நூல் புழு நோய்கள்
nūl puḻu nōykaḷ
வட்டப் புழுக்கள் அல்லது விலாங்குப் புழுக்கள் என்றும் நூல் புழுக்களைக் கூறலாம்.
வட்டப் புழுக்கள் அல்லது விலாங்குப் புழுக்கள் என்றும் நூல் புழுக்களைக் கூறலாம். நூல் புழுக்கள், பயிரிடப் படும் மண்ணில் 20–25 செ.மீ. ஆழம் வரை இருக்கும். பயிர்களைத் தாக்கும் நூல் புழுக்களுக்கு முட்டைப் பருவம், புழுப் பருவம், முதிர் வளர்ச்சிப் பருவம் ஆகியன உள்ளன. முட்டைக்குள்ளேயே புழு வெளி வந்தவுடன், தன் முதல் நிலைப் புழுப் பருவத்தை முடித்துக் கொண்டு, இரண்டாம் நிலைப் புழுவாக வெளி வரும். இரண்டாம் நிலையிலிருந்து, ஐந்தாம் நிலை வரை புழுக்கள் செடிகளின் வேர், தண்டு, மொக்கு, இலை, பூ, விதைகளின் திசுக்களில் உள்ள செல் சாற்றை உறிஞ்சி வாழும். சாற்றை உறிஞ்சுவதால், செடிகளின் ஊட்டச் சத்துக் குறைந்து விடும். அத்துடன், செல்களின் உள்ளே, நூல் புழுக்கள் உமிழ் நீரைச் செலுத்துவதால், செல்லின் உட்பொருள்கள் செரிக்கப் படும். இதனால், செல்கள் காய்ந்து, பயிர்களின் வெளித் தோற்றத்தில் மஞ்சள் நிறத்துடன் காணப் படும்.
பயிர்களில், நேரிடையாகச் செல்களின் சாற்றை உறிஞ்சியும், செல்களின் உட்பொருள்களைக் கரைத்துச் செல்களை இறக்கச் செய்தும், ஊட்டச் சத்துகளை உள் நோக்கிச் செலுத்தும் சல்லடைக் குழாய்த் திசு (Phloem), கட்டைத் திசு (xylem) ஆகியவற்றைத் தாக்கி ஊட்டச் சத்துகள் மேலே செல்லா வண்ணம் செய்து, பயிர் விளைச்சலைத் குறைக்கின்றன. பயிர்களில் நோய் உண்டாக்கும் பூசணம், பாக்டீரியாக்களுடன் இணைந்து, நோயின் தன்மையை அதிகரிக்கச் செய்யும்.
எலுமிச்சைச் செடியில் எலுமிச்சை நூல் புழுவின் (Tylenchulus semipenetrans) தாக்கம் 80% வரை ஏற்படுகிறது. இந்நூல் புழுவால், எலுமிச்சையின் குறைவான வீழ்ச்சி நோயும் (Slow decline disease), பின் இறப்பு நோயும் (Die-Back disease) ஏற்படுகின்றன. உருளைக் கிழங்கின் முட்டை வடிவ நூல் புழு, (Verticillium dahliae) வெர்டிசிலியம் டாலியே என்னும் பூசணத்துடன் இணைந்து, வாடல் நோயை மிகுதிப் படுத்தும்.
புகையிலையில், கறுப்புத் தண்டு நோயை ஏற்படுத்தும் பைடோப்தோரா பேரசைடிகா (Phytopthora parasitica) என்னும் பூசணத்தின் தாக்குதலை எதிர்த்து நிற்கும் வகைகள் உள்ளன. ஆனால், வேர் முடிச்சு நூல் புழு, பூசணத்துடன் சேரும் போது, எதிர்ப்பாற்றல் வகைகளிலும் கருந்தண்டு நோய் மிகும். புகையிலையில் வேர் முடிச்சு நூற்புழுவும், ஃபியூசோரியம் பூசணமும் சேர்ந்து, பழுப்புப் புள்ளி நோயை மிகுவிக்கும். பருத்தியில் பியூசோரியம் என்னும் பூசணத்தால் ஏற்படும் வாடல் நோய். ஆனால், ரோடிலென்சூலஸ் ரெனிஃ பார்மிஸ் (Rotylenchylus reniformis) என்னும் நூல் புழு தாக்கினால், 80% வரை வாடல் நோய் ஏற்படுகிறது.
வெள்ளரி வகை. டிரிக்ஸ், N.Z. வெள்ளரி வகைகளில், ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் லைக்கோபெர்சிகை என்னும் பூசணத்தால் வாடல் நோய் ஏற்படுவதில்லை. ஆனால், வேர் முடிச்சு நூல் புழுவான மெலாய்டோகைன் இன்காகினிட்டா பூசணத்துடன் சேரும் போது, வாடல் நோய் ஏற்படுகிறது. இதைப் போன்றே தக்காளியில் ஃபியூசேரியம் ஆக்சிஸ்போராம் குக்குமிரியம் என்னும் பூசணமும், மேற்கூறிய நூற்புழுவும் சேரும் போது, பூசணத் தாக்குதலுக்கு எதிர்ப்பாற்றல் கொண்ட வகை, எதிர்ப்புத் திறனை இழந்து விடுகிறது. மேலும், வாடல் நோய் ஏற்படவும் நூற்புழு காரணமாகிறது. நூற்புழு தாக்கிய செடிகளில், பூசண வித்துகள் (conidia) பெருகக் காரணமாக உள்ளது. தக்காளியில் ஃபியூசேரியம் பூசணத்துடன், நூல் புழு மெலாய்டோகைன் இன்காகினிட்டா சேரும் போது, வாடல் நோய் ஏற்படும். பட்டாணியில் ஃபியூசேரியம் ஆக்சிஸ்போரம் பைசாவுடன், மெ.இன்கானிட்டா, மெ. அக்ரிட்டா சேரும் போது, வாடல் நோய் ஏற்படுகிறது. உருளைக் கிழங்கில், ஹெட்டிரோடெரா கிலைசன்ஸ் நூல் புழுவும், ஃபியூசேரியம் பூசணமும் இணையும் போது, வாடல் நோய் மிகும்.
மிளகுப் பயிரில் பிராட்டிலின்கஸ் மைனஸ் நூல் புழுவும், செர்டிசிலியம் எலாலிலே பூசணமும் இணைந்து தாக்கும் போது, வாடல் நோய் மிகும். வேர் முடிச்சு நூல் புழுவான மெ. இன்காகினிட்டாவும், பித்தியம் அஃபானிடேர்மேட்டாவும், சாமந்திப் பயிரில் இணைந்து தாக்கும் போது, வேர்களின் வளர்ச்சி குன்றி விடுகிறது.
புகையிலையில், மெ.இன்காகினிட்டா, பூசணங்களான ரைசக்டோனியா சொலானி, பித்தியம் அல்டிமத்துடன் இணைந்து தாக்கும் போது, இலைகள் காய்ந்து செடிகளை மடியச் செய்கின்றன. புகையிலையில், மெ.இன்காகினிட்டா தாக்கிய நான்கு வாரங்களுக்குள் குர்குலேரியா டிரையோனியை, போட்ரிடஸ் சினரியா, ஆஸ்பர்ஜிலஸ் அக்ரேசியஸ், பெனிசிலியம் மார்டென்சி ஆகிய பூசணங்கள் வேர்களைத் தாக்கி, அழுகச் செய்கின்றன. இவ்வேர் முடிச்சு நூல் புழுவின் தாக்குதலால் இலைப் புள்ளி நோயும் மிகும்.
பிராட்டிலிங்கஸ் மைனஸ் நூல் புழுவும், ரை. சோலானி பூசணமும் இணைந்து, கோதுமைப் பயிரைத் தாக்கும் போது, வேர்கள் அழுகி விடுகின்றன. ஆல்ஃபால்ஃபா என்னும் பயிரில், பி.பெனிட்ரன்சும், டிரைகோடெர்மா விரிடியமும் இணைந்து தாக்கி, தண்டு மற்றும் வேர்களின் வளர்ச்சியைக் குறைக்கின்றன. பிராட்டடிலிங்கஸ் ஜியா நூல் புழுவும், பித்தியம் கிராமினிகோலா பூசணமும் இணைந்து தாக்கி, கரும்பின் நுனித் தண்டு வளர்ச்சியைப் பாதிக்கின்றன. டைலன்கஸ் அக்ரிபோலா நூல் புழுவும் எஃப். ரோசியம் பூசணமும் இணைந்து, மக்காச் சோளத்தில் வேர் அழுகல் நோயை மிகுதிப் படுத்துகின்றன. தென்னையில் ரொடாபெலஸ் சிமிலிஸ் என்னும் நூல் புழு சிவப்பு மோதிர நோயை ஏற்படுத்துகிறது. ரோ. சிமிலிஸ் நூல் புழுவும், ஃபியூ. மொனிலிபார்மி என்யென்சி பூசணமும் இணைந்து, வாழையில் வாடல் நோயைப் பெருக்குகின்றன. ஹெலிகோடைலின்கஸ் மல்டிசின்க்டஸ் நூல் புழு வாழையில் வேர்ச் சிதைவு, பின் இறப்பு நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. —குரு. பாலசுப்ரமணியன் துணை நூல். Mathews, Plant Virology, Academic Press, New York, 1970.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 142)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pypd75ga/
தமிழ்“நூல் புழு நோய்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pypd75ga/APA
Oliyon Research. (2026). நூல் புழு நோய்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pypd75ga/MLA
"நூல் புழு நோய்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pypd75ga/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment