மதுரை–திருநெல்வேலிச் சாலையில் மதுரையிலிருந்து 48 கி.மீ. தொலைவிலும், விருதுநகரிலிருந்து மேற்கே 19.2 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள ஊராகும். முன்பு இராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த இந்நகரம் இப்போது காமராசர் மாவட்டத்தில் உள்ள ஒரு வட்டத் தலைநகர் ஆகும். இது ஒரு நகராட்சி. அருப்புக்கோட்டை முன்பு வெண்பில் நாட்டைச் சேர்ந்த ‘செங்கத்துருக்கை இடத்துவழி’ என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளது. திருநல்லூர் எனவும் முன்பு அழைக்கப்பட்டது. இடத்துவழி என்னும் பெயர் கி.பி. 17–ஆம் நூற்றாண்டில் அருப்புக் கோட்டை என மாற்றப்பட்டது. இங்கு மல்லிகை அரும்புகள் மிகுதியாக விளைந்தமையால் இவ்வூர் அரும்புக் கோட்டை எனப் பெயர் பெற்றுப் பின்னர் அருப்புக்கோட்டை எனத் திரிந்தது எனவும் கூறுவர். இங்குக் கைத்தறி நெசவு சிறப்பிடம் பெற்றுள்ளது. இங்கிருந்து வேட்டி, துண்டு, கைத்தறிச்சேலை, பட்டுச்சேலை, விரிப்பு ஆகியன பல பகுதிகளுக்கும் ஏற்றுமதி ஆகின்றன. சாயத் தொழிற்சாலைகள், எண்ணெய் ஆலைகள், பஞ்சாலைகள், அரிசி ஆலைகள், தீக்குச்சித் தொழிற்சாலைகள் முதலிய பல தொழிற்சாலைகள் இங்குள்ளன. அருப்புக்கோட்டை, பாண்டியர் ஆட்சிக் காலத்திலும், மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்திலும் சிறப்புப் பெற்றது. கி.பி. 1193–இல் ‘திருவாலவாயுடையான் சோழகங்கன்’ என்பானின் ‘அருளாள அழகப் பெருமாள்’ என்பார் இவ்வூரிலுள்ள ஏரியை வெட்டுவித்தார். இங்குக் கி.பி. 1232–இல் கிணறு ஒன்றும் வெட்டப்பட்டது. மதுரை நாயக்க மரபினரான வீரப்ப நாயக்கர் (கி.பி. 1572–1598) இவ்வூர்க் கோட்டையைக் கட்டினார் என்பது கூறப்படுகிறது. இங்குப் பழைமையான ‘சுந்தரேசுவரர் கோயில்’ என்னும் சிவன்கோயிலும், மாரியம்மன் கோயிலும், ஆயிரம் கண் மாரியம்மன் கோயிலும், வெங்கடேசப் பெருமாள் கோயிலும், மாதாகோயில் ஒன்றும், மசூதிகள் இரண்டும் உள்ளன. இவ்வூருக்கு வெளியே தென் மேற்கில் சிறிய குன்றில் மலையரசன் கோயிலும் உள்ளது. அருப்புக்கோட்டை சுந்தரேசுவரர் கோயில் பழங்காலத்தில் ‘குரல்மானீசுவரம் உடையார்கோயில்’ என அழைக்கப்பட்டது. சுந்தரேசுவர் கோயில் மாறவர்மன் சுந்தர பாண்டியனால் கட்டப்பட்டது. இக்கோயிலில் கல்வெட்டுகள் பல உள்ளன. அருப்புக் கோட்டையில் எழுந்தருளியுள்ள ‘வாழவந்த அம்மன்’ கி.பி. 17–ஆம் நூற்றாண்டு முதல் புகழ் பெற்றுள்ளது. அமுதலிங்கேசுவரரும் அமுதவல்லியம்மையாரும் எழுந்தருளியுள்ள சிவன் கோயில் ஒன்றும் இங்குள்ளது.