அவுரங்கசீப்
avuraṅkacīp
சிறப்புவாய்ந்த மொகலாயப் போரசர்களுள் ஒருவர்.
சிறப்புவாய்ந்த மொகலாயப் போரசர்களுள் ஒருவர். மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்ட பெரும் பணியைச் செய்தவரும் இவரே.
அவுரங்கசீப் (Aurangzeb) (கி.பி. 1658–1707), உடன்பிறந்த அண்ணன் தம்பியரைப் படுகொலை செய்து, தில்லியில் மொகலாயப் பேரரசராக முடிசூட்டிக் கொண்டார். தொடக்கத்தில் இருந்தே, அக்பரின் ‘தேசிய அரசினை’ (National State) நிறுவும் பணியினைத் தலைகீழாகத் திருப்புவதில் தம் கருத்தினை இவர் செலுத்தலானார். தம்முடைய அரசினை ஓர் ‘இசுலாமிய அரசாக’ச் சிறப்புறச் செய்ய வேண்டும் என்பதிலேயே அவுரங்கசீப் கருத்தாக இருந்தார்.
மிகுந்த சமயப் பற்றுடன், இசுலாமிய சமய ஆசாரங்களையும் கொள்கைகளையும் கடைப்பிடிப்பதில் மிதமிஞ்சிய ஈடுபாடு உடையவராகவும் இவர் விளங்கினார். இதன் விளைவாக இந்துக்களின் கோயில்களை இடித்தல், இந்து வாணிகர்களின் மீது மிகுதியான வரிகளை விதித்தல், தலைவரியை மீண்டும் விதித்தல், இந்து அதிகாரிகளைப் பதவிநீக்கம் செய்தல், அரசவையில் பின்பற்றப்பட்டு வந்த இந்துப் பழக்கவழக்கங்களைக் கைவிடல், கட்டாயப்படுத்தி இந்துக்களை மதமாற்றம் செய்தல் போன்ற இந்து சமய எதிர்ப்புச் செயல்திட்டத்தில் இவர் ஈடுபட்டார். மற்றும், இராசபுத்திர அரசகுடும்பங்களோடு நெடுங்காலமாக இருந்துவந்த நட்புறவையும் இவர் முறித்துக் கொண்டார். இவற்றால் ‘சமயச் சார்புடைய அரசினை’ அவுரங்கசீப் நிறுவினார்.
‘சிறப்புமிக்க மக்களின் ஆதரவு இல்லாமல், மாட்சிமை பொருந்திய நிலைத்த பேரரசை நிறுவ இயலாது. அனைவருக்கும் சம உரிமையும் வாய்ப்பும் அளித்து, உறுதிவாய்ந்த அரசினை அமைப்பதற்கு அறியாதவர்கள், பெருமைக்குரிய ஆட்சியாளர்களாக இருக்க இயலாது’ எனும் அக்பரின் இலட்சிய நோக்கம், அவுரங்கசீப்பினால் புறக்கணிக்கப்பட்டது.
அவுரங்கசீப்பின் பண்புகளும் கொள்கைகளும் அரும்பாடுபட்டுப் பேரரசர் அக்பர் நிறுவிய தேசியப் பேரரசை நிலைகுலையச் செய்தன. மொகலாயப் பேரரசினை நிறுவி, ஒரு ‘தேசிய அரசாக’ அதனை உருவாக்க அக்பர் முயன்றார். அவுரங்கசீப் அதனைத் தம்முடைய விவேகமற்ற செயல்களினால் அழித்து விட்டார்.
ஆட்சியின் இருநிலைகள்
அவுரங்கசீப்பின் ஆட்சியை இருபெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். கி.பி. 1658 முதல் 1681 வரை, இவருடைய சிந்தனை முழுவதும் வடஇந்தியாவையே மையமாகக்கொண்டு சுற்றிச் சுழன்றது. வடஇந்திய அரசியலில் இவர் மூழ்கி இருந்தார். கி.பி. 1681–ஆம் ஆண்டிற்குப் பிறகு
அவுரங்கசீப் பேரரசு
தென்னிந்திய (தக்காண) அரசியல் இவருடைய நேரத்தையும் பொருளையும் கொள்ளை கொண்டது. தம்முடைய குடும்பத்தினரோடும் அரசபரிவாரங்களோடும் படையோடும் தக்காணத்தில் குடியேறி, கிளர்ச்சி செய்த இசுலாமியச் சிற்றரசுகளை அடக்கியொடுக்குவதிலும் மராட்டியரைப் பணிய வைக்கும் முயற்சியிலும் தம் வாழ்நாளை அவுரங்கசீப் வீணாக்கிக் கொண்டார். இதன் விளைவாக, வடஇந்திய அரசியல் இவரால் புறக்கணிக்கப்பட்டது. எனவே, அங்குப் பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் தோன்றி, மொகலாயப் பேரரசினை ஆட்டம் கொள்ளச் செய்யும் அளவிற்கு அமைதியின்மையும் அராசகச் செயல்களும் பெருகின.
அவுரங்கசீப்பின் சமயச் சார்பான ஆட்சிமுறைக் கொள்கை
இவர் மிகுந்த சமயப் பற்று வாய்ந்த ‘சன்னி’ முசுலிமாக விளங்கினார். ‘ஒவ்வொரு இசுலாமிய அரசரும், பிற சமயத்தவருடைய நாடுகளை இசுலாமிய நாடுகளாக மாற்றுதையே நோக்கமாகக் கொண்டு ஆட்சிபுரிய வேண்டும்’ எனும் குரானின் கொள்கையில், இவர் அசைக்க இயலாப் பற்றுறுதி கொண்டிருந்தார்.
சமயச் சார்பற்ற செயல் திட்டங்களைப் பின்பற்றியதனால், தம்முடைய முன்னோர்கள், இசுலாமிய இலட்சியத்தைப் புறக்கணித்து விட்டனர் என்று இவர் நினைத்தார். எனவே, நாட்டு ஆட்சியை, இசு- லாமிய இலட்சியத்தைச் செம்மையாகச் செயற்படுத்தும் முறையில் தாம் ஆட்சிபுரிய வேண்டும் எனும் உறுதி பூண்டார் இவர். ஆகவே, இசுலாம் சமயத்தைப் ‘பேரரசின் சமயம்’ என்று இவர் பறைசாற்றினார். இசுலாமிய சமயம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புறச் செய்வதற்கு. அரசக் கருவூலத்தின் பெரும் பகுதியை இவர் செலவழித்தார்.
இதன்விளைவாக, நாட்டில் பெரும்பாலோரால் பின்பற்றப்பட்டு வந்த பல தெய்வ வணக்கத்தை அடக்கியொடுக்க அவுரங்கசீப் திட்டமிட்டார். இந்து சமயத்திற்கு எதிராகப் ‘புனிதப் போர்’ தொடுக்க முனைந்தார். இந்தியாவை, ஓர் இசுலாமிய அரசாக மாற்றுவதற்கு முயன்றார். குடிமக்களை இசுலாமியராக மாற்றும் செயலில் ஈடுபட்டார். நாட்டின் அரசாட்சியை இசுலாமியச் சட்ட நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமைப்பதில் வெறியுணர்வோடு இவர் செயற்பட்டார்.
இந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவுரங்கசீப், பல கட்டளைகளைப் பிறப்பித்தார். அன்றாட ஆட்சிப் பணியில் நுழைந்துவிட்டிருந்த இசுலாத்திற்குப் புறம்பான பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் தடை செய்வதற்கு இவர் திட்டமிட்டார்.
எல்லா நகரங்களிலும் சமயக் கட்டுப்பாடும் கண்காணிப்பும் நடைமுறைப்படுத்தப்பட்டன. சமயத் தொடர்பான செயல்முறைகள் எல்லாம் தணிக்கை செய்யப்பட்டன. அரசவையில் இசைக்குத் தடை விதிக்கப்பட்டது, காசுகளில் பொறிக்கப்பட்டுவந்த இசுலாமிய ‘மறைமொழிகள்’ நீக்கப்பட்டன. அந்தப் புனித மொழிகளையும் புறச்சமயத்தார் அவமதிக்கலாம் எனும் அச்சத்தால், அவுரங்கசீப் இவ்வாறு செய்தார். பாரசீகப் புத்தாண்டு விழாவும், ‘நல்ரோசு’ எனும் திருவிழாவும் இசுலாத்திற்குப் புறம்பானவை என்று கருதி, அவற்றையும் தடைசெய்தார். மது அருந்துவதும் தடை செய்யப்பட்டது. மதுவிலக்குக் கொள்கையை இவர் கடுமையாகப் பின்பற்றினார். ஆடல் மகளிர் (நாட்டிய நங்கையர்), திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். இதற்கு உடன்படாதவர்கள் மொகலாயப் பேரரசினைவிட்டு வெளியேறிவிடுமாறு கட்டளையிடப் பெற்றனர். நாள்தோறும் இருமுறை பேரரசர் குடிமக்களுக்குக் ‘காட்சிதருதல்’ எனும் வழக்கத்தைக் கைவிட்டார். இக்காட்சி தருதலால் மக்கள் இடையே ‘வீரவழிபாட்டு’ மனப்பான்மை வளர்ந்துவிடும் என்று இவர் அஞ்சினார். அரசருடைய எடைக்கு எடை பொன், வெள்ளி போன்ற உலோகங்களை நிறுத்து (துலாபாரம்) அளிக்கும் வழக்கத்தைத் தடைசெய்தார். இந்த வழக்கம் இந்துக்களுடையது என்பதனாலேயே, இவர் இதனை வெறுத்தார். அன்றைய பகட்டான வாழ்க்கையை அவுரங்கசீப் அடியோடு எதிர்த்தார். குரானில் விதிக்கப்பட்ட நெறிமுறைகளுக்கு இணங்க, இவர் எளிய சமயப்பணியார்வம் உடைய வாழ்க்கையை நடத்தினார்.
கி.பி. 1659 இல் இந்துப் பள்ளிக்கூடங்களையும் கோயில்களையும் இடிப்பதற்கு அவுரங்கசீப் கட்டளை பிறப்பித்தார். இதன் விளைவாகப் புனிதமிகு இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டன. அவ்விடங்களில் மசூதிகள் கட்டப்பட்டன. இவ்வாறு இடிக்கப்பட்ட கோயில்களுள் சிறப்பானவை காசி விசுவநாதர் கோயில், வடமதுரை கேசவராய் கோயில், குசராத்தின் புகழ்மிக்க சோமநாதர் கோயில் முதலியனவாகும். உதயபூர், சோத்பூர், அரித்துவாரம், அயோத்தி, பீசப்பூர், கூச்பிகார் எனும் பகுதிகளில் இருந்த எண்ணற்ற கோயில்கள் இடிக்கப்பட்டன. உதயபூர் பகுதியில் மட்டும் 235 கோயில்கள் மண்மேடாக்கப்பட்டன. சோத்பூரில் அழிக்கப்பட்ட கோயில்களில் இருந்து வண்டி வண்டியாகத் தங்கம் தில்லிமாநகருக்குக் கொண்டு செல்லப்பட்டது.
அவுரங்கசிப்
இந்துக்களின்மீது பயணவரியும் ‘செசியா’ வரியும் திரும்ப விதிக்கப்பட்டன. தீபாவளி, ஒலிப் பண்டிகைகளை இந்துக்கள் கொண்டாடாதவாறு, தடுக்கப்பட்டனர். அரசின் பெரிய பதவிகளில் இருந்து வந்த இந்துக்கள் நீக்கப்பட்டனர். எல்லாவகையிலும் இந்துக்களை மதமாற்றம் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
தம்முடைய சகோதரன் தாராசூகோ மணிமுடிதரிக்க இராசபுத்திரர்கள் உதவி செய்தவர் என்பதற்காக, இராசபுத்திரர்களைச் சந்தேகக் கண் கொண்டு அவுரங்கசீப் பார்த்து வந்தார். இதனோடு அவர்கள் இந்துக்களாக இருந்தமையாலும், ஒவ்வாத காரணங்கள் காட்டி அவர்களுடைய அரசுகளை அவுரங்கசீப் பறித்துக் கொண்டார். அக்பரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இராசபுத்திரர்களின் ஆதரவை இதனால் இவர் இழந்தார்.
சமயத் துன்புறுத்தல் கொள்கையின் ஒரு பகுதியாகச் சீக்கியருடைய கோயில்களும் இடிக்கப்பட்டன. ஒன்பதாவது சீக்கியச்சமய குருவான தேசு பகதூர், கொடுஞ் செயல்களை வெளிப்படையாகவே கண்டித்தார். இதனால், சிறைப்படுத்தப்பட்டு தில்லிக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இசுலாமிய சமயத்தினைத் தழுவுமாறு அவர் வற்புறுத்தப்பட்டார். தேசு பகதூர் இதற்கு உடன்படவில்லை. இதனால் சீற்றமுற்ற அவுரங்கசீப், தேசு பகதூரைக் கி.பி. 1675–இல் தூக்கிலிட்டார். அவருடைய மகன் குருகோவிந்த சிங்கு, பழிக்குப் பழிவாங்கத் துடித்தார்; சீக்கியரை, ஆற்றல்மிக்க படைவீரர் சமூகத்தினராக மாற்றினார். தம் வாழ்நாள் முழுவதும் மொகலாயரின் கொடுமையை எதிர்த்துக் குருகோவிந்தர் போரிட்டார். அவருடைய ஆண்மக்களை இசுலாமியர் சித்திரவதை செய்து சாகடித்தனர். ஆதலின், இசுலாத்தின் கடும் எதிரிகளாகச் சீக்கியரின் அணி திரண்டு எழுந்தது.
இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட நேர்மையற்ற செயல்களையும் கொடுமைகளையும் எதிர்த்துத்திட்டமிட்ட முறையான ஒரு எதிர்ப்புப் போராட்டம் கி.பி. 1668 அளவில் மதுராவில் (வடமதுரை) தொடங்கியது. சாட்டுகள் (Jats) எனப்படும் இனக்குழு மக்கள், கோகலா எனும் தலைவரின் கீழ்க் கலகம் செய்தனர். அப்பகுதியில் இருந்த இந்துக் கோயிலை இடித்தவனும் இந்துப் பெண்களைக் கவர்ந்து சென்றவனுமான அந்த வட்டாரத்தின் மொகலாய அதிகாரியைக் கொன்றனர். மொகலாயப் படை விரைந்து ஓடி வந்தது. கோகல் கண்டதுண்டமாக வெட்டப்பட்டான். அவனுடைய குடும்பத்தினர், வன்முறையில் இசுலாம் சமயத்திற்கு மாற்றப்பட்டனர். ஆயினும், இராசாராம் என்பவன் தலைமையில் சாட்டுகள் தொடர்ந்து கலகம் செய்தனர். உய்குர் கான் எனும் மொகலாயரின் படைத்தலைவனை அவர்கள் கொன்றனர். அக்பரின் கல்லறையைத் தாக்கி அழித்தனர். தொடர்ந்து நடைபெற்ற மோதலில் இத்தலைவன் உயிர் இழந்தான். எனினும், மற்றொரு தலைவனான சுராமன் தொடர்ந்து போரினை நடத்தி, வெற்றியும் பெற்றான். இறுதியில், பரத்பூர் அரசகுடும்பத்தை இவன் தோற்றுவித்தான். அவுரங்கசீப் ஆட்சியினை இந்தக் கலகம் பெரிதும் பாதித்தது.
நர்நால், மேவாட் எனும் பகுதிகளை ஆட்சிபுரிந்தவர்கள் ‘சத்நாமிகள்’ (Satnamis) எனப்பட்டனர். அவர்களுடைய பெயரே, அவர்கள் நல்ல (சத்) பெயர் (நாமி) உடையவர்கள் எனும் பொருளைத் தருவதாகும். அவர்கள் பொதுவாக அமைதியை விரும்புபவராவர். அந்த இனக்குழுவைச் சேர்ந்த ஓர் உழவனை மொகலாய அதிகாரிகள் கொடுமைப்படுத்தினர்; கொன்றும்விட்டனர். இதனால் சீற்றமுற்ற ‘சத்நாமிகள்’ பேரரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தனர். நர்நால் (Narnal) மாவட்டத்தையே தங்கள் கைவசம் கொண்டுவந்தனர். மொகலாயரின் பெரும்படை விரைந்து வந்தது. கடுமையான மோதல்களுக்குப் பிறகு, இக்கலகம் அடக்கியொடுக்கப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சத்நாமிகள் இக்கலகத்தில் கொலை செய்யப்பட்டனர்.
பந்தல்கண்டு மக்களும் மொகலாய அரசுக்கு எதிராக ஒன்று திரண்டனர்; சம்பல் ராய் தலைமையில் கொரில்லாப் போர் போன்ற முறையை அவர்கள் பின்பற்றினர். அவனுடைய மகன் சத்திரசால் மராட்டியத் தலைவன் சிவாசியினுடைய ஆதரவோடு, தொடர்ந்து போராடி வந்தான். கி.பி. 1705–இல் இவன் களிஞ்சர் கோட்டையைக் கைப்பற்றிக் கொண்டான். பிறகு, மாளவத்தைத் தாக்கினான். இவனோடு, அவுரங்கசீப், சமாதான உடன்பாட்டிற்கு வந்தார். இதன் விளைவாக மாளவத்தின் கிழக்குப் பகுதியில், சத்திரசால் ஒரு தனியரசை நிறுவினான்.
சத்திரபதி சிவாசி (Shivaji), தக்காணத்தில் ஓர் இந்து அரசினை நிறுவினார். இந்தியாவில் இருந்து, மொகலாயருடைய ஆட்சியை ஒழித்துக்கட்ட அவர் வஞ்சினம் உரைத்தார். கி.பி. 1663–இல், மொகலாயப் படைத் தலைவர், செயிட்டகானை எதிர்த்துப் போரிட்டுச் சிவாசி வெற்றியும் பெற்றார். தன்னுடைய கட்டை விரலையும், மகனையும் இழந்ததோடு பூனாவை விட்டுச் செயிட்டகான் தப்பி ஓடினான். மொகலாயப் பேரரசின் வளங்கொழிக்கும் துறைமுகமாக விளங்கியது சூரத்து. அதனைக் கி.பி. 1664–இல் சிவாசி தாக்கினார். கோடிக்கணக்கான விலைமதிப்புடைய பொருள்களை அவர் கொள்ளை அடித்தார். அடுத்த ஆண்டில் மராட்டியருக்கு எதிராக இராசா செயசிங்கு தலைமையில் 400,000 குதிரைப் படையை அவுரங்கசீப் அனுப்பி வைத்தார். இதற்கிடையில், புரந்தர் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட சிவாசி, மொகலாய அரசரின் தலைநகரான ஆக்ராவிற்குச் சென்று, பேரரசரைக் கண்டார். ஆனால் மீண்டும் சிவாசி, மொகலாயருக்கு எதிராகப் போர் முரசு கொட்டினார். சிவாசியும் அவருடைய வழித்தோன்றல்களும் தக்காணத்தில் மொகலாயப் பேரரசினைப் படுதோல்வி அடையச் செய்தனர். மராட்டியரால் உண்டான அச்சுறுத்தலை ஈடுகொடுக்க, பேரரசர் அவுரங்கசீப் 25 ஆண்டுகள் நிலையாகத் தக்காணத்தி- லேயே தங்கிப் போரிட நேரிட்டது. அவுரங்கசீப்பின் தக்காணக் கொள்கை, மொகலாயப் பேரரசின் வீழ்ச்சியை விரைவுபடுத்தியது.
தக்காணத்துப் பீசப்பூர், கோல்கொண்டா சுல்தான்கள், மராட்டியருக்கு மறைமுகமாக ஆதரவு தருகின்றனர் எனும் ஐயுறவை அவுரங்கசீப் கொண்டார். கடுமையான சன்னி முசுலிமான அவுரங்கசீப்பிற்குத் தக்காணத்தில் இரு ‘சியா’ முசுலிம் அரசுகள் தன்னாட்சி செய்வது பிடிக்கவில்லை. கி.பி. 1682–இல் இளவரசர் ஆசம் தலைமையில் பீசப்பூர் மீது மொகலாயர் படையெடுத்துச் சென்றனர். அதன் சுல்தானான சிக்கந்தர் ஆதில் சா, தம்மைத்தாமே தற்காத்துக் கொண்டார். ஆனால், கி.பி. 1686–இல் அவுரங்கசீப், மாபெரும் படையோடு பீசப்பூர் மீது படையெடுத்தார். இவருடைய தலைமையில் கடுமையான போர் நடந்தது. இறுதியில் பீசப்பூர் வீழ்ச்சியுற்றது. தௌலதாபாத் கோட்டையில் சிக்கந்தர் ஆதில் சா சிறை வைக்கப்பட்டார்.
அக்காலத்தில், கோல்கொண்டாவை அபுல் ஆசன் என்பவர் ஆண்டு வந்தார். இந்துக்களையே அவர் அமைச்சர்களாகக் கொண்டிருந்தார். இதனால், மொகலாயப் பேரரசருக்குக் கோல்கொண்டா சுல்தான் மீது வெறுப்புண்டாயிற்று. கி.பி. 1685–இல் நடந்த போசில், பீசப்பூர் சுல்தானுக்கு அவர் படை உதவி செய்தார். மற்றும் சிவாசிக்கும் அபுல் ஆசனுக்கும் இடையே நட்புறவு நிலவுவதை அவுரங்கசீப் அறிந்து கொண்டார். எனவே, பேரரசர் கோல்கொண்டாவை முற்றுகை இட்டார். ஆசனின் பெரிய அதிகாரி ஒருவனுக்கும் பெரும் பொருளை இலஞ்சமாகக் கொடுத்து, திடுமெனக் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிடுமாறு செய்தார். இதனால், மொகலாயப்படை கோல்கொண்டாவை எளிதில் கைப்பற்றியது. அதன் சுல்தான் சிறைப்படுத்தப்பட்டார்.
ஆனால், எதிர்பார்த்த விளைவுகளைக் கோல்கொண்டா, பீசப்பூர் கைப்பற்றுதல் உண்டாக்கவில்லை. தெற்கே கிருட்டிணா ஆறு வரையில் மொகலாயப் பேரரசு பரவியது உண்மை. ஆனால், வடக்கே நெடுந்தொலைவில் உள்ள ஒரு மையத்தில் இருந்து, ஒருவனே எல்லாவற்றையும் கவனித்து, ஆட்சிபுரிவதற்கு இயலாத வகையில் மொகலாயப் பேரரசு விரிந்தும் பரந்தும் இருந்தது. இதனால், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது அரிய செயலாயிற்று. பல பகுதிகளை மராட்டியர் தாக்குவதற்கு இந்த விரிந்துபட்ட அரசின் அமைப்பு எளிதில் இடம் தந்தது.
இடையறாத தக்காணப் போர்களில், மொகலாயப் பேரரசின் கருவூலம் கரைந்து போயிற்று. ஊதியம் போதிய அளவிற்குக் கிடைக்காமையால், போர் வீரர்கள் பட்டினியால் வாடினர்; கிளர்ச்சி செய்தனர். வங்காளத்தில் இருந்து, திறமைமிகு திவன் மூர்சி கூலிகான் ஆண்டுதோறும் அனுப்பிவைத்த வரிப்பணமே, பேரரசரின் குடும்பச் செலவிற்கும் படைச் செலவிற்கும் பயன்படுத்தப்பட்டது. தம் வாழ்நாளின் கடைசிப் பகுதியில், இந்த வருவாயைத் தவிர, வேறு பொருள் வருவாயின்றி அவுரங்கசீப் அல்லல்பட்டார். அவருடைய ‘தக்காணக் கொள்கை’, பேரரசை அழிக்கும் வேர்ப்புழுவாக அமைந்தது.
இவ்வாறு தம்முடைய அழிவை, அரும்பாடுபட்டுத் தம்முடைய முன்னோர்கள் நிறுவிய பேரரசின் அழிவை, அவுரங்கசீப் தம் சமய வெறியாலும் தெளிவற்ற சிந்தனையாலும் முறையற்ற செயல்களாலும் தேடிக் கொண்டார்.க.த.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 908)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pvvm5fkn/
தமிழ்“அவுரங்கசீப்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pvvm5fkn/APA
Oliyon Research. (2026). அவுரங்கசீப். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pvvm5fkn/MLA
"அவுரங்கசீப்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pvvm5fkn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment