<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> வானக் கோளமும், புவிக் கோளப் பாதையின் தளமும் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் பெருவட்டம் சூரியப் பாதை (ecliptic) எனப்படும். சூரியன் ஓராண்டில் வான கோளத்தில் சுழலும் தோற்றப் பாதை (apparant path) எனவும் கூறலாம். சூரியப் பாதையும், வான நடு வரையும் ஒன்றுக்கொன்று ஏறக் குறைய 23°27' கோண அளவில் வெட்டிக் கொள்கின்றன. புவி, தன் அச்சுடன் உண்டாக்கும் சாய் நிலைக் கோணத்திற்கு இது சமமாகும். இக்கோணம் ω, சூரியனின் தோற்றப் பாதையின் சரிவு (obliquity of the ecliptic) எனப்படும். வான கோள ஆயங்களின் ஒரு பகுதியான வான அகலாங்கு (celestial latitude), வான நெட்டாங்கு (celestial longitue) ஆகியன சூரியப் பாதைத் தளத்திலிருந்தே அளக்கப் படுகின்றன. வான நடு வரையும் சூரியப் பாதையும் வெட்டிக் கொள்ளும் கணுக்கள் (nodes), சம இரவுப் புள்ளிகள் (equinoctial points) எனப்படும். சூரியன் தெற்கிலிருந்து வடக்கே செல்லும் போது, நடு வரையை வெட்டும் புள்ளி மேடமுதற் புள்ளி ‘r’ (first point of Aries) என்றும், வடக்கிலிருந்து தெற்கே செல்லும் போது, வெட்டும் புள்ளி இலையுதிர்புள்ளி (first point of libra) என்றும் குறிக்கப்படுகின்றன. சூரியன், மேட முதற் புள்ளியை மார்ச் திங்கள் 21 ஆம் நாளும், இலையுதிர் புள்ளியைச் செப்டம்பர் திங்கள் 23 ஆம் நாளும் கடக்கும். அயன சலன (precession) மாற்றத்தால், ஆண்டிற்கு r உம் \approx= உம் பின்னோக்கி நகருவதால், r இப்போது மீன ராசியில் உள்ளது. இவ்வாறே, சூரியப் பாதை வான கோளத்தை வெட்டும் புள்ளிகள் சூரியத் திருப்ப நிலைப் புள்ளிகள் (solstitial points) எனப்படும். சூரியன் வட கோளத்தில் மார்ச் 21 ஆம் நாள் முதல் செப்டம்பர் 23 ஆம் நாள் வரை இருக்கும். அப்போது ஜுன் 22 ஆம் நாள், சூரியன் மிக உச்ச நிலையான வான கோளத்தை அடைந்து, மீண்டும் திரும்பும். இந்தப் புள்ளி, கோடைத் திருப்ப நிலைப் புள்ளி (summer solstice) என்று குறிப்பிடப்படும். செப்டம்பர் 23 ஆம் நாள் முதல் மார்ச் 21 ஆம் நாள் வரை சூரியன் தென் கோளத்தில் இருக்கும். டிசம்பர் 22 ஆம் நாள் வான கோளத்தை அடைந்து, திரும்பும் இப்புள்ளிக்கு மாரித் திருப்ப நிலைப் புள்ளி (winter solstice) எனப் பெயர். சூரியப் பாதை மேல் சம இரவுப் புள்ளிகள், திருப்பு நிலைப் புள்ளிகள் என நான்கு புள்ளிகள் உள்ளன. —பங்கஜம் கணேசன்