சைவப் பெரும் புலவராகிய சிதம்பரம் – கண்கட்டி மறைஞான சம்பந்தர் இயற்றியது ஆகும். அருணகிரி என்பது திருவண்ணாமலை. இந்நூல் 613 செய்யுள்கள் உடையது. இதன் கண் பாயிரமுட்பட எட்டுச் சருக்கங்கள் உள்ளன. பாயிரப் பகுதி 35 பாடல் கொண்டது. விநாயகர் காப்பாக மூன்று பாடல்கள் உள்ளன. மலையாகிய அண்ணாமலையாரையும் பராசக்தியையும், ஆலயத்துள்ளிருக்கும் அண்ணாமலையாரையும் உண்ணாமுலையம்மையையும் தனித்தனியே போற்றியுள்ளார். இவர்களை- யன்றித் தனியே சபாநாதர், அண்ணாமலை நாதர், அதிகார நந்தி, நந்தி, மாகாளர், இடபதேவர் ஆகியோர்க்கு வணக்கமும் முனிவர்க்கு வணக்கமும் கூறப்பட்டுள்ளன. காரைக்காலம்மையார், நால்வர், திருமாளிகைத் தேவர், மெய்கண்டார் ஆகியோருக்கும் வணக்கம் கூறியுள்ளார். நூல் முழுதும் சந்தப் பாடல்களும், பக்திச் சுவையும் நிரம்பிக் காணப்படுகின்றன. பாடல்கள் எளிமையும் இனிமையும் பொருந்திய சொற்களால் அமைந்துள்ளன. அருணகிரிப்புராணம் என்னும் பெயரில் புராணத் திருமலைநாதர் ஒரு நூல் எழுதினார் எனவும், அது இப்பொழுது கிடைக்கவில்லை எனவும் கூறுகின்றனர்.ரா.கி.