பச்சைக் குருவி
paccaik kuruvi
எட்டு வகைகளைக் கொண்ட பச்சைக் குருவியின் இனம் குளோராப்சிஸ் ஆகும்.
எட்டு வகைகளைக் கொண்ட பச்சைக் குருவியின் இனம் குளோராப்சிஸ் ஆகும். இவ்வினம் புல்புல் பறவை இனத்துடன் மிகவும் நெருக்கமான உறவினைக் கொண்டது. சில இடங்களில், இவ்விரண்டு பறவை இனங்களும் ஒரே குடும்பமாகக் காணப் படுகின்றன. இப்பறவையின் நீளம் 17–20 செ.மீ. ஆகும். இதன் இறக்கைகள் நீண்டு காணப் படும். இப்பறவையின் காலின் கீழ்ப் பகுதி குட்டையாகவும், உறுதியாகவும் இருக்கும். இறகுகள் புல் போன்ற பசுமையான வண்ணத்தைப் பெற்றுப் பளிச்சென்று காணப் படும். குறிப்பாக, முதுகில் நீண்டும், தளர்ச்சியாகவும், காணப் படும். பல வகைகளில், ஆண் குருவியின் முகவாய்த் தொண்டை, தாடை ஆகியவற்றின் நிறம் கறுப்பு அல்லது பளபளப்பான நீல வண்ணமாகும். மரத்தில் வாழும் ஒரு வகையான எலுமிச்சை வயிற்றுப் பச்சைக் குருவியை வேறுபடுத்திக் காட்டுவது அடி வயிற்றில் காணப் படும் பளபளப்பான எலுமிச்சை வண்ணமே. மற்றொரு வகையான பொன்னேற்றிப் பச்சைக் குருவியின் முன் நெற்றியில், பளபளப்பான மஞ்சள் வண்ணக் குறி காணப் படும்.
பச்சைக் குருவி கீழ்த் திசை வரை பரவியிருக்கிறது. குறிப்பாக, மலேசியா நாட்டில் இவ்வினங்கள் மிகுந்து காணப் படுகின்றன. மரங்களிடையே வாழும் போது, இறகுகளில் இலைப் பச்சை வண்ணம், வலிவற்ற உரு மறைப்பாகப் பயன் படுகிறது. இப்பறவை பூமரங்களிடையே இணையாகவும், சிறு கூட்டமாகவும் தங்கும்.
பச்சைக் குருவியின் அலகும், நாக்கும் தேனை உறிஞ்சுவதற்கேற்ற தகவமைப்பைப் பெற்றும் காணப் படுகிறது. மலர்ந்த பூக்களின் கவர்ச்சியால், மயங்கும் பச்சைக் குருவி, தேனை உறிஞ்ச ஒவ்வொரு வகைப் பூக்களாகச் செல்லும் போது, அயல் மகரந்தச் (cross polination) சேர்க்கையை உண்டாக்குகிறது. இப்பறவை ஒரு மரத்திலிருந்து, மற்றொரு மரத்திற்கு இயல்பாகத் தாவிப் பறக்கக் கூடியது.
பச்சைக் குருவி நன்கு பாடும் பறவையாகும். மேலும், ஏனைய பறவைகளைப் போல ஒலி எழுப்பும் திறனையும் கொண்டது. ஒரு பச்சைக் குருவியைத் தொடர்ந்து, மற்றொரு பச்சைக் குருவியென, இடைவிடாது, எவ்விதக் குறுக்கீடுமின்றி, ஏனைய பறவைகளைப் போல ஒலி எழுப்பிக் கேட்பவரைக் குழம்ப வைக்கும்.
பச்சைக் குருவி புகழ் பெற்ற கூண்டுப் பறவையாக விளங்குகிறது. அனைத்துப் பறவைச் சந்தையிலும் பச்சைக் குருவியைக் காணலாம். குறிப்பாக, பொன்னேற்றிப் பச்சைக் குருவி, பெரும்பான்மையான பறவை வளர்ப்போரால் கூண்டுகளில் வளர்க்கப் படுகிறது. வேடிக்கையான, மகிழ்வூட்டுகின்ற, சண்டையிடுகின்ற குணத்தை இக்குருவி பெற்றிருப்பதால், இக்குருவியை ஏனைய பறவைகளோடு, கூட்டில் ஒன்றாக அடைத்து வைக்காமல், இக்குருவியை மட்டும், தனிக் குழுவாகக் கூண்டில் வளர்ப்பர். இப்பறவை, பூச்சி இனங்களையும், பழங்களையும், பூந்தேனையும் உண்டு வாழ்கின்றன. கூண்டில் வாழும் பறவை, வாழைப் பழம், ரொட்டி, பால் இவற்றை உண்டு, நன்றாகச் செழித்துக் காணப் படும்.
இந்தியாவில் பொன்னேற்றிப் பச்சைக் குருவி (Chlocopsis aurifrons) எலுமிச்சைப் பச்சைக் குருவி (Chloropsis hardwickii), குளோராப்சிஸ் ஜெர்டனி (Chloropsis jerdoni) <!---- See: https://en.wikipedia.org/wiki/Leafbird; https://en.wikipedia.org/wiki/Orange-bellied_leafbird; https://en.wikipedia.org/wiki/Jerdon%27s_leafbird ----> என்னும் மூன்று இனங்கள் காணப் படுகின்றன. பொன்னேற்றிப் பச்சைக் குருவி பளிச்சிடும் பொன்னிறத்தை நெற்றிப் பகுதியிலும், ஊதா நிறத்தை முகவாய் மற்றும் தொண்டைப் பகுதியிலும், பச்சை நிறத்தை முதுகுப் பகுதியிலும் பெற்றுக் காணப் படுகின்றன. இதன் மீசைக் கோடுகள் நீளமாக இருக்கும்.
இவ்வினப் பறவை மலைப் பகுதிகளில் மிகுதியாகப் பரவியிருக்கிறது. மேலும், சோட்டா நாகபுரி பரப்பிலும், தென்னிந்தியாவிலும், மியான்மரிலும், இலங்கையிலும் பெரும்பான்மையாக உள்ளன.
எலுமிச்சை வயிற்றுப் பச்சைக் குருவி, மிக அழகான, சுறுசுறுப்பான இப்பறவை, புல் போன்ற பசுமையான நிறத்தைப் பெற்றுக் காணப் படும். இதன் அடிப் பகுதியில் ஆழமான ஒளிர்கின்ற எலுமிச்சை வண்ணம் மிளிரும். முகவாய், தொண்டை, மார்பின் மேல் பகுதி ஆகியன பளபளப்பான கரும் சிவப்பு அல்லது ஊதா நிறத்தைப் பெற்றிருக்கும். அலகு கறுப்பு நிறத்துடன் ஒடுங்கி, சற்றே வளைந்து காணப் படும். பெண் பறவையில் நீல நிற மீசைக் கோடு, சற்று ஒளி மங்கிக் காணப் படும். மேலும், வயிற்றின் அடிப் பகுதியில், இளம் எலுமிச்சை வண்ணம் காணப் படும். இவ்வினப் பறவை மரங்களில் மட்டுமே வாழும் இது, இமயத்தின் புறத் தொடர்களிலே, மைய இமயத்திலும், கீழை இமயத்திலும் மிகுதியாகக் காணப் படும்.
குளோராப்சின் ஜெர்டனி. பறவையின் நீளம் 7 அங்குலம், ஆண் பறவையின் இறகின் நிறம் ஒளிரும் பச்சையாகும். நீல நிறமாக, அகன்ற மீசைக் கோட்டைப் பெற்றுக் காணப் படும். நெற்றி, பச்சை கலந்த மஞ்சள் வண்ணத்தைப் பெற்றிருக்கும். இப்பறவையின் கண் திரை, பழுப்பு நிறமாக இருக்கும். சிறகின் வளைவுகளில் மிகவும் பளிச்செனப் பசுமை கலந்த நீலத்தைப் பெற்றிருக்கும். அலகு கருமையாகவும், கால்கள் இள நீலமாகவும் காணப் படும். இக்குருவி மட்டும் பொதுவாகத் திறந்த வெளிகளிலும், வீட்டுத் தோட்டங்களிலும், பழத்தோட்டங்களிலும் தோப்புகளிலும் இருக்கும். மிகவும் சுறுசுறுப்பான இது, கூடு கட்டியிருக்கும் போது, மிக எச்சரிக்கையாகக் கண்காணித்துக் கொள்ளும். உரத்த ஒலி எழுப்பும். இந்தியாவின் பல இடங்களிலும், இலங்கையிலும் இது காணப் படும்.
கூடு கட்டுதல். மே–ஜுலை இப்பறவை கூடு கட்டுவதற்கு ஏற்ற காலமாகும். நார்ப் பொருள், சுள்ளி, சிறிய குச்சி, சிறு வேர் போன்றவற்றால் கூடு கட்டுகிறது. கூட்டினை மரத்தின் இரண்டு கிளைகளுக்கு இடையே தொங்க விடுகின்றன. தொங்க விடும் போது, இலைகளால் அக்கூடு மறைக்கப் படுகிறது. நிலத்திலிருந்து 6–10 மீட்டருக்கு மேலே உள்ள மரக் கிளைகளில் மட்டுமே கூட்டைக் கட்டுகிறது.
முட்டையிடல். முட்டை நீள் உருண்டையாக மென்மையாக, தேர்ச்சியான இழையமைப்பைப் பெற்றுக் காணப் படுகின்றன. வழக்கமாக, இரண்டு முட்டைகளை இடும் இயல்புடையது; சில சமயங்களில், மூன்று முட்டைகளை இடுவதும் உண்டு. பொதுவாக, முட்டை வெண்மை அல்லது பாலேடு நிறத்தில் அமைந்திருக்கும்.
பரவல். பச்சைக் குருவி இமயமலைப் பகுதிகளில் பரந்து காணப் படுகிறது. சிம்லா மற்றும் முசௌரியிலிருந்து, கிழக்கு அசாம் வரையிலும், தெற்கு மணிப்பூர், மியான்மர் வழியாக டினாசீரம் (Tenasserim) வரையிலும், மலையடிவாரத்திலிருந்து 2 கி.மீ. உயரமுள்ள மலேசியா வரையிலும் பரவியிருக்கிறது —செ. மரியசூசைநாதன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 398)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qqtkwkat/
தமிழ்“பச்சைக் குருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qqtkwkat/APA
Oliyon Research. (2026). பச்சைக் குருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qqtkwkat/MLA
"பச்சைக் குருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qqtkwkat/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment