இது ZrSiO₄ உட்கூறு கொண்ட கனிமமாகும். சிர்க்கான் (zircon) சிர்க்கோனியத் தனிமத்தின் மிக முக்கியமான மூலமாகும். இக்கனிமத்தில் சிறிதளவு யுரேனியமும், தோரியமும் உள்ளமையால், இது முழுதுமோ, ஒரு பகுதியோ படிகமற்றுக் காணப்படுகிறது. சிறிது வேறுபட்ட சிர்க்கான் வகைக்கு, சிர்ட்டோலைட் என்று பெயர். சிர்க்கான் நீசோசிலிக்- கேட் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதில் தனித்த SiO₄ தொகுதி உள்ளது. மேலும் இது தோரியம் சிலிக்கேட் தோரை, இட்ரியம் பாஸ்ஃபேட் செனோடைம் முதலியவற்றின் கட்டமைப்பை ஒத்துள்ளது. இது நாற்கோணத் தொகுதியைச் சேர்ந்தது. பொதுவாக, சதுரப் பட்டகங்களாகக் காணப்படுகிறது. பழுப்பு நிறத்திலிருந்து சிவப்பு நிறம் வரை காணப்படும். மேலும் நிறமற்றும், வெளிர் மஞ்சள், பச்சை, நீலம் முதலிய நிறங்களிலும் காணப்படுகிறது. நிறமற்ற மற்றும் வெளிர் நிறமுள்ள சிர்க்கான் சிறப்பான அருமணிக்கல்லாகும். மோஸ் அளவில் கடினத்தன்மை 7.5; ஒப்படர்த்தி 4.7. <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது. ----> இது வேதி, இயற்பிய நிலைப்புத் தன்மை பெற்றுள்ளமையால், வானிலையால் ஏற்படும் மாற்றங்களைத் தடுத்துக் கழிவுப் படிவு, கடல் மற்றும் ஆற்று மணல் முதலியவற்றில் திரண்டு குவிந்து காணப்படுகிறது. இது ஃபுளோரிடா, பிரேசில், இந்தியா முதலிய நாடுகளில் காணப்படுகிறது. கிரானைட், சயனைட் அனற்பாறைகளில் துணைக் கனிமமாகப் பரவலாகச் சிறிதளவு காணப்படுகிறது. பெக்மடைட் படிவுகளில் கிரானைட், சயனைட் அனற்பாறைகளுடன் இணைந்து மிகுதியாகக் காணப்படுகிறது. வரிப் பாறை வகை (gneiss), படல உருமாற்றப் பாறை வகைகளிலும் சிறிதளவு காணப்படுகிறது. —இரா. சரசவாணி நூலோதி. P. Ramdohr. The Ore Minerals and their Intergrowths, Pergamon Press, Oxford, 1969.