ஒரு பெரும் முனிவர். இவர் கலைக்கோட்டு முனிவர் என்றும் அழைக்கப் பெற்றார். இவர் பிறந்தபோது தலையில் மானின் கொம்பை ஒத்த கொம்போடு பிறந்ததால், இவருக்கு இப்பெயர் வழங்கிற்று. விபாண்டகர் என்னும் இவர் தந்தை நீராடச் சென்றபோது, அவ்விடத்துப் போந்த ஊர்வசியைக் கண்டு காமுற்றார். அதனால் அவர் வீரியம் நீரில் விழ, அதனை அவர் வளர்த்த மான் குடித்ததால், அதன் வயிற்றில் கலை என்ற மான் கோட்டோடு பிறந்த இவர், கலைக்கோட்டு முனிவர் என்று அழைக்கப்பெற்றார். விபாண்டகர் கொம்போடு பிறந்த மகனைப் பிறர் யாரும் காணா வகையில் மறைத்து வளர்த்தார். இருசிய சிருங்கர் தமக்குக் கோடுடைமையால், கோடில்லா மக்களை விலங்கென்று கருதி வாழ்ந்தார். தந்தைவழி வேத நெறிகளையும், யோகப் பயிற்சிகளையும் பெற்றுத் தலைசிறந்த முனிவராக வாழ்ந்தார். உரோமபாதன் நாட்டில் மழைபெய்யாது போக, சான்றோர்கள் இருசிய சிருங்கரை நாட்டிற்கு அழைத்தால் மழை பெய்யும் என்றனர். விபாண்டக முனிவரிடத்திருந்து இவரைப் பிரித்து நாட்டிற்குக் கொணரும் அருமையை நினைத்து உரோமபாதன் கவன்றபோது, அவன் நாட்டிலுள்ள விலைமாதர் இவர் இம்முனிவரை அழைத்து வரச் சென்று, அவர் இருக்கும் ஆசிரமத்தின் புறத்தேயிருந்து, விபாண்டகர் இல்லாதபோது இவர்பால் சென்றனர். இவரும் அம்மகளிரை மார்பில் கோடு பூத்த செறிதவ முனிவர்கள் என்று கருதிப் பெரிதும் பேணினார். இருசிய சிருங்கர் தமக்குச் செய்த தலையளியை ஏற்றுக் கொண்டு, அவர்களும் இம்முனிவருக்குப் பழங்கள், கிழங்குகள் முதலியன தந்து, தாம் வாழும் ஆசிரமத்துக்கு அழைத்து, அங்கிருந்து உரோமபாதன் நாடாகிய அங்கதேசம் வரை அழைத்துச் சென்றனர். முனிவன் அங்கநாடு சென்றதும் மழை பொழிந்தது. இருசிய சிருங்கர் தம்மை மகளிர் வஞ்சகமாக அழைத்ததை உணர்ந்து சினந்து அடங்கினர். உரோமபாதன் இம்முனிவரைப் பலவாறு பேணித் தன் மகள் சாந்தை என்பாளை மணம் செய்து கொடுத்தான். தயரதன் தனக்குப் பன்னெடுங்காலம் மகப் பேறில்லாது நொந்து வருந்தியபோது, வசிட்டன் போன்ற பெருமுனிவர்கள், இருசிய சிருங்கரை அழைத்து, மகவேள்வி செய்தால் உறுதியாகத் தக்க மகப்பேறு வாய்க்கும் என்றனர். அதுகேட்டுத் தயரதன் உரோமபாதனுக்கு வேண்டுகோள் விடுக்க, அவ்வரசன் இருசிய சிருங்கரை அயோத்திக்கு அனுப்பிவைத்தான். முனிவர் இயற்றிய மகப்பேற்று வேள்வியில் பூதமொன்று தோன்றிச் சுதை நிகர் பிண்டம் ஒன்றைத் தந்தது. அதனை முனிவர் பெற்றுத் தசரதனிடம் கொடுத்து அவன் மனைவியர் உண்ணுமாறு செய்வித்தார். அவர்களும் அந்த அவிப் பொருளை உண்டு, இராமன் முதலியோரைக் கருவுற்று ஈன்றனர். பரம்பொருளாகிய இராமன், திருமால் தொழில் இயற்ற மனித வடிவில் பிறக்கக் காரணமானவர் இவர். உலகியலில், ‘நீ ஒரு கொம்பு முளைத்த மனிதனோ’, ‘அவனுக்குக் கொம்பு முளைத்துள்ளதோ’ என்னும் வியத்தகு கேள்விகளெல்லாம் இக்கலைக் கோட்டு முனிவரை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவையே யாம். கு.தி.