மனித எண்ணங்களுள் சில உடன் பிறந்தவையாகவும், சில நுகர்வினால் அறியப்படுபவையாகவும், மேலும் சில புதியனவாகக் கண்டுபிடிக்கப்பட்டவையாகவும் இருக்கின்றன. உடன் பிறந்த எண்ணங்களை இக்கால மெய்ப்பொருளியலில் அறிவைத் தோற்றுவாயாகவும் குறிக்கோளாகவும் கொண்டுள்ள அறிவு முதற் கொள்கையினரான தேக்கார்டு, இசுபினோசா இலைப்னிட்சு ஆகியோர் தம் அடிப்படைக் கூறுகளில் ஒன்றாகக் கருதுகின்றனர். இவர்களின் கருத்துப்படி உடன் பிறந்த எண்ணங்கள் அல்லது புலன் வழி எழாத எண்ணங்கள் அல்லது இயல்பாயமைந்த எண்ணங்கள் என்பது உள்ளுணர்வின் மூலம் உறுதியாகவும் நுட்பமாகவும் தீர்மானிக்கப்பட்டுத் தெளிவுடனும் தனித்தன்மையுடனும் உள்ளத்தில் நனவு நிலையில் எழும் எண்ணங்களாகும். இவ்வாறு மறுக்கவும் எதிர்க்கவும் முடியாத தெளிவுடனும் தனித்தன்மையுடனும் உள்ளத்தில் எழும் உடன்பிறந்த எண்ணங்களே உண்மையான அறிவு என்பது அறிவு முதற்கொள்கையினர் கருத்தாகும். தேக்கார்டு உடன் பிறந்த எண்ணங்களையே உண்மையான அறிவு என்றும், அவை அடிப்படைக் கருத்துகள், கோட்பாடுகள் ஆகியவற்றிலிருந்து அறிவாய்வினால் கிடைக்கப்பெறுகின்றன என்றும், அவை சிந்தனையில் வெளியாகின்றன என்றும் கருது- கின்றார். உடன் பிறந்த எண்ணம் (Innate Ideas) அல்லது அறிவு என்பதற்கு உள்ளம் தன்னுள்ளே காண்பதென்றும், உள்ளத்தில் உட்பதிவுகளாக நிகழும் எண்ணம் என்றும், நுகர்வு நிகழ்ச்சிகளில் உள்ளம் உண்டாக்குவது என்றும் வெவ்வேறான விளக்கங்கள் அளிக்கிறார் தேக்கார்டு. உள்ளத்தின் இருத்தல் தன்மை, கடவுளைப் பற்றிய எண்ணம், சடம், அதன் இயல்பான பரப்புடைமை, அதன் மாறுநிலைகளான உருவம் மற்றும் இயக்கம், உள்ளத்தின் பண்பான சிந்தனை, அதன் மாறு நிலைகளான புலனுணர்ச்சி மற்றும் கற்பனை, உள்ள–உடல் தொடர்புக்குக் காரணமான தறுவாய்க் கொள்கை ஆகியவற்றை உடன் பிறந்த எண்ணங்களாகத் தேக்கார்டு கருதுகிறார். ஏனெனில், அவை அடிப்படையில் தானே விளங்கும் உண்மைகளாக, தனிப்பட்ட முறையில் மிகத் தெளிவான முறையில் உள்ளுணர்வினால் உணர்ந்தறியப்படும் உண்மையான எண்ணங்களாக இருக்கின்றன. இவ்வுடன் பிறந்த எண்ணங்களில் தேக்கார்டு முதலில் உள்ளத்தின் இருத்தல் தன்மையும், அதிலிருந்து கடவுளைப் பற்றிய எண்ணமும், பின்னர்ப் படிப்படியாகப் பிறவும் உள்ளத்தால் தெளிவாகவும் தனித் தன்மையுடனும் அறியப்படுகின்றன என்று கருதுகின்றார். உள்ளம் இவ்வாறு ஒவ்வொன்றாக அறிந்தாலும் அவை உடன் பிறந்த எண்ணங்களேயாகும். ஆனால், இசுபினோசா உள்ளத்தின் இருத்தல் தன்மையும், பிறவும் கடவுளைப் பற்றிய எண்ணத்திலிருந்தே கிடைக்கப் பெறவேண்டியவை அல்லது அவர் சார்பாகக் கருதப்படவேண்டியவை என்கிறார். ஏனெனில், கடவுளைப் பற்றிய எண்ணமே அனைத்திலும் உறுதியானதும் ஏனைய எண்ணங்களின் உண்மைக்குத் துணையாக நிற்பதுமாகும். மேலும், இசுபினோசா கடவுள் மட்டுமே ஒரே உள்பொருள் என்றும், சடமும் உள்ளமும் அப்பொருளைக் கருதும் இரண்டு வேறுபட்ட வழிகள் என்றும், பரப்புடைமையும் சிந்தனையும் அப்பொருளின் எண்ணற்ற இயல்புகளுள் மனிதர் அறியக்கூடிய இரு இயல்புகள் என்றும், உடல்–உள்ளத் தொடர்புகளைக் கடவுள் இயற்கையில் இயக்கியாக இயக்குகிறார் என்றும், இப்புறவுலகின் தனிப்பட்ட எல்லையுற்ற பொருள்கள் ஒரே எல்லையற்ற பொருளான கடவுளின் மாறுநிலைகள் என்றும் கருதுகிறார். இலைப்னிட்சு உண்மையான அறிவு பொதுமையானதாகவும், இன்றியமையாத்தன்மை வாய்ந்ததாகவும் உடன்பிறந்த எண்ணமாகவும் எழுவது என்றும், உள்ளம் எப்பொழுதும் தன் உடன் பிறந்த எண்ணங்களைப் பற்றி நனவு நிலையில் உணர்ந்திருப்பதில்லை என்றும், எண்ணங்கள் உள்ளத்தில் ஒடுங்கி நிற்கின்றன என்றும், நுகர்வில் அவை தெளிவடைவதுடன் வெளிப்படையாக்கவும் பெறுகின்றன என்றும் கருதுகிறார். இவர் கடவுளைப் பற்றிக் கூறும்பொழுது கடவுள் படைக்கப்படாதவர் என்றும், அவரது இன்றியமையாத இயல்பு ஆற்றல் என்றும் பரப்புடைமை அதற்கு உள்ளடங்கியது என்றும் கூறுகிறார். இவையன்றி ஆன்மா, பொருள், ஒருமைப்பாடு, முற்றொருமை, காரணம், புலனறிவு, அறிவு முறை, அளவு நிலை ஆகியவற்றைத் தன்னுன் கொண்டுள்ளதும் உடன் பிறந்த எண்ணங்கள் என்கிறார். புலன் வழிக் கொள்கையினர் உடன் பிறந்த எண்ணங்கள் உள்ளத்தில் இருப்பதை மறுக்கின்றனர். அவர்கள் அறிவு அல்லது எண்ணங்கள் நுகர்வில்தான் ஏற்படும் என்கின்றனர். பின்னர் வந்த காண்ட்டு என்பவர் உடன் பிறந்த எண்ணங்களையும் புலன் வழி எழும் எண்ணங்களையும் தம் அடிப்படைக் கருத்துகளில் இணைக்கிறார். பி.ஆர்.ந. துணை நூல்கள் Yolton, J.W. (ed.), Essay Concerning Human understanding, London, 1961. Auron, R.I., The Nature of Knowing, London, 1930. Price, H.H., Perception, London, 1932.