அயர்லாந்திலுள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பகுதி. வட அயர்லாந்தும், தானிகால் (Denegal), கவான், மொனகான் என்னும் பகுதிகளும் இதில் அடங்கியிருந்தன. கி.பி. 1175–ஆம் ஆண்டு ஆங்கிலேயர் இப்பகுதியின்மீது படையெடுத்தனர். இருப்பினும் இங்கிருந்த ‘ஓ’ நீலிசு (‘O’ Neills) ‘ஓ’ தோனல்சு என்ற இனத்தினர் அப்படையெடுப்பை வெற்றியுறத் தடுத்து நிறுத்தி விட்டனர். பலமுறை படையெடுத்தும் எவ்விதப் பாதிப்பையும் அல்சுடர் (Ulster) அடையவில்லை. கி.பி. 16–ஆம் நூற்றாண்டில் இசுகாட்லாந்தினர் அயர்லாந்துப் பகுதியில் வந்து குடியேறத் தலைப்பட்டனர். 1922–இல் அல்சுடரிலிருந்து ஆறு பகுதிகள், அயர் சுதந்தர அரசுடன் (Irish Free State) சேர மறுத்தன. இவை இங்கிலாந்துடன் நட்புறவு கொண்டு வட அயர்லாந்து என்ற பெயருடன் விளங்கி வருகின்றன. அயர்லாந்துடன் தானிகால், கவான், மொனகான் என்னும் பகுதிகள் இணைந்தன. இவையே அல்சுடர் என்று இக்காலத்தில் அழைக்கப்படுகின்றன. இதன் மக்கள் தொகை 2,30,159 ஆகும். தியூடர் (Tudors) மன்னர்கள் காலத்திலும் கிராம் வெல்லின் ஆட்சிக் காலத்திலும் புராட்டசுடண்டு சமயத்தைச் சேர்ந்த ஆங்கிலேயர்கள் அல்சுடரில் வந்து மிகுதியாகக் குடியேறினர். ஆகையால் தான், அவர்கள் ஆங்கில அரசுடன் எப்போதும் நல்லுறவு கொண்டுள்ளனர். அயர்லாந்தின் ஏனைய பகுதிகளில் எல்லாம் கத்தோலிக்கச் சமயத்தவர்களே வாழ்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து அல்சுடர் மக்கள் செயற்படுவதிள்லை. எனவே, தன்னாட்சி பெற்றுள்ள கத்தோலிக்கர்களுக்கும் இங்கிலாந்து இராணியாரை ஏற்றுக் கொள்ளும் அல்சுடர் புராட்டசுடண்டுகளுக்கும் ஓயாது போராட்டம் நடைபெற்று வருகிறது. பிரிட்டிசு அரசு புராட்டசுடெண்டுகளுக்கு உதவி செய்கிறது. ஆனால், தன்னாட்சி வழங்க மறுக்கிறது.