சிவஞான முனிவரின் மாணவர்; திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் பாடியவர்; சீர்காழி ஆலயப் பொறுப்பில் இருந்தவர். இவரோடு கல்வி கற்ற பெரியவர் தில்லையாடி அருணாசலக் கவிராயர். அவர்பால் முனிவர் மிகுந்த மதிப்பும் நட்பும் கொண்டிருந்தார். ஒரு முறை வணிகத்தின் பொருட்டுக் கவிஞர் சீர்காழிக்கு வந்தபோது, கட்டளை விசாரணையில் சுவாமிகள் இருந்தலை அறிந்து களிப்படைந்தார். சீர்காழி மீது ஒரு பள்ளுப் பிரபந்தம் பாடத் தொடங்கி முடிவுறாதிருக்கிறது; அதனை முடித்துத் தரவேண்டும் என்று முனிவர் கவிராயரிடம் கேட்டதாகத் தெரிகிறது. அதனால் முனிவரும் புலமையுடையவர் எனலாம். கவிராயர் நண்பர் விரும்பியவாறே பிரபந்தம் பாடி முடித்தார். அதனை ஒருவரிடம் கொடுத்தனுப்பிவிட்டு வெளியூர் சென்று விட்டார். கவிராயரை எவ்வாறேனும் தம்முடன் தங்கவைக்க வேண்டும் என்று முனிவர் விரும்பினார். சீர்காழியில் ஒரு வீடு தேர்ந்து, கவிராயரின் குடும்பத்தை வரவழைத்து அதிற்குடியமர்த்தினார். வெளியூர் சென்று வந்த கவிராயர் தம் குடும்பம் சீர்காழியில் இருப்பதை அறிந்து வியந்தார். அந்த அளவிற்குக் தனிப்பற்றும் பேரன்பும் கொண்டு நிகழ்ந்தவர் சிதம்பரநாத முனிவர். முனிவர் விரும்பியவாறே காழிப்பள்ளு, காழியந்தாதி, காழிப்புராணம் போன்ற நூல்கள் உருவாயின. இராமாயணக் கீர்த்தனை முனிவர் ஆதரவில் தோன்றியதா அன்றா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும் கி.பி. 1712–முதல் 1779 வரை வாழ்ந்த அருணாசலக் கவிராயரின் அன்புக்குரிய நண்பர் இவர் என்று தெளிவாகக் கூறலாம். தே.ஆ.