உயர்த்தி
uyartti
ஆங்கிலத்தில் லிஃப்ட் (Lift) 'எலிவேட்டர்' (Elavator) என்றெல்லாம் அழைக்கப்படும் பாரந்தூக்கி அமைப்பே 'உயர்த்தி’ எனத் தமிழில் அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தில் லிஃப்ட் (Lift) 'எலிவேட்டர்' (Elavator) என்றெல்லாம் அழைக்கப்படும் பாரந்தூக்கி அமைப்பே 'உயர்த்தி’ எனத் தமிழில் அழைக்கப்படுகிறது.
உயரமாக அமைந்துள்ள பல மாடிக் கட்டிடங்களுக்கு படிகளில் ஏறிச் செல்வதென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனால் மிகுதியான களைப்பு ஏற்படுவதோடு ஏறி இறங்க அதிக நேரமும் பிடிக்கும். இவ்விரண்டையும் தவிர்க்கப் பயன்படும் நவீன சாதனமே உயர்த்தியாகும். இதன்மூலம் பல அடுக்குக் கட்டிடங்களின் மாடிகளுக்குப் பொருள்களை கொண்டு செல்லவோ மனிதர்கள் ஏறி இறங்கவோ எளிதாக அமைகிறது.
இத்தகைய அமைப்பிலான சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே ரோமானியர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமை களைப் பயன்படுத்தினார்கள். அதன்பின் 17ஆம் நூற்றாண்டில் வேலயர் என்ற ஃபிரெஞ்சு நாட்டுக்காரர் 'பறக்கும் நாற்காலி' ஒன்றை அமைத்தார். இதன்மூலம் பிரயாணிகள் உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளைக் கொண்டும் இழுக்கச் செய்தார்கள். அதன்பின் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (Hydraulic elevators) உருவாக்கபட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை ஒரு நிமிடத் திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது.
இன்றைய வடிவிலான உயர்த்தியை 1880 -இல் வெர்னர் சீமன்ஸ் என்பவர் ஜெர்மனியில் உருவாக்கினார். அதன் பின் சில திருத்தங்களுடன் வில்லியம் பாக்ஸ்டர் என்பவர் அமெரிக்காவில் அமெரிக்காவில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்ற திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
உயர்த்திகள் அமைக்கப்பட்டுள்ள பல மாடிக்கட்டிடத்தில் உச்சிப்பகுதியில் மின்சார மோட்டார் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மின்சார மோட்டாரை இயக்கினால் அதோடு இணைக்கப்பட்டுள்ள சக்கரம் மெதுவாகச் சுழலும், அப்போது அச்சக்கரத்தின்மீது வலுவான இரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அவ் விரும்புக் கயிற்றின் மற்றொரு முனையில் மக்கள் ஏறிச் செல்லும் பெட்டி அமைந்திருக்கும். சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும். பெட்டியின் மறுமுனையில் பெட்டியைவிடச் சற்றுக்கனம் குறைந்த இரும்பு எடை ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இது 'எதிர் எடை’ என்று அழைக்கப்படும். பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும். பெட்டி கீழே இறங்கும் போது இந்த எடை மேலே போகும். இவ்வாறு இந்த எதிர் எடையைப் பயன்படுத்தும்போது அதிக அளவு சக்தியானது உயர்த்தியை இயக்கத் தேவைப்படாது. குறைந்த அளவு சக்தியே போதும். எதிர் எடைக்கும் உயர்த்திப் பெட்டியின் கனத்துக்கும் மிகச்சிறு அளவே வேறுபாடு இருக்கும். இந்தச் சிறு வேறுபாட்டிற்கேற்ப மின்சக்தி பயன்படுத்தப்பட்டால் போதும்.
மக்கள் ஏறிச்செல்லும் உயர்த்திகளில் மின்சார மோட்டாரை இயக்கும் பொத்தான்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் மாடிகளின் எண்களைக் குறிக்கும் பொத்தான்களும் இருக்கும். நாம் உயர்த்தியில் நின்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தானை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும். இதனால் நாம் விரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும், ஆட்கள் இல்லாத உயர்த்தியை நாம் எந்த மாடிக்கும் பொத்தானை அழுத்தி வரவழைத்து ஏறிச் செல்ல முடியும். தற்போது ஒற்றைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கும் இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்குமெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. மற்றும் மாடிக் கடைகள், விமான தளங்கள், தரையடி இரும்புப்பாதைகள் போன்ற இடங்களின்படி ஏறி இறங்கும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் ஏறி இறங்க மின்சார இயந்திரப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஏறி நின்றால்போதும் நாம் போக வேண்டிய இடத்துக்குக் கொண்டு சென்று சேர்த்துவிடும். இத்தகைய ஏற்ற இறக்கப் படிக்கட்டு 'எஸ்க லேட்டர்’ என அழைக்கப்படுகிறது.
மூலம் · source: இளையர் அறிவியல் களஞ்சியம் — மணவை முஸ்தபா — CC0 1.0 (public domain dedication) (பக். 89)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pvc5p7dr/
தமிழ்“உயர்த்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pvc5p7dr/APA
Oliyon Research. (2026). உயர்த்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pvc5p7dr/MLA
"உயர்த்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pvc5p7dr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment