அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஆர்லெம் (Harlem) என்று குறிப்பிடப்படும் நீக்கிரோ மக்களின் குடியிருப்புப் பகுதியின் முன்னேற்றத்திற்காகப் பல பணிகளைச் செய்தவர் ஆவார். சமூகத்தில் தாழ்த்தப்பட்டோரின் நல்வாழ்வுக்காகப் பாடுபட்ட இவர், ‘நியூயார்க்கு நகரத்தின் பயனுள்ள குடிமகன்’ என்று அமெரிக்காவின் அதிபராக இருந்த தியோடர் உரூசுவெல்ட்டினால் பாராட்டப்பட்டவர். மக்கள் நெருக்கமுள்ள ஆர்லெம் மக்களின் வாழ்க்கை பற்றி இதழ்களில் எழுதிய குறிப்புகள், பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தின. இரையிசு சேகப்பு ஆகசுட்டுவின் (Riis, Jacob August) கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் அமெரிக்க நகரங்களில் வாழ்ந்த ஏழை மக்களின் பொருளாதார மறுவாழ்விற்கு வழி வகுத்தன. இரையிசு தென்மார்க்கிலுள்ள இரிபி (Ribe) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தந்தை ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தார். இவர் கி.பி. 1870–ஆம் ஆண்டு தென்மார்க்கிலிருந்து ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார். இரையிசு சேகப்பு, நியூயார்க்கு நகரக் காவல் துறையின் செய்தியாளராகப் பணியாற்றினார். அப்பொழுது இவருக்கு ஆர்லெம் மக்களின் வாழ்க்கைமுறையை அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இதன் பின்னரே இவர் எழுத்தாற்றல் வளரப்பெற்று, ஆர்லெம் மக்களின் சிக்கல்களைப் பற்றி நூல்கள் எழுதத் தொடங்கினார். இவர் கி.பி. 1890–ஆம் ஆண்டு மறுபாதி மக்கள் எவ்வாறு வாழ்கின்றனர். (How the other Half lives) என்ற நூலை வெளியிட்டார். இந்நூல் ஆர்லெம் மக்களின் நிலைமைகள் பற்றி விரிவாக விளக்குகிறது. இது அரசியல் வட்டாரத்தில் ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அமெரிக்க நீக்கிரோக்கள் முன்னேற்றத்திற்குப் பல திட்டங்களைத் தீட்ட வழி வகுத்தது. வீடுகள் கட்டிக் கொடுத்தல், பூங்காக்கள் அமைத்தல், சுகாதார இல்லம், கல்வி நிலையங்கள், மனமகிழ் மன்றங்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு அரசாங்கத்திடம் வேண்டினார். வறுமை காரணமாகக் குழந்தைகள் பொருளீட்டும் வேலைகளில் ஈடுபடுவதைத் தடுப்பதற்குப் பாடுபட்டார். இவர் மல்பெரி வளைவுப் பகுதியிலிருந்த நெருக்கக் குடியிருப்பை ஒழித்து, அங்கிருந்த மக்களுக்கு வசதியான வீடுகள், மனமகிழ் மன்றம், உடல் நலக் காப்பகம் ஆகியவற்றையும் ஏற்படுத்திக் கொடுக்கப் பாடுபட்டார். மல்பெரி வளைவுப் பூங்காக் குடியிருப்புப் பகுதிக்கு இவருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இவர் நியூயார்க்கு நகரத்தின் காவல் துறை அதிகாரியாக கி.பி. 1895 முதல் 1897 வரை பணியாற்றினார். தாம் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர்ப் பொதுமக்களுக்குக் கடற்கரை மனமகிழ் திடல் அமைக்க வேண்டும் என்று நியூயார்க்கு நகர நிருவாகத்தினரிடம் இரையிசு வேண்டினார். தீவிலுள்ள (Long Island) பூங்காவிற்கு 1933–ஆம் ஆண்டில் இவர் பெயர் வைக்கப்பட்டது.