உட்பிரிட்சு வின்சர் (Windsor) என்னும் இடத்தில் பிறந்தார்; அம்கெர்சுட்டுக் கல்லூரியிலும் (Amherst College) பெர்லின் (Berlin) பல்கலைக் கழகத்திலும் படித்தார். மின்னிசோட்டா (Minnesota) பல்கலைக் கழகத்தில் கி.பி. 1894 முதல் 1902 வரையும் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தில் 1902 முதல் 1937 வரையும் இவர் தத்துவம் பயிற்றுவித்தார். கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் தத்துவத் துறைத் தலைவராகவும் இவர் பணியாற்றினார். அரிசுடாட்டிலின் முறைகளை அமெரிக்காவில் திரும்ப உயிர்த்தெழச் செய்த பெருமை இவரைச் சாரும். செயல்முறைக் கோட்பாடு, இயற்கைக் கோட்பாடு என்னும் இருவகைத் தத்துவக் கருத்துகளை உட்பிரிட்சு (Woodbridge) வெளியிட்டார். உயிரும் மனமும் இயற்கையான உலகில் ஏற்படும் மாற்றங்களே; உடலின் பல்வேறு இயக்கங்களாக மனம், உயிர், உணர்வு, ஆன்மா என்பன அமைகின்றன என்பதே செயல்முறைக் கோட்பாடு. மனம் இயற்கையில் பொருள்களிடமிருந்து வெளிப்பட்டாலும் அது உலகத்தில் நிகழ்கிற சில மாற்றங்களை ஆளுகிற தன்மை உடையது. உணர்வு (Consciousness) என்பது சூழ்நிலையில் அமைந்திருக்கிற பொருள்களை அறிவது மட்டுமல்லாமல், அவற்றின் தரத்திற்கேற்ப மரியாதை செலுத்துவதுமாகும். அது பொருள்களின் இருத்தல் தன்மையை முன்கூட்டியே உணருகிறது. இயற்கைக் கோட்பாடும் செயல்முறைக் கோட்பாடும் ஒன்று எனக் கூறும் உட்பிரிட்சு, அரிசுடாட்டிலின் புலன் கடந்த நுண்பொருள் கொள்கையை மீண்டும் வலியுறுத்துகிறார். இவர் கருத்துப்படி, இயற்கைக் கோட்பாடு என்பது ஒரு வித மனப்பான்மையே தவிரத் தனித்தன்மை வாய்ந்த கோட்பாடன்று. ஆனால், சில இக்கால எழுத்தாளர்கள் இயற்கைக் கோட்பாட்டை ஒரு நிறைவான அமைப்பாக (Form) ஏற்றுக் கொண்டுள்ளனர். சமய அறிஞர்கள் இயற்கைக் கோட்பாட்டை ஆன்மிகக் கொள்கையோடு ஒப்பிடும்பொழுது குறைவாக மதித்தனர். ஆனால், உட்பிரிட்சு இத்தகைய மதிப்பீடுகளை ஏற்றுக் கொள்ளவில்லை. ஒவ்வொருவரும் வானம், பூமி, கடல் ஆகியவற்றையும் அவற்றிலுள்ள பொருள்களையுமே இயற்கையாகக் கருதுகின்றனர் என்று இவர் கூறுகிறார். உட்பிரிட்சு கருத்துப்படி இயற்கை எல்லாவற்றையும் தன்னுள் அடங்கச் செய்யும். இயற்கை என்பது ஒவ்வொருவரையும் சூழ்ந்து, காணத் தகுந்தவாறு இருக்கிற பொருள்கள் ஆகும். இயற்கைக் கொள்கை நல்ல முறையில் ஆய்வு செய்வதற்குரிய ஒரு முறை மன்ற (Summons) அமைப்பாக உள்ளது. உட்பிரிட்சின் படைப்புகள் இயற்கைக் கொள்கைகள், செயல் முறைக் கோட்பாடுகள் ஆகியவை பற்றி நன்கு விளக்குகின்றன. அவர் எழுதிய கட்டுரைகளுள் ‘பொருள்’, ‘சமய சித்தாந்தம்’, ‘படைப்புத் தொழில்’, ‘அமைப்பு’, ‘மனிதன்’ ஆகியன குறிப்பிடத்தக்கன. காலம் பற்றியும் அதன் மாறுதல் பற்றியும் உட்பிரிட்சு பின்வருமாறு கூறுகிறார்; ஒரு நிகழ்ச்சி என்பது அதற்குமுன் நடந்த காரணத்தின் காரியம் (Effect) ஆகும். முன்பே நடந்த பொருளின் விரிவாகும். காலம் என்பது இறந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கும் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திற்கும் மாறுவது என்ற கருத்து உட்பிரிட்சுக்கு ஏற்புடையது அன்று. அது நிகழுதற்கு வாய்ப்புள்ளது (Possible) என்னும் தன்மையிலிருந்து உண்மையாக நிகழக் கூடியது (Actual) ஆகிறது. ஆற்றலாக இருந்த தன்மையை இருத்தல் நிலைக்கு அது கொண்டு வருகிறது. இச்செயல் தன்னை மறந்த நிலையிலோ எதிர்பாராமலோ நினைவுற்ற நிலையிலோ நடைபெறுகிறது. கடந்த காலத்திலிருந்து வருகிற நிகழ்ச்சி நல்ல வாய்ப்பை அளிப்பதோடு கடினமான வரையறையினையும் அமைக்கிறது. அது ஒருவருக்குத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பினை அளிக்காமல் அவர் தம் குறிகோளை உணரத் துணை செய்கிறது.