பொதுவாக, வெளிப்படும் சிறுநீரில் குளூக்கோஸ் (சர்க்கரை) இராது. நோய் நிலைகளின் போது, சிறு- நீரில் குளூக்கோஸ் வெளிப்பட்டால், அதைச் சிறுநீரில் சர்க்கரை (glycosuria) என்பர். கிரேக்க மொழியில் கிளைகிஸ் என்றால் இனிப்பான என்று பொருள். இதன் நிலை பல வகைப்படும். செரிமானச் சிறுநீர்ச் சர்க்கரை. செரிமானப் பாதையில் குளூக்கோஸ் மிகையாக உறிஞ்சப்பட்டால், அதைச் செரிமானத்தின் போது, சிறுநீரில் சர்க்கரை எனலாம். குருதிக் குளூக்கோசின் அளவு ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி விட்டால், சிறுநீரகம் குளூக்கோசைச் சிறுநீரில் வெளியேற்றி விடுகிறது. இதையே சிறுநீரக அடி எல்லை (renal threshold) என்பர். செரிமானத்தின் போது, குளூக்கோஸ் மிகையாக உறிஞ்சப்பட்டால், அடி எல்லையின் அளவை விட மிகுந்து, சிறுநீரில் குளூக்கோஸ் வெளிப்படுகிறது. சுகாதாரமான மக்களிடையே அறிகுறி எதுவுமின்றி, ஓரளவான இரைப்பை அறுவைக்குப் பின் தைராய்டு மிகையாகப் பணி புரியும் போதும், ஈரல் நோயின் போதும், சிறுநீரில் சர்க்கரை ஏற்படலாம். இந்நிலைகள் தீங்கற்றவை. இதற்கும், நீரிழிவு நோய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சிறுநீரில் சர்க்கரை காணப்பட்டாலும், குருதிக் குளூக்கோசின் அளவு இயல்பான நிலையில் உள்ளது. இந்நோய் நிலை, சூல் காலத்தில் பெண்களிடம் தோன்றுகிறது. இது ஒரு தீங்கற்ற நிலையாகும். மேலும், மிகவும் முக்கியமான, உடனடியாக மருத்துவம் அளிக்க வேண்டிய சிக்கல்கள் நிறைந்தது சிறுநீர்ச் சர்க்கரை நோயாகும். இங்கு, சிறு நீரில் மட்டுமன்றி, குருதியிலும் குளூக்கோஸ் மிகையாகக் காணப்படுகிறது. அடிக்கடி மிகையாகச் சிறுநீர் பிரிதல், மிகையான தாகம், மிகுதியான பசி போன்ற அறிகுறிகள் காணப்படுகின்றன. இந்நோய் நிலைக்குரிய நீண்ட கால மருத்துவம் அளிக்கப்படாவிடில், கண்கள், நரம்பு மண்டலம், சிறுநீரகங்கள், இதயம் ஆகியவை பாதிக்கப்படலாம். <!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் கடைசியில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> மேற்கூறிய நிலைகளைத் தவிர, பின் வரும் நிலைகளிலும் சிறுநீரில் சர்க்கரை வெளிப்படுகிறது. உணர்ச்சி வய நிலை, பெருமூளைக்கு ஏற்படும் காயங்கள், அட்ரினலின் ஊசி போட்ட பின்பும், கொழுத்த உடல் நிலையின் போதும் உள்ள நிலை, குருதியின் இயல்பளவு 1.8—2.4 மி.கி./டெ.லி. கணைய நோய், பிட்யூட்டரியின் சுரப்பு அதிகரிப்பு, நச்சுப் பொருள்களின் விளைவு போன்றன. இவற்றில் நீரிழிவு நோயின் போது, சிறுநீரில் வெளிப்படும் குளூக்கோசே குறிப்பிடத்தக்கதாகும். குளூக்கோசைத் தவிர, பென்டோஸ், ஃபிரக்ட்டோஸ், கேலக்ட்டோஸ் போன்ற பொருள்களும் சிறுநீரில் வெளிப்பட்டுச் சிறுநீரில் சர்க்கரை போன்ற நிலையைத் தோற்றுவிக்கலாம். —அ, கதிரேசன் நூலோதி.J.V. Dacie, et. al., Practical Haematology, Sixth Edition, Churchill Livingstone, Edinburg, 1984.