படிக்கை செய்துகொண்டார்.
மூராது தத்துவம், வரலாறு முதலியவற்றில் ஈடுபாடு கொண்டார்; இவர் காலத்தில் செல்சுக்கிய உதுமான் அரசுகளின் வரலாறுகள் எழுதப்பட்டன. இவர் தம் அரண்மனையில் பள்ளிக்கூடம் நிறுவிக் கல்விக்கு ஊக்கம் அளித்தார். இதில் கணிதம், அரசாங்க அமைப்பு முறை, மொழிகள், வரலாறு, தத்துவம் முதலியன கற்றுக் கொடுக்கப்பட்டன. இதை முன்மாதிரியாக வைத்துத் துருக்கியப் பேரரசில் பல்வேறு இடங்களில் ஆட்சித் தலைவர்கள் கல்விக் கூடங்களை நிறுவினர். கான்சுடாண்ட்டிநோபிள் நகரம் துருக்கியர் வசமானதும் அங்கு ஒரு கல்விக் கூடம் நிறுவப்பட்டு, அது 1918 வரை பணி செய்தது.
இலாடிசுலாசு என்ற போலிசு அரசர் உதுமானியப் பேரரசிலிருந்து ஐரோப்பிய நிலங்களை மீட்டுக் கொள்ளுதற்காகப் பெரும்படையுடன் சிலுவைப் போரை (Crusade) நடத்திவரவும், மூராது ஒரு திறமிக்க படையுடன் வந்து 1441–இல் வர்னாப் (Varna) போரில் ஐரோப்பியப் படையைத் தோற்கடித்து, பாசுனியா (Bosina), செர்பியா (Serbia) முதலிய நாடுகளை அவற்றின் மக்களுடைய ஆதரவுடன் வென்றார். இலாடிசுலாசு போரில் இறந்தார். மூராது கிரேக்கநாட்டில் கொரிந்தையும் பத்ராசையும் வென்றார். இவர் 1451–இல் இறந்ததும், இவர் தம் மூன்றாம் மகன் இரண்டாம் முகமது அரியணை ஏறினார்.
உதுமானியத் துருக்கியர் கான்சுடாண்ட்டி நோபிளைக் கைப்பற்றுதல்
இரண்டாம் முகமதின் ஆட்டி உதுமானிய வரலாற்றில் சிறப்புமிக்கது. இவருடைய ஆட்சியில்தான் (கி.பி. 1451–1481) கிழக்கத்திய அல்லது பைசாண்டியப் பேரரசின் தலைநகராக ஆயிரமாண்டுகட்கு மேலாகச் சுதந்தரமாக விளங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க கான்சுடாண்டி நோபிள் நகரம், துருக்கியரால் கைப்பற்றப்பட்டுத் தலைநகரமாக்கப்பட்டது. அது உதுமானியப் பேரரசு மறைந்த பின்னரும் இன்றுவரை துருக்கியின் வசம் இருந்து வருகிறது.
முகமது, பாசுனியாவையும் செர்பியாவையும் தனதாட்சியில் அமைத்து, எர்சுகோவினாவையும் அல்பேனியாவையும் கிரேக்கம் முழுவதையும் வென்று, துருக்கியில் கரமான் நாட்டின் எதிர்ப்பையும் அழித்தார். இவருடைய பேரரசு தான்யூபு ஆற்றிலிருந்து யூபிரட்டிசு ஆறு வரை பரவியிருந்தது. இப்பேரரசை, இவர் நல்ல முறையில் ஆண்டார். தம் குடிகளுள் பெருமளவில் கிரேக்க வைதிகக் கிறித்தவர்களிருந்தமையால், அவர்களுடைய கிரேக்கத் திருச்சபையை இவர் ஒப்புக் கொண்டு, அவர்களுடைய தலைவருடன் (Patriarch) ஒத்துழைத்தார். இவருக்குப் பின் வந்த இரண்டாம் பாசிடின் முயற்சியால் உதுமானியக் கப்பற்படை மத்திய தரைக்கடலில் வெனிசைக் கட்டுப்படுத்த வல்லதாக அமைந்தது. இவர் தம் பின் தோன்றல் முதலாம் சலிம் இரானிய அரசரை வென்று, வடஇராக்கு, குர்டிசுத்தான், சிரியா, எகிப்து ஆகியவற்றைக் கைப்பற்றினார்.
உதுமானியப் பேரரசின் உச்சநிலை
முதலாம் சலிமின் மகனான முதலாம் சுலைமானின் ஆட்சிக்காலமே (கி.பி. 1520–1566) உதுமானியப் பேரரசின் உச்சநிலையைக் காட்டுகிறது. அப்பேரரசில் அராபியர், எகிப்தியர், துருக்கியர் வாழ்ந்த நாடுகளிருந்தன. சலிமின் காலத்திலிருந்து 1922 வரை உதுமானியச் சுல்தான்கள் காலிப்புகள் (Caliphs) என்று மதிப்புடனழைக்கப்பட்டனர். முதலாம் சுலைமான் ‘மாட்சிமிக்க’ (The Magnificant), என்றழைக்கப்பட்டார். இவருடைய ஆட்சிக்காலம் பொற்காலம் எனச் சொல்லப்பட்டது.
சுலைமான் அங்கேரி நாடு முழுவதையும் வென்று இணைத்தார். இசுதான்புலிலிருந்து வியன்னா வரையிலும், கருங்கடலிலிருந்து ஏடிரியாடிக்குக் கடல் வரையிலுமுள்ள ஐரோப்பிய நாடுகள் எல்லாம் உதுமானியப் பேரரசினுள் அடங்கியிருந்தன. துருக்கி முழுவதும், யூபிரட்டிசு ஆறு வரையுள்ள நிலங்களும் அதிலடங்கியிருந்தன. இவர் பாரசீகம்வரை தம் பேரரசை விரிவடையச் செய்து, ஏசியன் கடற்கரையிலும் தமதாதிக்கத்தை நிறுவினார்.
உதுமானியப் பேரரசின் வீழ்ச்சி
பரந்த பேரரசில் ஆட்சியாளர்கள் சுல்தானைவிட அதிகாரம் மிக்கவராயிருந்தனர்; ஆட்சியும் திறமையாக இல்லை; ஊழல் தோன்றிற்று. பல அதிகாரிகள் சுல்தானின் அடிமைகளாகவோ அடிமைகளின் அடிமைகளாகவோ இருந்தமையால், அவர்கள் நாட்டிற்கோ அரசருக்கோ பற்றுறுதியுடன் பணி செய்யவில்லை. ஆசுத்திரியாவின் (Austria) அரசர் தான்சுவான் (Don Juan) 1572–இல் ஒரு கப்பற்படையுடன் இலெபாண்டோவில் (Lepanto) உதுமானியக் கப்பற் படையைத் தோற்கடித்தார். இது முசுலிம்கள்மீது ஐரோப்பியக் கிறித்தவரடைந்த வெற்றியாகக் கருதப்பட்டது. இரண்டாம் சலிமுக்குப் பின்வந்த உதுமானியச் சுல்தான்கள் வலியற்றிருந்தனர். ஓர் உதுமானியப்படை போலந்தின் சான் சோபியசுகியினால் (Jon Sobieski) 1683–இல் தோற்கடிக்கப்பட்டது. உதுமானியப் படைகள் வியன்னாவிலிருந்து விரட்டப்பட்டன. அங்கேரி நாட்டை உதுமானியரிடமிருந்து ஆசுத்திரியர்கள் (Austrians) 1687–இல் வென்று கொண்டனர். சவாயின் அரசர் யூசின் (Eugene) கி.பி. 1697–இல் செண்டாவில் உதுமானியப் படையை முறியடித்தார். பால்கனின் வடபகுதியிலிருந்து உதுமானியர் நீங்க வேண்டியதாயிற்று; உதுமானியர்கள் 1699–இல் செய்த கார்லோவிட்சு உடன்படிக்கையின்படி (Treaty of Karlowitz) வெனிசு, ஆசுத்திரியா, போலந்து, உருசியா முதலியவை உதுமானியப் பேரரசிலிருந்து முறையே தால்மேசியா, திரான்சில்லேனியா (Transilvania), பொடோலியா, ஆசாவ் முதலியவற்றை அடைந்தன. குறைந்த வரிகளில் வாணிகம் செய்தல், பேரரசிலிருந்து பிரஞ்சியருக்குப் பிரஞ்சுச் சட்டத்தின்படி சலுகைகள் முதலிய பல சலுகைகளைச் சுல்தான்கள் பிரஞ்சியருக்கு வழங்கினர்.
உருசியா கி.பி. 1774–இல் ஆசாவை வென்று, கிரிமியாவைச் சுதந்தர நாடாக ஆக்கி, உதுமானியப் பேரரசிலுள்ள கிறித்தவர்களுக்குப் பாதுகாப்பளிக்குமாறு சுல்தானோடு ஒப்பந்தம் செய்தது. கிறித்தவக் குடிகளின் நலனைச் சுல்தானிடம் கூறுதற்காக உருசியத் தூதர் சுல்தானின் நகரத்தில் அமர்த்தப்பட்டார். இந்த உரிமையை உருசியருக்கு வழங்கிய குச்சக் கெய்னார்சி (Kuchuk Kainardji) உடன்படிக்கையை ஆதாரமாக வைத்தே உருசியச் சார் மன்னர்கள் 1774–ஆம் ஆண்டிலிருந்து முதலுலகப் போர்வரை உதுமானியப் பேரரசில் தலையிட்டனர். உருசியா கிரிமியாவையும் தன்வசமாக்கி, நீசுட்டர் ஆறுவரை தன் எல்லையை விரிவாக்கியது. காகசசைப் பாரசீகர் பிடித்துக்கொண்டனர். துருக்கியில் மேலைநாட்டு ஆட்சிமுறை, கல்விமுறை, தொழிற்பயிற்சி, அச்சகம் முதலியன புகுத்தப்பட்டன. உருசியா தார்டனல்சிலும் நடுத்தரைக் கடலிலும் நுழையாதவாறு தடுத்தற்கும் உதுமானியப் பேரரசைக் காத்தற்கும் பிரான்சு முயன்றது.
நெப்போலியனுடைய எகிப்தியப் படையெடுப்புக்குப் பின்னர் உதுமானியப் படையில் மாசிடோனியப் படையில் பணிசெய்துகொண்டிருந்த மகமது அலி கி.பி. 1806–இல் வலிமையோடு எகிப்தின் ஆளுநரானார். உதுமானியப் பேரரசில் வாணிகம் செய்தற்கு ஆங்கிலேயருக்கு 1809–இல் உரிமை அளிக்கப்பட்டது. உதுமானியப் பேரரசு ஓர் ஐரோப்பியப் பேரரசாக 1815–இல் வியன்னா மாநாட்டில் ஐரோப்பிய நாடுகளால் ஒப்புக்கொள்ளப்பட்டது.
உதுமானியப் பேரரசின் பல மாகாணங்களில் சுதந்தர ஆளுநர்கள் தோன்றினர். எகிப்திய மகமது அலி வலிய ஆளுநரானார். பால்கனில் உதுமானிய ஆட்சியிலிருந்த ஐரோப்பியக் கிறித்தவர்கள் தேசிய உணர்வு கொண்டு, சுதந்தர நாடுகளை அமைத்தற்காக இயக்கங்களை நடத்தினர். கிரேக்கர்கள் சுதந்தர கிரேக்க நாட்டை நிறுவுதற்கு எடுத்த முயற்சியே கிரேக்கச் சுதந்தரப் போராகும். இதில் ஆங்கில, பிரஞ்சு, உருசியப் படைகள் உதுமானியப் படைகளைத் தோற்கடிக்கவே, சுல்தான் இரண்டாம் மாமுது ஏட்ரியா நோப்பிள் உடன்படிக்கையின்படி 1829–இல் கிரேக்கத்தைச் சுதந்தர நாடாக்கினார். எகிப்தின் மகமது அலியே சுல்தானை எதிர்த்தார். உருசியா சுல்தானுக்குப் பாதுகாப்பளிக்கவும் தார்டனல்சு நீர்வழியை அயல்நாட்டுப் போர்க் கப்பல்கள் பயன்படுத்தாமல் அடைக்கவும் கூடிய உரிமையை 1833–இல் பெற்றது. செர்பியா, வாலாச்சியா, மால்டேவியா முதலியவை தன்னாட்சி உரிமை பெற்றன. இரண்டாம் மாமுது மேல்நாட்டுச் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார்.
பேரரசிலுள்ள உருசியக் குருமார்களுக்குச் சிறப்புச் சலுகைகளை வழங்கச் சுல்தான் அப்துல் மசீது மறுக்க, உருசியச் சார் முதலாம் நிக்கோலசு 1854–1856 ஆம் ஆண்டு கிரிமியப் போர் தொடங்கினார். இதன் முடிவில் நற்பயன் ஏதும் தோன்றவில்லை. நிதி பற்றாக்குறையை நீக்குதற்குச் சுல்தான் வரிவிதிப்புச் செய்ய, பாசுனியா, எர்சுகோவினா, மாசிடோனியா பல்கேரியா ஆகிய ஐரோப்பிய மாகாணங்கள் கலகம் செய்தன. சுல்தானின் அடக்கு முறை மீண்டுமொரு போருக்கு வழிவகுத்தது. இப்போர் 1877–இல் முடிந்தது. சுல்தான் நல்லாட்சியை நிறுவுவதாக உறுதி கூறிய போதிலும், அவ்வாறு செய்யவிடாமல் நிதி நிலைமை தடுத்தது. ‘இளந் துருக்கியர்கள்’ (Young Turks) எனப்பட்ட தேசியவாதிகள் சீர்திருத்தங்களை நிறுவும்பொருட்டுக் கிளர்ச்சி செய்தனர். இதைப் பயன்படுத்திப் பல்கேரியா சுதந்தரமடைந்தது. இலிபியாவைச் சுல்தான் இத்தாலிக்குக் கொடுத்துவிட்டார். பால்கன் நாடுகளெல்லாம் 1912–இல் துருக்கியை எதிர்க்கவே, துருக்கி ஐரோப்பாவில் இசுத்தான்புலையும் ஓரிரு நகரங்களையும் தவிர மற்றவற்றை இழந்தது. ஓராண்டில் இசுத்தான்புல் மட்டுமே துருக்கியிடம் இருந்தது (1913). இக்கால அமைப்புகளையும் சீர்திருத்தங்களையும் ஆதரித்த இளந்துருக்கியத் தலைவர் சியா கோகால்ப்பு (Ziya Gokalp) ஆவார்.
முதல் உலகப் போரினிறுதியில் உதுமானியப் பேரரசு மறைந்தது. முதல் உலகப் போரில் துருக்கி செருமனியுடன் சேர்ந்தது. செருமனியின் உதலியுடன் உருசியப் படையையும் பிரிட்டிசுப் படைகளையும் துருக்கி தடுத்தது. செருமனியர் தம் நாட்டைக் காக்கத் திரும்பியபோது துருக்கி வீழ்ந்தது. போரினிறுதியில் உடன்படிக்கைகளின் வாயிலாக உதுமானியப் பேரரசிலுள்ள துருக்கியரல்லாதார் வாழும் மாகாணங்கள் அதனிடமிருந்து பிரிக்கப்பட்டன. சுல்தான் ஆறாம் மகமது நேசநாடுகளின் கட்டுப்பாட்டில் வந்தார். செவரசு உடன்படிக்கையின்டி (1920) துருக்கிய மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. தேசியக் குடியரசு இயக்கத்தை நடத்திய முசுதாபா கமாலினால் இவ்வொப்பந்தம் மறுக்கப்படவே, இலாசேன் உடன்படிக்கையின்படி (1923) துருக்கி குடியரசாயிற்று. ஆறாம் மகமது கடைசி உதுமானியச் சுல்தான் 1922–இல் இசுதான்புலை விட்டு நீங்கினார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 907)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqvffs7h/
தமிழ்“உதுமானியப் பேரரசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qqvffs7h/APA
Oliyon Research. (2026). உதுமானியப் பேரரசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qqvffs7h/MLA
"உதுமானியப் பேரரசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qqvffs7h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment