செல்
cel
செல்லில் சைட்டோப்பிளாசம், நியூக்ளியஸ், மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்பு, பல நுண் உறுப்பு ஆகியன உள்ளன.
செல்லில் சைட்டோப்பிளாசம், நியூக்ளியஸ், மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்பு, பல நுண் உறுப்பு ஆகியன உள்ளன. இவை கரைசல் பொருள் செல்ல விடாமல், கரை நீர்மம் மட்டும் புகக் கூடிய சவ்வி- னால் சூழப்பட்டுள்ளன. உயிரின் அடிப்படைச் செயல்பாடுகளைச் செல் செய்கிறது.
செல்லின் வடிவமைப்பு, அதன் செயல்பாட்டுக்கும், திசு அல்லது உறுப்பிற்கும் ஏற்றவாறு அமைந்துள்ளது. இது ஒற்றைச் செல் உயிரிகளில் பல வடிவங்களில் உள்ளது. பல செல்கள், முட்டை வடிவத்திலும், வட்ட வடிவத்திலும், நீள் வட்ட வடிவத்திலும், இயல்புக்கு மீறிய வடிவத்திலும் உள்ளன.
விலங்கினங்களில் கரு வளர்ச்சியின் போது, குறுகிய காலத்தில் மட்டும் தொடக்கத்தில், வட்ட வடிவத்திலும் பின்னர் வேறுபட்டும் காணப் படுகின்றன. குருதிச் சிவப்பணுக்கள், குருதிக் குழாயில் எளிதாக ஆக்சிஜனை எடுத்துச் செல்வதற்கேற்றவாறு, வட்ட வடிவத்திலுள்ளன. தசைகளில் ஏற்படும் சுருங்கி விரியும் தன்மைக்கேற்றவாறு, அவற்றிலுள்ள செல்கள் நீள் வாட்டத்திலுள்ளன. உறுப்புகளில் பிடிப்புடன் இருக்க இவ்வமைப்பு உதவுகிறது.
நிறமிச் செல்களில் இவை பல பொய்க் கால் கிளைகளைக் கொண்டுள்ளன. இவ்வமைப்பு நிறத்தைப் பரவலாக்க உதவுகிறது. நிறமி உயிரணுக்கள் சுருங்கும் போது, விலங்கின் நிறம் வெண்மையாகவும், விரியும் போது நிறம் அழுத்தமாகவும் தோற்றமளிக்கும். செல்கள் வடிவம், உடலமைப்பு, செயல்பாடு இவற்றிற்கேற்ப அமைந்துள்ளன. உறுப்புகளின் அலகாகச் செல் இருப்பதால், உறுப்புகளின் செயலுக்கு ஏற்றவாறு வடிவமைப்பும் கொண்டுள்ளன. பாக்டீரியா, நுண்ணுயிரிகளின் செல்களே மிகச் சிறியவை. அமீபா செல் 1 மி.மீ; ஆஸ்ட்ரிச் என்னும் தீக்கோழியின் முட்டையே மிகப் பெரிய செல் ஆகும். இதன் நீளம் 15 செ.மீ. இருக்கும்.
செல்லின் இயல்பான செயல் முறைகளைக் கட்டுப்படுத்தும் மையமாக, நியூக்ளியஸ் சைட்டோ பிளாசத்தின் உதவி கொண்டு, உயிரியின் உரு வளர்ச்சி, ஆக்கச் சிதை மாற்றம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது. ஒரு சில சமயங்களில், நியூக்ளியஸ் இல்லாமலேயே, செல் இயங்கும். நியூக்ளியசின் ஆளுகை, ஒரு வரம்புக்கு உட்பட்டது. சைட்டோபிளாசம் மிக அதிகமாகி விட்டால், செல்லின் ஆக்கச் சிதை மாற்றம் சீர் குலைந்து விடலாம். அப்பொழுது, நியூக்ளியஸ் தன் உருவை மாற்றியோ, பருமனை அதிகரித்தோ, குரோமோசோம்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியோ, செல்லின் செயல்பாடுகளைக் கட்டுப் படுத்துகிறது.
செல்லின் மேற்பரப்பு மிக இன்றியமையாதது. ஏனெனில், இதன் வழியாகவே நீர், வளிமம், ஊட்டப் பொருள் ஆகியவை செல்லின் உள்ளே செல்கின்றன. செல்லின் அனைத்துப் பகுதியிலும், ஆக்கச் சிதை மாற்றம் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கும். இதற்கு வேண்டிய பொருள்கள் செல் சவ்வு மூலமாக எடுத்துச் செல்லப் படுகின்றன. சைட்டோப் பிளாசம் ஒரு குறிப்பிட்ட அளவை விட அதிகமாகி விட்டால், ஆக்கச் சிதை மாற்றம் சீர் குலையலாம். இதைத் தடுக்க நியூக்ளியஸ் இரட்டிப்பாகவோ, பலவாகவோ பிரிகிறது.
செல் எண்ணிக்கை. ஒற்றைச் செல் உயிரிகளில் முழு உயிரியே ஒரு செல்லாக உள்ளது. ஆனால், பல செல் உயிரிகளில் மிகுதியான செல்கள் உயிரியின் உருவ அமைப்புக்கும், பருமனுக்கும் ஏற்றவாறு உள்ளன. குழந்தை பிறந்தவுடன், அதன் செல்களின் எண்ணிக்கை ஏறத் தாழ 2000,000,000,000 (இரண்டு லட்சம் மில்லியன்கள்) ஆகும். 70 கி.கி. எடையுள்ள ஒரு மனிதன் உடலில் ஏறத் தாழ 600 கோடி செல்கள் இருக்கும்.
ஓர் உயிரியில் உள்ள செல்களின் எண்ணிக்கை செல் பகுபடுதலின் அளவைப் பொறுத்ததாகும். அனைத்து உயிரணுக்களிலும், செல் பகுபடுதல் ஒரே வீதத்தில் இருப்பதில்லை. சில உயிரிகளில் குறைந்த காலத்தில் முதிர் நிலையடைந்து, செல் பகுபடுதல் நின்று விடுகிறது. சிலவற்றில் இறக்கும் வரை செல் பகுபடுதல் நடக்கும். செல்கள் பெருத்தலாலும், அழிந்த செல்கள் மாற்றீடு செய்யப் படுவதாலும், செல்களின் எண்ணிக்கை நிலையாக இருப்பதில்லை. செல்களில் இரண்டு வகை உண்டு. அவை புரோகேரியோட்டிக் செல்கள், யூகேரியோட்டிக் செல்கள் என்பன.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> புரோகேரியோட்டிக் வகைச் செல்கள் பாக்டீரியா, நீலப் பச்சைப் பாசி போன்றவற்றில் காணப் படுகின்றன. நியூக்ளியஸ் சவ்வு இல்லாமையால், குரோமோசோம்கள் சைட்டோபிளாசத்தில் மிதக்கின்றன. சைட்டோப்பிளாசத்தில் வேறு நுண் உறுப்புகள் இல்லை. மீசோசோம்களும், ரிபோசோம்களும் பரவலாகக் காணப் படுகின்றன. நியூக்ளியஸ், இழைகளாலான ஒரு திரட்சி போன்று சைட்டோப்பிளாசத்தில் மிதக்கிறது. குரோமோசோம்களுக்குச் சிறப்பான இழை வடிவமுமில்லை. மீசோசோம்களால் செல் சுவாசம் நடை பெறுகிறது. புரோகேரியோட்டிக் செல் மேற்பரப்புச் சவ்வு, மேம்பட்ட உயிரிகளின் பிளாஸ்மாச் சவ்வை விடச் சிறந்த செயல்களைப் புரியும். இவ்வகைச் செல்கள் ஒளிச் சேர்க்கையையும், சுவாசத்தையும் நடத்துகின்றன. வைரசையும் இத்துடன் சேர்க்கலாம். ஆனால், வைரசில் ஒளிச் சேர்க்கை, சுவாசம் போன்றவற்றை நடத்தும் சவ்வு, நொதியமைப்பு இல்லை. வைரசில் நியூக்ளிக் அமிலமும், புரதவுறையும் (protein coat) உள்ளன.
யூகேரியோட்டிக் செல். இதில் சைட்டோபிளாச நுண் உறுப்புகளும், நன்கு தெளிவான நியூக்ளியசும் உள்ளன. ஒரு சிறிய அளவு புரோட்டோபிளாசத்தைச் சுற்றிப் பிளாஸ்மாச் சவ்வு உள்ளது. நியூக்ளியஸ் தவிர, செல்லில் பல நுண்ணுறுப்புகளும் (organelles) சேர்மங்களும் காணப் படுகின்றன. நுண்ணுறுப்புகளில், ஒவ்வொன்றும் ஒரு பணியைச் செய்கின்றன. ஆனால், சேர்மங்களுக்குத் தனியான பணியில்லை. இருப்பினும், செல் உயிருடன் செயல்படும். மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், செண்ட்ரோசோம், ரிபோசோம், லைசோசோம், பிளாஸ்ட்டிட்ஸ், குவாண்டோசோம், அகப் பிளாச வலைப் பின்னல் ஆகியவை செல்லில் காணப் படும் நுண்ணுறுப்புகளாகும். சுரக்கும் துகள்கள் (secretory granules), நிறமிகள், சேமித்துள்ள உணவுப் பொருள், துகள்கள் முதலியன சேர்மங்களாகும். நுண்ணுறுப்புகளை உயிருள்ளவை என்றும், சேர்மங்களை உயிரற்றவை என்றும் கூறுவர்.
பொதுவாக ஒரு செல்லில் பிளாஸ்மாச் சவ்வு, சைட்டோசோம், சைட்டோப்பிளாசம், அகப் பிளாச வலைப் பின்னல், மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்பு, லைசோசோம்கள், செண்ட்ரோசோம், மெட்டாப்பிளாசம், ரிபோசோம்கள், பிளாஸ்டிடுகள், நுண் குறு இழைகள், அடியுறுப்புகள், நீளிழைகள், சேர்மங்கள், குமிழிகள், எண்ணெய் நுண் துளிகள், படிகங்கள் ஆகியன காணப்படும்.
பிளாஸ்மாச் சவ்வு. பாஸ்ஃபோலிப்பிடுகள், புரதங்கள் ஆகியவற்றாலான இரு அடுக்குச் சவ்வு, செல்லின் புறவுறையாக உள்ளது. இதன் மூலமாகக் கரைசல் பொருள்கள் மட்டுமே செல்லின் உள்ளே செல்கின்றன. பிளாஸ்மாச் சவ்வில், ஆங்காங்கே நுண் துளைகள் உள்ளன. இவை செல் உறையில் (cell wall) இல்லை. செல் உறை சர்க்கரைப் பொருளால் (polysaccharides) ஆனது.
சைட்டோசோம். இதில் சைட்டோப்பிளாசமும், நியூக்ளியசும் அடங்கும்.
சைட்டோப்பிளாசம். இது நிறமற்ற ஒளி புகும் அளவுக்கு அடர்த்தியான, அடிக்கடி மாறும் தன்மை கொண்ட நீர்மம். இதில் செல் நுண்ணுறுப்புகளும், சேர்மங்களும் உள்ளன. இதில் அகப் பிளாசம், புறப் பிளாசம் என்று இரு பகுதிகள் உள்ளன. புறப் பிளாசம், ஜெல் அல்லது ஜெல்லி போன்றும், அகப் பிளாசம், கரைசால் அல்லது நீர்மம் போன்றும் உள்ளன. சைட்டோப் பிளாசத்தைப் படியச் செய்தால், ஹயலோப் பிளாசம் என்ற ஒரு தெளிந்த நீர்மம் புலப்படும். இதில் நொதிகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அகப் பிளாச வலைப் பின்னல். இது முப்பரிமாணச் சவ்வு மண்டலமாக நியூக்ளியசையும், செல்லையும் சுற்றி உள்ளது. இதிலுள்ள சவ்வுகள் பெரும்பாலும், மடிப்புள்ளவை. ஒரு சில மடிப்பற்றும், வேறு சில துகள்கள் பியோசோம் போலவும் உள்ளன. இவற்றில் ரைபோ நியூக்ளிய அமிலமும் (RNA), புரதமும் உள்ளன. அகப் பிளாச வலைப் பின்னல் இருப்பதால்தான், பொருள்கள் செல்லின் ஒரு பகுதியிலிருந்து ஏனைய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
மைட்டோகாண்டிரியா. கோல் வடிவ அல்லது உருண்டை வடிவ இவ்வுறுப்பில், இரண்டு சவ்வுகள் உள்ளன. புறச் சவ்வு உருவமைப்பைக் கட்டுப் படுத்தவும், அகச் சவ்வு பல உள் மடிப்புகளைக் கொண்டும் உள்ளன. உள் மடிப்புகளில் ஆக்சிஜனேற்ற பாஸ்ஃபாரிலேற்றம் நடை பெறுகிறது. செல்லுக்கு வேண்டிய ஆற்றல் மூலமான ATP (adinosene tri phosphate) இங்குதான் உற்பத்தி செய்யப் படுகிறது. உணவுப் பொருளை எரிக்கும் கிரெப்ஸ் சுழல் நடக்கும் இடம் மைட்டோகாண்டிரியங்களே ஆகும். மைட்டோகாண்டிரியத்தை உயிரியின் ஆற்றல் அகம் எனக் குறிப்பிடுவர்.
கோல்கை உறுப்பு. இதில் வழவழப்பான மெல்லிழையுடன் கூடிய சவ்வுப் பொருள்கள் தனித் தனிக் குமிழிகள் போல அமைந்துள்ளன. செல் நீர்ம இயக்கத்தைச் சீரான நிலையில் வைத்தலும், சுரக்கும் பொருள்களை வெளியேற்றலும் இதன் பணிகளாகும். பல ஆண்டுகளுக்கு முன்பு, கோல்கை உறுப்பு ஆஸ்மிக் ஆக்சைடால் உண்டாக்கப் பட்ட அழகுப் பொருள் எனக் கருதப் பட்டது. எலெக்ட்ரான் நுண்ணோக்கியால் கண்டறியப்பட்ட பின்னரே, இதன் சரியான அமைப்பு முழுதும் விளங்கிற்று. பல நுண் கால்வாய்களோடு மிகுதியான நுண் குமிழிகளும் உள்ளன. சுரக்கும் பொருள்கள் அகப் பிளாச வலைப் பின்னல் நுண் கால்வாய்கள் மூலம் கோல்கை உறுப்புக்குக் கொண்டு வரப் பட்டு, பிறகு ஆய்வுகள் மூலம் செல்லில் மாவுப் பொருளும், புரதமும் இணைக்கப் படுகிற இடம் கோல்கை உறுப்பு என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
லைசோசோம். இவை பெரும்பாலான விலங்குச் செல்களின் சைட்டோப்பிளாசத்தில் உள்ள நெட்டுருளை அல்லது உருளை வடிவத்திலுள்ள நுண்ணுறுப்புகள் ஆகும். தாவரச் செல்களிலும் இவை உள்ளன என்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இவற்றில் நீரிடைச் சேர்மத்தைப் பிரிக்கும் நொதிகள் உள்ளன. ஓரடுக்கு லிப்போபுரதத்தாலான சவ்வினால் சூழப் பட்டுள்ள இந்நொதிகள் அகச் செல் செரிமானத்திற்குப் பயன் படுகின்றன. தேவைப் படும் போது, குமிழிகள் தகர்ந்து அல்லது உடைந்து நொதிகள் வெளிப் படுகின்றன. லைசோசோம்களின் இயக்கம் சில ஹார்மோன்களால் கட்டுப் படுத்தப் படுகிறது. லைசோசோம்களைத் தற்கொலைப் பைகள் (suicide bags) எனவும் கூறுவர். ஏனெனில், லைசோசோம் சவ்வு கிழிந்து வெளிப்படும் நொதியால் வெளிப் பொருள்கள் செரிக்கப் படுவதுடன் அருகிலிருக்கும் சைட்டோப்பிளாசமும் செரிமானமடையும்.
செண்ட்ரோசோம். செல்லின் நடுவில் நியூக்ளியசின் அருகே ஒரு தெளிவான பகுதியில் ஒன்று அல்லது இரண்டு உருண்டை உறுப்புகள் உள்ளன. இவை செண்ட்ரியோல்கள் எனப்படும். செல் பகுப்பின் போது மட்டும் செண்ட்ரோசோம் தெரியும். செண்ட்ரோசோமும், செண்ட்ரியோலும் செல் பகுப்பின் போது, கதிர் ஆக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மெட்டாப்பிளாசம். ரிபோ நியூக்ளியப் புரதங்கள் சிறு மூலக் கூறுகளாகச் சைட்டோப் பிளாசத்தில் பரவலாக உள்ளன. இவற்றின் பயன் சரி வரத் தெரியவில்லை. அகப் பிளாச வலைப் பின்னல் சவ்வில் ஒட்டிக் கொண்டிருக்கும் இவை, ரிபோசோம்கள், RNA புரதம் கொண்ட மிகச்சிறிய நுண்துகள்களாகும். இவற்றின் இன்றியமையாப் பணி புரதச் சேர்க்கையாகும்.
பிளாஸ்ட்டிடுகள். இவை பெரும்பாலும் தாவரச் செல்களில் மட்டுமே காணப்பட்டாலும், சில ஒரு செல் உயிரிகளிலும் உள்ளன. பச்சை, சிவப்பு, பழுப்பு, வெள்ளை முதலான நிறங்களுடன் உள்ள இவை பல விதங்களில் பயன் படுகின்றன. பச்சை நிறப் பிளாஸ்ட்டிடுகள் பச்சையத்தின் உதவியால், ஒளிச் சேர்க்கைக்கும், சிவப்பு, பழுப்பு முதலியவை நிறமூட்டுவதற்கும். வெள்ளைப் பிளாஸ்ட்டிடுகள் எண்ணெய், புரதம், மாவுப் பொருள் போன்றவற்றைத் தேக்கி வைப்பதற்கும் பயன் படுகின்றன. சில செல்களில் அசையும் மயிர் போன்ற நீளிழைகளும், நுண் குறு இழைகளும் உள்ளன. இவை இரண்டும் ஒரே அமைப்புடையவையே. இவை அடியுறுப்புகளிலிருந்து உண்டாகின்றன. ஒரு செல் முதலுயிரிகளில், இவை இயக்கத்திற்கும், உணவுப் பொருள்களை உள்ளே இழுப்பதற்கும் பயன் படுகின்றன.
சேர்மங்கள். நீர்மக் குமிழிகள், எண்ணெய் நுண் துளிகள், நுண் படிகங்கள் முதலானவை இதிலடங்கும். சுருங்கி விரியும் குமிழிகள், நீர்ம இயக்கத்திற்கும், எண்ணெய் நுண் துளிகள் ஆக்கச் சிதை மாற்றத்திற்கு வேண்டிய ஆற்றலை வழங்கவும், ஊட்டப் பொருள், கழிவுப் பொருள்கள் படிகங்களாக வைத்துக் கொள்ளவும் பயன் படுகின்றன.
நியூக்ளியஸ் பாலூட்டிகளின் குருதிச் செவ்வணுக்களைத் தவிர, ஏனைய பெரும்பாலான செல்களில் உருண்டை வடிவ நியூக்ளியஸ் உள்ளது. செல்லின் அனைத்துச்செயல்களையும் கட்டுப் படுத்தும் இது இயல்பாக ஒரு செல்லுக்கு ஒன்றே இருக்கும். சில செல்களில் ஒன்றுக்கு மேற்பட்டவையும் இருக்கும். நியூக்ளியசைச் சுற்றி, ஈரடுக்குள்ள லிப்போப் புரதமும், நுண் துளைகளும் உள்ள நியூக்ளியச் சவ்வு உள்ளது. நியூக்ளியசில் தெள்ளிய நியூக்ளியோப் பிளாசத்தில் பல இழை போன்ற வலை குரோமோனிமேட்டாக்கள் உள்ளன. இவ்விழைகள் ஹிஸ்டோன் என்ற வேதிப் பொருளையும், டீ ஆக்சி ரிபோ நியூக்ளியிக் அமிலம், ரிபோ நியூக்ளியிக் அமிலம் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. இரண்டு நியூக்ளியிக் அமிலங்களும், பென்டோஸ் சர்க்கரை, பாஸ்ஃபோரிக் அமிலம், அடினைன் குவானின், தயமின், சைட்டோசின் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. நியூக்ளியசில் உருண்டை வடிவ நியூக்ளியோலசும் இருக்கிறது. இதில் செறிவான RNA இருப்பதால், புரதச் சேர்க்கையில் பெரும் பங்காற்றுகிறது. குரோமேட்டின் பொருள், இனச் சிறப்புப் பண்புகளைத் தாங்கும் குரோமோசோம்களாக உருவாகி, ஒவ்வோர் இனத்திலும், எண்ணிக்கையிலும், உருவத்திலும் வேறுபட்டிருக்கும். செல்லை அளக்கப் பயன் படும் அளவைக் குறிகள்:
1 மைக்ரான் = மீட்டரில் மில்லியனில் ஒரு பங்கு = 10–6m=h
1 மில்லி மைக்ரான் = மைக்ரானில் ஆயிரத்தில் ஒரு பங்கு - mu
1 ஆங்ஸ்ட்ராம் = 10–4 மைக்ரான் அல்லது 10–16 மீ.
ஏ.ஜே. ஆங்ஸ்ட்ராம் என்னும் ஸ்வீடன் அறிஞர் பெயரால் Å எனப் படுகிறது. பிறிதோர் அலகான நானோ மீட்டர் (10–9மீ அல்லது 10Å) என்பது அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்ட குறியீடாகும்.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 833)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qq4shw9h/
தமிழ்“செல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qq4shw9h/APA
Oliyon Research. (2026). செல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qq4shw9h/MLA
"செல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qq4shw9h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment