பசையெடுப்பான் குருவி
pacaiyeṭuppāṉ kuruvi
பறவையினங்களின் சிட்டிடே குடும்பத்தில் 15 வகைப் பசையெடுப்பான் குருவிகளும் (Nuthatches), 13 வகை மரங்கொத்திகளும் (Creepers) வகைப் படுத்தப் பட்டுள்ளன.
பறவையினங்களின் சிட்டிடே குடும்பத்தில் 15 வகைப் பசையெடுப்பான் குருவிகளும் (Nuthatches), 13 வகை மரங்கொத்திகளும் (Creepers) வகைப் படுத்தப் பட்டுள்ளன. முதலில் அவற்றைக் கொட்டை உடைப்பான்கள் (Nut–hacks) என்றே அழைத்தனர். இப்பறவை தாவரங்களின் கொட்டைகளைத் தேர்ந்த விறகு வெட்டி போல் மரத்தில் அடித்துப் பிளந்து தின்னும். சில நேரங்களில், மரங்களின் பட்டைகளைப் பிளந்து, பூச்சிகளைப் பிடித்துத் தின்பதால், மரப் பசையை எடுப்பது எனப் பொருள் படும். பசையெடுப்பான் என்று குறிப்பிடுகின்றனர். ஐரோப்பா, ஆசியா, அமெரிக்கப் பகுதிகளில் இது மிகுதியாகக் காணப் படுகிறது.
பசையெடுப்பான் குருவியின் அலகு தலையை விட நீண்டு நேராகவும், தட்டையாகவும் நுனியில் கூராகவும் உள்ளது. மூக்குத் துளைகள் அலகின் நுனிப் பகுதியில் பூஞ்சிறகுகளால் (bristles) நன்கு மூடப் பட்டிருக்கும். சதுர வடிவமான குட்டையான வாலையும் நீண்ட இறக்கைகளையும் உடையது. இவ்வினத்தைச் சேர்ந்த செம்பழுப்பு வயிற்றுப் பசையெடுப்பாலும், வெல்வெட் நெற்றிப் பசையெடுப்பாலும், தென்னிந்தியப் பகுதிகளில் வாழ்கின்றன. காஷ்மீர்ப் பசையெடுப்பான், நாகாப் பசையெடுப்பான், சிவப்பு வயிற்றுப் பசையெடுப்பான், வெள்ளைக் கறுப்புப் பசையெடுப்பான், இமாலய வெள்ளை வால் பசையெடுப்பான், அஸ்ஸாம் வெள்ளை வால் பசையெடுப்பான் ஆகியன காஷ்மீர், இமயமலை, சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், பஞ்சாப், வங்காளம் ஆகிய பகுதிகளில் காணப் படுகின்றன.
தென்னிந்திய இலையுதிர்க் காடுகளிலும், ஊர்ப் புறங்களிலும், மாந்தோப்புகளிலும் காணப் படும் செம்பழுப்பு மார்புப் பசையெடுப்பான் சிட்டுக் குருவியை விடக் சிறியதாக 15 செ.மீ. நீளம் பெற்றிருக்கும். உடலின் மேற்பகுதி நீலந் தோய்ந்த கரும் சாம்பல் நிறம் கொண்டது. அலகடியிலிருந்து கண்கள் வழியாகப் பிடரி வரை கருங்கோடுகள் காணப் படும். கன்னங்கள் வெண்மையாகவும், மார்பு, வயிறு ஆகியன செம்பழுப்பு நிறமாகவும் இருக்கும். அடிமரங்களிலும், கிளைகளிலும் சுண்டெலி போல் தவழ்ந்து ஓடி, மரப் பட்டைகளிடையே மறைந்திருக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து உண்ணும். மார்ச்–ஜுலையில் இனப் பெருக்கம் செய்யக் கூடிய இப்பறவை, மரப் பொந்துகளில் இலை, கம்பளி நூல் கொண்ட மெத்தையமைத்து, முட்டைகளையிடும். முட்டை வெண்மையாகச் சிவப்புப் புள்ளிகளாகக் காணப் படும். முட்டையிட்ட தாய்ப் பறவை மட்டுமே நுழையும் அளவு இடம் விட்டுப் பின் மரப் பொந்துகளின் நுழை வாயிலைச் சேற்றால் பூசி, மறைத்து விடும். இப்பறவை அடை காத்தலைப் பற்றி, இரு வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. பேக்கர் என்பார், ஆண், பெண் இரு பறவைகளும் அடை காக்கும் என்றும், ஹில் என்பார் பெண் பறவை மட்டும் கூட்டுக்குள் தொடர்ந்து உட்கார்ந்து, அடை காக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். முட்டைகளிலிருந்து 11 அல்லது 12 நாள்களுக்குள் குஞ்சுகள் வெளி வருகின்றன.
வெல்வெட் நெற்றிப் பசையெடுப்பான் குருவி, மேற்கு, கிழக்குத் தொடர்ச்சி மலைச் சார்ந்த பகுதிகளில் சம வெளிகளிலும், பசுஞ் சோலைகளிலும், மிகப் பொதுவாகக் காணப் படும். சிட்டுக் குருவி அளவே உடைய இதன் உடலின் மேற்பகுதி ஊதா கலந்த நிறமாகவும், கீழ்ப் பகுதி சாம்பல் தோய்ந்த இளஞ் சிவப்பாகவும் இருக்கும். மோவாயும், தொண்டையும், வெண்மை நிறமுடையவை. நெற்றி வெல்வெட் கறுப்பாக இருக்கும். கண்ணின் மேல் பிடரி வரை, ஒரு கரும் புருவக் கோடு காணப் படும். பெண் பறவைக்கு இப்புருவக் கோடு காணப் படாது. மரங்களின் பட்டைகளிடையே காணப் படும் பூச்சிகளை ஐந்தாறு பறவைகள் சேர்ந்து சிறு,சிறு கூட்டமாகப் பிடித்துத் தின்னும். மரங் கொத்தியைப் போன்று, நன்கு மரங்களில் கொத்திய படி ஏறும். அந்தி சாய்ந்த பின்னும் கூட, இதன் குரலொலியைக் கேட்கலாம். இது மே மாதத்தில், இனப் பெருக்கம் செய்கிறது. கூடுகளின் நுழை வாயிலைச் சேறு கொண்டு பூசிச் சிறியதாக்குகிறது. 4–5 முட்டைகளை இடுகிறது. இம்முட்டை 4, 5 என இருந்தாலும், இப்பறவை எண்ணிக்கையில் குறைவாக இருப்பதற்கு, இப்பறவையின் குஞ்சுகள் கூட்டின் சிறிய வாய் வழியே வர முயலும் போது, கால், இறகு ஆகியவை முறிவது ஒரு காரணமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர். —கோவி. இராமசுவாமி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 431)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/puurfd2h/
தமிழ்“பசையெடுப்பான் குருவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/puurfd2h/APA
Oliyon Research. (2026). பசையெடுப்பான் குருவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/puurfd2h/MLA
"பசையெடுப்பான் குருவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/puurfd2h/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment