அதிவீரராமபாண்டியன்
ativīrarāmapāṇṭiyaṉ
விசயநகர வேந்தர் காலத்து வாழ்ந்த பாண்டிய அரசத் தலைமுறையினைச் சேர்ந்த மன்னர்.
விசயநகர வேந்தர் காலத்து வாழ்ந்த பாண்டிய அரசத் தலைமுறையினைச் சேர்ந்த மன்னர். இவர் கி.பி. 1564–1603 ஆகிய ஆண்டுகளில், தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். இவர், நாட்டுக் காவலராக மட்டுமல்லாமல், ஏட்டுப் பாவலராகவும் சிறந்து விளங்கினார்.
சில வரலாற்றறிஞர் இவரைத் திருநெல்வேலிப் பெருமாள் புதல்வர் என்று கூறுவர். எனினும் இவர் திருநெல்வேலிப் பெருமாளின் ஏற்பு மகனும், வரதுங்கராமரின் இளவலும், பராக்கிரம பாண்டியனின் மூன்றாம் புதல்வருமாவார் என்று சிலர் முடிவு செய்து தெளிவுபடுத்தியுள்ளனர். இவர் இயற்பெயர் அதிவீர ராமன்; சடையவர்மன் என்ற பட்டப் பெயருடையார்; தமிழ்ப் புலமையும் வடமொழிப் புலமையும் மிகவுடையவர்.
இவர் பல நூல்களை எழுதியுள்ளார். அவை:- 1. நைடதம் 2. காசிகாண்டம், 3. கூர்மபுராணம் 4. கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி 5. கருவை வெண்பா அந்தாதி 6. கருவைக் கலித்துறையந்தாதி 7. வெற்றிவேற்கை என்னும் நறுந்தொகை.
1. நைடதம்
மகாபாரதத்தில் முதலாவதாக நளன் கதை இடம் பெற்றுள்ளது. ஈதன்றி நளோதயம் என்னும் ஒரு நூலும் வடமொழியில் வழங்குகிறது. புரவலனும் புலவனுமாக விளங்கிய அரசர், வடமொழியில் நைடதத்தைச் சிறப்புற எழுதியுள்ளார். தமிழில் புகழேந்தி, வெண்பா யாப்பில் நளன் வரலாற்றை எழுதியுள்ளார். வடமொழி, தமிழ் நூல்களை எல்லாம் அடியொற்றி எழுதப்பட்ட நூலே நைடதம் ஆகும். இந்நூல் நாட்டுப்படலம் தொடங்கி அரசாட்சிப் படலம் என்னும் இருபத்தெட்டாவது படலத்துடன் நிறைவுறுகிறது. 1173 விருத்தச் செய்யுட்களால் இந்நூல் அமைந்துள்ளது. புலவர் பலரும் போற்றி வந்த சிறந்த நூல் என்பதால், “நைடதம் புலவர்க்கு ஒளடதம்” என்னும் பழமொழியும் தோன்றுவதாயிற்று.
நூலின் நடை, வேட்டை நாய் நடைபோலிருக்கிறதென்றும் நூலின் சுவை கரும்பினை அடியிலிருந்து தொடங்கி நுனிவரை தின்பது போல், போகப் போகச் சுவை குறைகிறது என்றும் இவர்தம் அண்ணியாரால் குறைகூறப்பட்டது என்பர். இக்குறையைக் களையவே காசிகாண்டம் இயற்றப்பெற்றது.
2. காசிகாண்டம்
காசி நகரப் பெருமையைப் பறைசாற்றும் நூல். பூர்வகாண்டம், உத்தரகாண்டம் என்னும் இரு பெரும் பிரிவினது; 100 அத்தியாயங்களை உடையது; 2526 விருத்தங்களால் இயன்றது; வடமொழி நூலிலிருந்து மொழிபெயர்க்கப் பெற்றது.
3. கூர்மபுராணம்
வடமொழியில் உள்ள பதினெண் புராணங்களுள் ஒன்றான கூர்ம புராணத்தின் மொழிபெயர்ப்பு. உத்தரகாண்டம், பூர்வகாண்டம் என்னும் இரு பெரும் பிரிவு கொண்டது. இதன்கண் 97 அத்தியாயங்களும் 3717 விருத்தங்களும் உள்ளன. இது, சைவ வைணவத் தெய்வங்கள் பற்றியும் சிவ பூசை மரபுகள் பற்றியும் விளக்குவது.
4. அந்தாதி நூல்கள்
கரிவலம் வந்த நல்லூர் என்பது புகழ் பெற்ற ஊராகும். இங்குள்ள சிவன் கோயில் பாடல் பெற்றது. இவ்வூர்ப் பெயரே கருவை என மருவி வழங்குகிறது. கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, கருவை வெண்பா அந்தாதி, கருவைக் கலித்துறை அந்தாதி என மூன்று அந்தாதி நூல்களும், அதிவீரராம பாண்டியரால் இயற்றப் பெற்றன. எளிய பாடல்களைக் கொண்ட இந்நூல்கள், சிவநெறி பற்றிச் சாற்றுபவை ஆகும். திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி, ‘குட்டித் திருவாசகம்’ எனப் புகழப்படுகிறது.
5. வெற்றிவேற்கை
எளிய தமிழில் எழுதப்பட்ட இந்த அறநூலில் எண்பத்திரண்டு அறமொழிகள் இடம் பெற்றுள்ளன. ‘எழுத்தறிவித்தவன் இறைவன்’, ‘பெரியோரெல்லாம் பெரியரும் அல்லர்’, ‘பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால் மெய்போலும்மே மெய்போலும்மே’ என்பன போன்ற மரபு மீறிய சிந்தனைகள் சிலவற்றை அதிவீரராம பாண்டியர் சிந்தித்து, அவற்றை எளிமையான மொழியில், இனிமையான முறையில் இதன்கண் வெளியிட்டுள்ளார்.க.ப.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 365)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qavtvv73/
தமிழ்“அதிவீரராமபாண்டியன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qavtvv73/APA
Oliyon Research. (2026). அதிவீரராமபாண்டியன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qavtvv73/MLA
"அதிவீரராமபாண்டியன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/qavtvv73/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment