இது நுழைவு அனற்பாறைகளில் (intrusive igneous rocks) உள்ளடங்கிக் காணப் படும். முன்னரே, உருவான அனற்பாறைகளின் துணுக்கு அல்லது உள் நுழைவுப் பாறைகள் வரும் வழியிலுள்ள தலப் பாறைகளின் துணுக்குகளைச் செனோலித் (zenolith) என்பர். இவற்றை உள்ளீர்க்கப்பட்ட அயல் பாறைகள் (enclave) என்றும் கூறுவர். இப்பாறைகள் மிகு வெப்பத்திலிருக்கும் உள் நுழைவுப் பாறைக் குழம்புகளில் கலக்கப் படும் போது, இத்துணுக்குகளைச் சுற்றியுள்ள பாறைக் குழம்பின் வேதித் தன்மையும், இத்துணுக்குகளின் வேதித் தன்மையும் மாறுபட்டு, இரண்டிற்கும் பொதுவான புதிய கனிமங்கள் அப்பகுதியில் உருவாகின்றன. இவ்வாறு, சிற்சில இடங்களில் நிறத்திலும், கனிமக் கூட்டுச் சேர்க்கையிலும் வேறுபட்டுக் காணப்படும் ஒரு சிறிய பாறை வளாகப் பகுதியே செனோலித் சேர்க்கையை அறிவதற்கு உதவும். செனோலித் நுழைவுப் பாறைகளான பேத்தோலித் (batholith), சில் (sill), டைக்(dyke) போன்றவற்றை எரிமலை (உமிழ்வு) வாய்ப் பகுதிகளிலும் காணலாம். இவற்றின் அறைகள் நுண்ணிய துகள்களினின்று பல நூற்றுக் கணக்கான மீட்டர் வரை நீளமுடைய பாறைத் துகள்களாக இருக்கலாம். உள்ளடக்கப் படும் அயல் பாறைகளோ, முன்னரே உருவான பாறைகளோ, ஒரே கனிமப் பண்புகளையும் ஒரே உருவாக்கத்தையும் பெற்றவையாக இருப்பின், அவற்றை மரபுச் செனோலித் (cognate zenolith) என்று கூறுவர். முதலில் பாறைக் குழம்பிலிருந்து படிகமாகும் இயல்புடைய பாறை வகைகளில் இவை காணப்படும். இப்பாறைகளுக்கு எடுத்துக் காட்டாகப் பசால்ட் பாறைகளில் காணப் படும் ஆலிவின் கனிம முடிச்சுகளைக் கூறலாம். இக்கனிம முடிச்சுகள் கூர்மையான பக்கங்களையும், உடைந்த பாறைகளின் வடிவமைப்பையும் பெற்றுக் காணப் படும். இப்பாறைகள் கிரானைட் பாறைகளில் காணப் பட்டால், அவற்றின் நிற மாற்றத்திலிருந்து வேறுபடுத்திக் காணலாம். பாறைகளில் முன்னரே படிகமான ஒரே கனிமங்கள் முக்கியமாக, லேப்ரோடோரைட், ஆகைட், ஆலிவின் ஆகியன ஒன்றோடொன்று திராட்சைக் கொத்துப் போல் அமைந்து, குளோமோரோபோர்பைரைட்டிக் என்ற நுண் இழைமையை உருவாக்கியிருப்பதும், இச்செனோலித் பாறைகளுக்கு அடையாளமாகும். கிரானைட் நுழைவுப் பாறைகளில் முன்னரே உருவான கருநிறக் கனிமங்கள் ஆங்காங்கே கொத்துக் கொத்தாகப் புதிதாக ஏனைய இடங்களை விட மிகுதியாகக் காணப் படுவதும் ஒரு சிறிய வளாகப் பகுதியில், இப்பாறைகள் கருநிறம் பெற்றுக் காணப் படுவதும் செனோலித் பாறைகள் இருந்தமைக்கு அடையாளமாகும். மேலும், நுழைவுப் பாறைகளின் குழம்புகளில் தலப் பாறைகளின் துகள்களோ, அயல் அனற்பாறை, படிவுப் பாறை (sedimentary rock), உருமாற்றப் பாறை (metamorphic rock) இவற்றின் பெருந்துகள்களாக உள்ளடக்கப்பட்டோ இருப்பின், அவற்றைத் தற்செயலாக உருவான செனோலித் எனலாம். இப்பாறைகள் சுற்றியுள்ள நுழைவுப் பாறைகளின் வேதிப் பண்பில் பெரிதும் மாறுபட்டுக் காணப்படும். இவற்றில் எளிதில் காணக் கூடிய அளவிற்குத் தொடு மாற்று உருப் பாறைகளின் (contact metamorphic rocks) பண்புகள் மிகுதியாக இருக்கும். செனோலித் பாறைகள் உட்புகுந்த பாறைக் குழம்புகளால் முற்றிலும் மாற்றப்பட்டோ, வெளி ஓரங்களின் ஒரு பகுதி மட்டும் மாற்றப்பட்டோ காணப் படலாம் செனோலித்தும் வேதிப் பண்பை இழந்து, அனற்பாறைக் குழம்பிலிருந்து கிடைக்கக் கூடிய புதிய மூலக் கூறுகளோடு சேர்ந்து இரண்டிற்கும் தொடர்பில்லாத புதிய கனிமங்களை உருவாக்கி, கலப்புப் பாறைகளையே (hybrid rock) உருவாக்கலாம். இம்மாற்றங்களில் முக்கியமான கனிம உருளை அமைப்பும் (orbicular structure) ஒன்றாகும். இதில் ஒரு செனோலித் துகளைச் சுற்றி, வெளிப்புறம் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படும். பிளவுகளினிடையே புதிய மறு படிகக் கனிமங்களும் காணப் படும். எடுத்துக் காட்டாக, ஒரு டையோரைட் செனோலித் பாறையில் உட்கரு (core) டையோரைட்டாகவே இருக்க, அதைச் சுற்றி பைடவ்னைட் ஃபெல்ஸ்பார் (bytownite feldspar) சுனிமங்களால் நிறைந்த வளையமும், பைராக்சின் ஹார்ன் பிளெண்டு (Hornblende) கனிமங்கள் நிறைந்த வளையமும் மாறி, மாறிக் காணப்படும். செனோலித் பாறைகள் அவற்றின் பண்பிற்கு ஏற்பவும், அவற்றை ஈர்த்துக் கொண்ட பாறைக் குழம்புகள் வெப்ப அழுத்த நிலைகளுக்கும், அவற்றின் வேதிப் பண்புகளுக்கும் ஏற்றவாறும், உண்மை நிலையில் மாறுபட்டுப் புதிய தனிமங்களை உருவாக்குவதோடல்லாமல், பல வகையான புதிய நுண்ணிய அமைப்பையும் உருவாக்கிச் சுற்றியுள்ள பாறைகளுடன் மாறுபட்டுக் காணப் பட- லாம். இவற்றின் அடிப்படையைக் கொண்டே பாறைக் குழம்புகள் படிகமாகும் முறைகளில் ஒன்றாகிய தன்வயப்படுத்தல் முறை (assimilation) ஆய்வுசெய்யப் படுகிறது. —ஞா. விக்டர் இராஜமாணிக்கம் நூலோதி. W.A. Deer, et.al, An Introduction to Rock Forming Minerals, Longmans Publications, London, 1966.