இதற்கு ஐந்திலை, இந்திர சூரியம், திரிபுரம் எரித்தான், சிந்துகம், சிந்துவரம் நித்தில், நீர்க்குண்டி, வெள்ளை நொச்சி, வெண்ணொச்சி என்று பல பெயர்கள் உண்டு. இதன் தாவரப் பெயர் வைட்டெக்ஸ் நெகுண்டோ (Vitex negundo) என்பதாகும். நொச்சியை இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தானம், மியான்மர், சீனா, இந்தோ சீனா, மலேசியா ஆகிய நாடுகளில் காணலாம். இமய மலையின் வெளிப்புறங்களில் 1 கி.மீ. உயரம் வரையில் பெரும் எண்ணிக்கையில் காணப் படுகிறது. பூச்சி கொல்லி தன்மையுள்ள புதர்ச் செடியான இதன் இலைகளை வெட்டிப் பசுந்தழை உரமாகவோ, எருவாகவோ பயன் படுத்தலாம். இதனைப் பெரும்பாலும் ஆற்றங்கரையோரம், ஈரமான நிலம், தரிசு நிலம், வேலியோரம், இலையுதிர்க் காடு ஆகியவற்றில் கூட்டங் கூட்டமாகக் காணலாம். அமைப்பு. இது 4–6 மீ. உயரம் வளரும் மணமுள்ள புதர்ச் செடி அல்லது சிறு மரமாகும். இதன் கிளைகள் அடர்த்தியாக வெண்ணிற மயிரால் போர்த்தப் பட்டிருக்கும். எதிர் அடுக்கில் அமைந்த இலைகள் விரல் போல் 3–5 கூட்டிலைகளாக இருக்கும். முழுமையான சிற்றிலைகள் தலை கீழ் ஈட்டி வடிவில் தோல் போன்றிருக்கும். மேல் பக்கம் வழுவழுப்பாகவும், கீழ்ப் பக்கம் மயிரடர்ந்தும், நுனி கூராகவும் இருக்கும். மஞ்சரி உச்சியில் அமைந்திருக்கும். கூட்டுப் பூத்திரள் (Panicle), நுனி வளர் கிளை (corymb) மஞ்சரியிலுள்ள மலர்கள் காம்புடனோ, காம்பற்றோ காணப் படும். பூவடிச் செதில்கள் சிறியவை; சில சமயம் முதிரு முன்னரே உதிர்ந்து விடும். புல்லி வட்டம் 3 மி.மீ. அளவானது. புல்லி இதழ்கள் மணி வடிவமாகவோ, குழல் கொண்ட புனல் வடிவமாகவோ இருக்கும் அல்லது 5 குறுகிய முக்கோண வடிவ மடலால் ஆகியிருக்கும். அல்லி வட்டம் 7 மி.மீ. குறுக்களவானது. ஈருதடு பெற்ற அல்லி இதழ்கள் சிறியவை. 5 மி.மீ. நீளமான அல்லிக் குழல் மிகவும் குட்டையானது; மகரந்தத் தாள்கள் நான்கும், ஏற்றத் தாழ்வு கொண்டவை. சூல்பை 2–4 அறைகளைக் கொண்டது. இதில் 4 சூல்கள் இருக்கும். சூலகத் தண்டின் நீளம் 7 மி.மீ. கனி உருண்டை வடிவ அல்லது முட்டை வடிவ அல்லது நீள் வட்ட உள்ளோட்டுச் சதைக் கனி (drupe) வகை. புல்லி வட்டத்தினால் தாங்கப் பெற்றிருக்கும். இதன் நடு உறை சதைப் பற்றானது. உள்ளுறை எலும்பு போன்றது; இது 4 அறைகளும், 4 விதைகளும் பெற்றது. விதைகள் முட்டை வடிவம் அல்லது நீள் சதுரமானவை. இதன் புறவுறை தடிப்பானது. இதில் முளை சூழ்தசை (endosperm) இல்லை. சதைப் பற்றான வித்திலைகளில் பூக்கள் இரு பருவங்களில் தோன்றுகின்றன. சமவெளியில், ஜனவரி–ஏப்ரல் வரையிலும், மலைப் பகுதியில் ஜூலை–அக்டோபர் வரையிலும் பூக்கிறது. கனிகள் ஆண்டு முழுவதும் காணப் படுகின்றன. பூச்சி நோய்கள். நொச்சியில் செர்க்கோஸ்போரா அகர்வலியை (Cercospora agarwalii) என்னும் பூசணம் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில், இலைப் புள்ளி நோயை ஏற்படுத்தியுள்ளது. சிஸ்டோசெர்க்கா கிரிகேரியா (Schistocerca gregaria) என்னும் வெட்டுக் கிளி இலைகளைத் தின்று அழிக்கும். இலைகளைக் குடையும் புழுக்களுள், லேப்டியா கல்லிஸ்ட்ரேப்டா (Labdia callistrepta), ஸ்டேக்மேட்தோஃபோரா அக்கேந்தோடஸ் (Stagma tophora acanthodes) என்பவை குறிப்பிடத் தக்கவை. சாற்றை உறிஞ்சி அழிவு செய்யும் பூச்சிகளுள் ஏஃபிஸ் மால்வாய்டெஸ் (Aphis malvoides), டிரோசிகா டால்பெர்ஜியே (Drosicha dalbergiae), டிரைசெண்ட்ரஸ் பைகலர் (Tricentrus bicolor) என்பவை அறியத் தக்கவை. தமிழ்நாட்டில் இலைகளை மடக்கி அழிக்கும் பூச்சியான பிக்னார்மன் காபெராலிஸ் (Pycnarmon caberalis) குறிப்பிடத் தக்கது. பயன். நொச்சியை வேலிப் பயிராக வளர்ப்பது வழக்கம். இதைக் கால்நடைகள் உண்பதில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில், இதை நட்டுப் பயன் பெறலாம். இப்புதர்ச் செடி மண் அரிப்பைத் தடுக்க உதவும். காற்றுத் தடை வேலிப் பயிராகவும் இதை வளர்க்கலாம். இதன் இலைக்குப் பூச்சிகளை விரட்டும் தன்மை உண்டு. சேமிப்புத் தானியங்களுடன் இதன் இலைகளை வைத்திருக்க, பூச்சிகள் அண்டுவதில்லை. இதன் இலைக்குப் பாக்டீரியாக் கொல்லித் தன்மையும் உண்டு. இலைகளில், புற்று நோயைப் போக்கும் பண்பும் உள்ளது. ஃபிலிப்பைன்சில் விதைகளை அவித்து உண்கின்றனர். நுனிக் கொழுந்துகளை கூடை முடையப் பயன் படுத்துகின்றனர். இச்செடிச் சாம்பலில் பொட்டாசியம் கார்பனேட் மிகுந்துள்ளது. இச்செடி சாயம் தயாரிக்கவும் உதவுகிறது. இச்செடியின் அனைத்துப் பகுதிகளும், மருத்துவத்திற்கு உதவுகின்றன. இலைகளை உலர்த்தி, மருத்துவத்திற்குப் பயன் படுத்துகின்றனர். மணமுள்ள இலைகள் உடலைத் தேற்றும். வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். கட்டிகளைக் கரைத்து, கெட்ட மாசுகளை நீக்கும். அண்ட வீக்கம், வாதப் பிடிப்பு, அழற்சியால் உண்டாகிய வீக்கத்தையும் கரைக்கும். சுளுக்கு, மூட்டு வீக்கத்தைப் போக்கும். இலையை வெண் சுருட்டுப் (cigarette) போலச் சுற்றிப் புகைத்தால், நீர்க் கோவை தலை வலி முதலிய நோய்கள் அகலும். இலைகளை நீரிலிட்டுத் கொதிக்க வைத்து, ஆவி பிடிக்கக் காய்ச்சல் குணமாகும். இலைகளைச் சுக்குடன் சேர்த்தரைத்துப் பற்றிடத் தலைவலி போகும். இலைச் சாறு மாதவிடாயை வெளிப் படுத்தும். இலைச் சாறு புண்களின் கழிவுகளையும் நீக்கும். இலைச் சாற்றை எண்ணெயிலிட்டுக் காய்ச்சிப் புரையோடும் புண், கண்டமாலை, விரணம் ஆகியவற்றிற்குப் பயன் படுத்தலாம். சாற்றை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலையில் தடவி வர, தலை மயிர் நன்கு வளரும். இலைச் சாற்றுடன் திப்பிலியைச் சேர்த்துத் தர, சளியுடன் சேர்ந்த காய்ச்சல், தலை கனம், காது மந்தம் குணமாகும். தலையணையில் பஞ்சுக்குப் பதிலாக, நொச்சித் தழையை நிரப்பிப் படுத்து வர, உடல் வலி போகும். கழுத்து நரம்பு வலி, ஒரு பக்க நரம்பு வலி, வாதக் காய்ச்சல், சன்னி இருமல், திருப்ப முடியாத கழுத்து வலி போன்ற நோய்கள் நீங்கும். இலையிலிருந்து எடுக்கப்படும் தைலத்தைத் தடவ, நாற்றப் புண்கள் குணமாகும். நொச்சி இலை, பொடுதலை, நுணா முதலியவற்றைச் சேர்த்துக் குடி நீர்செய்து, குழந்தை களின் மாந்தத்திற்குத் தரலாம். நொச்சி இலைக் கொழுந்து, சுக்குத் தூள் ஆகியவற்றை மந்தித்துச் சர்க்கரை கலந்த பசு நெய்யைச் சேர்த்துக் கிளறி, 40–50 நாள் தொடர்ந்து சாப்பிட்டு வரச் சீதக் கழிச்சலால் உண்டாகும் கடுப்பு நீங்கும். ஆஸ்துமா குணமாக நொச்சியிலை, மிளகு, இலவங்கம், வெள்ளைப் பூண்டு ஆகியவற்றை மென்று, சிறிது சிறிதாக அவற்றின் சாரத்தை விழுங்க வேண்டும். நொச்சி இலையை மண் சட்டியிலிட்டு, ஆமணக்கெண்ணெயை ஊற்றி, வதக்கிக் கீல் வாதம், மூட்டு வலி, இடுப்பு வலி, வீக்கம், முடக்கு வாதம் ஆகிய நோய்களுக்கு ஒற்றடம் தரலாம். நொச்சி இலை, வேலிப் பருத்தி இலை ஆகியவற்றைச் சம அளவில் எடுத்து, மண் சட்டியிலிட்டு, ஆமணக்கெண்ணெயை ஊற்றி வதக்கி, மாலை வேளைகளில் இளஞ்சூடாக ஒற்றடம் தர வாத நோய்கள் குணமாகும். வணிக முறையில், இதன் வேர்கள் நீளமான, உருளை போன்ற மருந்தாக விற்கப் படுகின்றன. இதன் வெளித் தோல் சாம்பல் கலந்த பழுப்பு நிறமாகவும், நீள வாக்கில் பல பிளவுகளைப் பெற்றும் இருக்கும். உள் மரக் கட்டை இளம் மஞ்சள் நிறமானது. வேருக்கென்று தனி மணமில்லை. வேரைத் தூள் செய்தால், இள மஞ்சள் நிறத் தூள் கிடைக்கும். வேருக்கு உடலைத் தேற்றும் பண்பும், காய்ச்சல் மற்றும் சளியைப் போக்குந் தன்மையும், சிறு நீரைப் பெருக்கும் இயல்பும் உண்டு. வேர்த் தூளை வயிற்றுக் கடுப்பு, மூலம் ஆகியவற்றிற்குப் பயன் படுத்தலாம். நொச்சி வேரைக் குடிநீரிலிட்டு பால், பனங்கற்கண்டு சேர்த்துக் காலை, மாலை குடித்து வர, வாத நோயுடன் கூடிய மேக நோய், தொழு நோய் முதலியன நீங்கும். வேரை அரிசிக் கஞ்சியில் அரைத்துப் புண்களை ஆற்றுவதற்குப் பயன் படுத்தலாம். பூக்களை உலர்த்திப் பொடித்துப் பன்னீர், கற்கண்டு சேர்த்துத் தரக் குருதி வாந்தி, குருதிச் சீதபேதி போகும். பூக்கள் வயிற்றுப் போக்கு, வாந்தி பேதி, காய்ச்சல், ஈரல் நோய், மார்பு நோய்களைப் போக்கும். உலர்ந்த காய்கள் குடற்புழுக்களைக் கொல்லும். சீனாவிலும், மலேயாவிலும் காய்கள் தலை வலியைப் போக்கவும் கண்ணீர்ப் பெருக்கை நிறுத்தவும் பயன் படுகின்றன. விதை, தோல் நோய், தொழு நோய் ஆகியவற்றைப் போக்கும். நொச்சி இலையுடன், சிறிதளவு வேப்பெண்ணெயைக் கலந்து வதக்கி வைத்துச் சிறிது சூட்டோடு வெற்றிலையை மேலே வைத்துக் கட்ட, மூட்டு விக்கம் குணமாகும். —கே.ஆர். பாலச்சந்திர கணேசன் —கோ. அர்ச்சுனன் துணை நூல். G.H.M. Lawrence, Taxonomy of Vascular Plants, Oxford and IBH Publishing Company, New Delhi 1974.