சோழர் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய தலங்களுள் ஒன்று. இது திருச்சியிலிருந்து தோகமலை செல்லும் சாலையில் திருச்சியிலிருந்து 4.8 கி.மீ. தொலைவில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. இதன் கீழ்புறம் உய்யக்கொண்டான் ஆறு (குடமுருட்டி, வைரமேகன் வாய்க்கால்) ஓடுகின்றது. ‘உய்யக்கொண்டான்’ என்பது முதலாம் இராசராச சோழனின் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. எனவே ஊரும் ஆறும் இராசராச சோழனின் பெயரால் அமைந்தன என்பது புலனாகும். உய்யக் கொண்டான் திருமலை, நந்திவர்ம மங்கலம், திருக்கற்குடி, இராசாசிரய சதுர்வேதி மங்கலம் என்னும் பெயர்களாலும் குறிக்கப்பட்டது என்பதனைக் கல்வெட்டுகளால் அறியலாம். சிவன் கோயில் உய்யக்கொண்டான் திருமலை பல்லவர் காலத்திலிருந்தே புகழ்பெற ஆரம்பித்தது. இவ்வூரில் உள்ள சிவன் கோயிலின் காரணமாகவே உய்யக்கொண்டான் திருமலை வரலாற்றில் புகழ் பெற்றது. இங்குள்ள சிவன் கோயில் ஏறத்தாழ 50 அடி உயரமுள்ள பாறையின்மீது அழகாகக் கட்டப்பட்டுள்ளது. இறைவர் உச்சீவநாதசாமி என்று அழைக்கப்பெறுகிறார். இவ்விறைவர் கற்பகநாதர், முத்தீசர், உய்யக்கொண்ட நாயனார், விழுமியார், ஆள்வார், விழுமியதேவர், விழுமியநாயனார் முதலான பெயர்களால் அழைக்கப்படுகிறார். முதலாம் பராந்தக சோழனின் பத்தாமாட்சியாண்டுக் கல்வெட்டு இவ்விறைவரை, ‘காவிரியின் தென்கரையிலமைந்த பிரமதேயமான நந்திவர்ம மங்கலத்துத் திருக்கற்குடிப் பரமேசுவரர்’ என்று குறிக்கின்றது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவி அஞ்சனாட்சி என அழைக்கப்பெறுகிறாள். மைதீட்டப்பட்ட கண்களை உடைமையால் அம்மன், ‘அஞ்சனாட்சியம்மை’ என்னும் பெயர் பெற்றாள். இங்கு இரு அம்மன் சந்நிதிகள் உள்ளன. இவை இரண்டுமே அஞ்சனாட்சியம்மைக்கு எடுக்கப்பட்டவையே. பழைய அம்மன் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. புதிய அம்மன் சந்நிதி கிழக்கு நோக்கியுள்ளது. இரண்டு அம்மன்களுக்கும் நாள்ழிபாடு நடந்து வருகிறது. உய்யக்கொண்டான் மலை, உய்யக்கொண்டீசுவரம் என்னும் பெயர்களால் அழைக்கப்பெறும். இத்தலம் அமைந்துள்ள பகுதி கல்வெட்டுகளில் மிகவும் போற்றப்பட்டுள்ளது. கோயிலை அடுத்து வட்டமான மதிலும் வெளியே சதுரமான பெரிய மதிலும் உள்ளன. இங்குள்ள வெளிப்புறமதில் ஆறு அடி கனத்தில் கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோயிலில் சுவாமி, அம்மன் பிரகாரங்களைச் சேர்த்துத் திருவீதி உட்பட ஐந்து பிரகாரங்கள் உள்ளன. இத்திருக்கோயிலில் தெற்கு நோக்கி இரண்டும், கிழக்கு நோக்கி ஒன்றுமாக மொத்தம் மூன்று வாயில்கள் இருக்கின்றன. அவற்றுள் இரண்டுக்குக் கோபுரமில்லை. வட்டமதிலின் வாயிலுக்கு மட்டும் ஒரு சிறிய கோபுரம் உள்ளது. இத்திருக்கோயிலைச் சேர்ந்தனவாக ஐந்து தீர்த்தங்கள் உள்ளன. அவை பொன்னொளி ஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோணக் கிணறு, நாற்கோணக் கிணறு என்பனவாகும். இக்கோயிலுக்கு வெளியே ஆளுடையார் கோயிலும், இரண்டாம் பிரகாரத்தில் வடகிழக்கில் இடர் தீர்த்தவர் கோயிலும், கோயிலுக்குத் தெற்கே முத்திதீர்த்தக் கரையில் சண்முகர் கோயிலும் சுற்றுக் கோயில்களாக அமைந்துள்ளன. பாடல் பெற்ற தலம் சைவ சமய நாயன்மார்களான திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோர் இக்கற்குடிப் பெரு- மானைப் பாடிப் பரவியுள்ளனர். கற்குடியைக், ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன்’ என்பது திருத்தாண்டகம். அருணகிரிநாதரும் தமது திருப்புகழில் கற்குடி முருகப் பெருமானைப் பாடியுள்ளார். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இத்திருத்தலப் பெருமையைக் ‘கற்குடி மாமலை மாலை’ என்னும் நாலில் 100 தோத்திரப் பாக்களால் போற்றிப் புகழ்ந்துள்ளார். படைத்தலம் கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், மைசூர் அரசர் ஆகியோர் இடையே நடைபெற்ற போர்களில், இக்கோயிலில் உள்ள வலிமைமிக்க மதில்களுக்குள் போர் வீரர்கள் பாதுகாப்பாகத் தங்கியிருந்து போர்புரிந்துள்ளனர். இதனால் இது ஓர் போர்ப்பாசறையாகவும் பயன்பட்டமை புலனாகும். மாலிக்காபூர் கி.பி. 1310–இல் உய்யக்கொண்டான் மலையைச் சூறையாடினான். கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் அறுபதுக்கும் மேற்பட்ட பிற்காலச் சோழர், பிற்காலப் பாண்டியர், விசயநகர வேந்தர் ஆகிய அரச குலத்தவரின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இத்திருக்கோயிலுக்கு அதிக அளவில் அறக்கொடைகள் அளித்த பெருமை கண்டராதித்த சோழனின் அரசியாரான செம்பியன் மாதேவியாரைச் சாரும். இவ்வம்மையார் பல நிலதானங்களும் பொன்தானங்களும் அளித்துள்ள போதிலும், திருக்கற்குடி இறைவர்க்கு விலையுயர்ந்த மகுடம் ஒன்று அளித்துள்ளமை பாராட்டத்தக்கது. இம்மணி முடியில் 149 கழஞ்சுப் பொன்னும், 190 கழஞ்சு வெள்ளியும், 700 முத்துக்களும், 3 இரத்தினங்களும், 27 வைரங்களும் இருந்தன. இதனை முதலாம் இராசராசனுடைய பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டால் அறியலாம். ம.இரா.த.