சால்காந்தைட்
cālkāntaiṭ
இது ஒரு சல்ஃபேட் கனிமம். இது நீர் கலந்த தாமிர சல்பேட் (CuSO 5H₂O) ஆகும்.
இது ஒரு சல்ஃபேட் கனிமம். இது நீர் கலந்த தாமிர சல்பேட் (CuSO 5H₂O) ஆகும். சால்காந்தைட் (chalcanthite) முச்சரிவுத் தொகுதியைச் சேர்ந்தது. இதில் பக்க வாட்ட படிக அச்சு நீளமாக இருக்கும் இதன் படிக அச்சுகளின் நீளம் a:b:c = 0.5656: 1 : 0.5507 என்ற விகிதத்தில் இருக்கும். இதன் படிக அச்சுகளுக்கு இடையேயான கோணங்கள் α = 82°21′; β= 73°11'; γ= 77°37′ ஆக உள்ளன.
சால்காந்தைட் பெரும்பாலும் படிகங்களாகக் கிடைக்கிறது. இதன் படிகங்கள் பட்டகக் கூம்பின் முகத்திற்கு (111) இணையாகவும், தட்டையாகவும் இருக்கின்றன. சால்காந்தைட் திண்மங்களாகவும், கல் விழுதுகளாகவும், முந்திரி வடிவமாகவும் இருக்கும். சில சமயங்களில் இழைகளாகவும் காணப்படும். சால்காந்தைட்டில் (110), (110), (111) முகங்களுக்கு இணையாகத் தெளிவற்ற கனிமப் பிளவுகள் காணப்படும். இது வளைமுறிவும், கண்ணாடி மிளிர்வும் உடையது. இதன் கடினத் தன்மை 2.5; ஒப்படர்த்தி 2.12—2.30. சால்காந்தைட் பல வகையான நீல நிறங்களை உடையது. சில சமயங்களில் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதன் கீற்று நிறமற்றது. இது நொறுங்கக் கூடியது. ஒளி, கசியும் அல்லது புகும் தன்மையுடையது. இக்கனிமம் அருவெறுப்பான உலோகச் சுவை உடையது. இது நீரில் கரையும்.
சால்காந்தைட் இரண்டு ஒளி அச்சுகளை உடைய கனிமம். இதன் ஒளி அச்சுகளுக்கு இடையேயுள்ள கோணம் (2 V)=56° ஆகும். இது எதிர்மறை ஒளிக் குறி உடையது. இக்கனிமத்தின் ஒளி விலகல் எண்கள் α = 1.516; β = 1.539; γ = 1.546 ஆகும்.
செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சால்காந்தைட்டில் தாமிரத்துடன் இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம், கோபால்ட் ஆகியவையும் இருக்கும். சால்காந்தைட், சால்கோபைரைட் முதலிய தாமிர சல்ஃபேட்டுக் கனிமங்கள் ஆக்சிஜனேற்றம் அடைவதால் உண்டாகிறது. சுரங்கங்களிலிருந்து வெளியாகும் நீரிலிருந்து படிவுகளாக இது வெளியேறுகிறது. தாமிரப் படிவுகள் உள்ள இடங்களில் ஆக்சைடு தாரைகளில் இது காணப்படுகிறது.
சால்காந்தைட் செக்கஸ்லோவேக்கியா, ஸ்பெயின், கார்ன்வால், பொலிவியா, அமெரிக்கா ஆகிய இடங்களில் கிடைக்கிறது. சிலியிலுள்ள பாலைவனப் பகுதிகளில் சால்காந்தைட் பெருமளவில் கிடைக்கிறது. தாமிரத்தோடு, துத்தநாகமும், இரும்பும் உள்ள நீர் கலந்த சல்ஃபேட் [(Zn, Cu, Fe) SO, 5HO] கனிமம் துத்தநாக தாமிர சால்காந்தைட் எனப்படும். இக்கனிமம் வெளிறிய நீல நிறமுடையது. எதிர் மறை ஒளிக் குறி உடையது. இதன் ஒளிவிலகல் எண்கள் சால்காந்தைட்டின் ஒளி விலகல் எண்களை விடச் சற்றே குறைவாக இருக்கும். —இல. வைத்திலிங்கம் நூலோதி. L.G. Berry and B. Mason, Mineralogy, W.H. Freeman & Co., Sanfrancisco, 1961.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 132)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/q7w6x847/
தமிழ்“சால்காந்தைட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q7w6x847/APA
Oliyon Research. (2026). சால்காந்தைட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/q7w6x847/MLA
"சால்காந்தைட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/q7w6x847/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment