அவரோசு
avarōcu
அராபியத் தத்துவ அறிஞராவார்.
அராபியத் தத்துவ அறிஞராவார். இவர் இசுபெயின் (Spain) நாட்டிலுள்ள கார்டோபா (Cordoba) என்னும் ஊரில் பிறந்தார். ஐரோப்பியத் தத்துவ அறிஞர்களின் வரிசையில் சிறந்தவராக இவர் கருதப்படுகிறார். அவரோசு (Averroes) அரிசுடாட்டிலின் நூல்களுக்கு உரை எழுதியவர். அரிசுடாட்டிலின் அறிவுரைகளை நன்கு கற்றுத் தெளிந்த பிறகு தாமே சில நூல்களை வெளியிட்டுள்ளார்.
கிரேக்க மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பிளேட்டோ, அரிசுடாட்டில் போன்றவர்கள், மக்கள் அரசாட்சிக்கு உட்பட்டுச் சமூக வளர்ச்சியிலும் எவ்வாறு பங்கு பெறுகிறார்கள் என்பதை இவர் தம் நூலிலும் திறனாய்வுக் கட்டுரைகளிலும் சுட்டியுள்ளார். இசுலாமிய மோர்பெக்கைச் சார்ந்த வில்லியம் (William of Moorbeke) என்பவரைக் கிரேக்க மூல நூலிலிருந்து புதுமொழி பெயர்ப்புச் செய்வதற்கு இணங்கச்செய்தார். அரிசுடாட்டிலின் அடிப்படைத் தத்துவத்தையும் கருத்தையும் பின்பற்றியவர். இவர் தத்துவத்தின் ஒரு பிரிவான புலன்கடந்த இயலினைக் (Metaphysics) கூறுகையில், ‘மனித அறிவுக்கு அப்பாற்பட்டதுதான் புலன் கடந்த அறிவியல்; இதில் மனிதன் நிலை வரையறுக்கப்பட்டது; கடவுள்தான் இவ்வுலகினைப் படைத்தவர்; அதை முதன் முதலில் பருப்பொருளிலிருந்து (Matter) உருவமாகிய உலகத்தை (Form) படைத்தார்’ என்று கூறுகிறார். மனிதனின் தனிச்சிறப்பு, ஐம் பொறிகளின் உதவியினால் வெளி உலகப் பொருளைப் பற்றி அறிவதாகும். உலகம் நிலையானது. இவ்வுலகத்தில் தோன்றும் உயிர் உள்ளவை, உயிர் அற்றவை, அனைத்தும் அழியும் தன்மையுடையன.
உலகம் என்ற அமைப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமாக ஒருவர் இருக்க வேண்டும் என்பது பொது விதி. அதில், அவ்வுலகினை இயக்கும் காரண கருத்தாவும் உள்ளார். கடவுள் சூனியத்திலிருந்து உலகமாகிய உருவத்தை உண்டாக்கினார். இது கடவுளின் ஆக்கச் செயல்களுள் ஒன்று. இதில் மனிதன் தனது பகுத்தறிவின் வாயிலாக ஒன்றிலிருந்து ஒன்றைப் புரிந்து கொண்டு செயற்படுகிறான் என்பது தனிச் சிறப்பாக நிகழ்ந்து வருகிறது.
உலகில் உயிருள்ள பொருளின் இறப்பின்மை பற்றிய இவரது கருத்து சிக்கலுக்குரியது. இவரது அறிவின் செயல்திறன், புரிந்து கொள்ளும் இயல்பு முறையை விளக்குகிறது.
அவரோசு தாமே தத்துவத்திற்கும் இசுலாமிய சமயத்திற்குமிடையில் ஏற்பட்ட உண்மையான பூசல்களை மறுத்தார். ஆனால், இவை இரண்டும் உண்மை தான். இவை இரண்டிலும் ஒரே ஒரு உண்மைதான் உண்டு. தத்துவம் தனது உண்மையினை அறிவியல் முறையின் வாயிலாக அளிக்கிறது.
ஆனால் இசுலாமிய சமயப்படி அம்மதத்தின் மறை நூலான குரான் (Koran), அறிவியல் முறைப்படி விளக்கம் அளிப்பது இல்லை. அது மிகுந்த கற்பனைத் திறத்தால் உண்மையினை வெளிப்படுத்துகிறது. சில வேளைகளில் குறியீட்டு மொழியினால் இசுலாம் உண்மையினை விளக்குகிறது. அற ஒழுக்கத்திற்கும் சமயக் கல்விக்கும் குரான் ஒரு பொருத்தமான சமய மறை நூலாக விளங்குகிறது.
அவரோசு கி.பி. 1230-ஆம் ஆண்டிற்குப் பிறகு இலத்தின், ஈபுரு ஆகிய மொழிகளில் செய்த மொழிபெயர்ப்புப் பணிகள், கிறித்துவ ஐரோப்பா முழுவதும் தெரிய வந்தன. இவரது அறிவுக் கோட்பாடும் உலகம் நிலையானது என்ற கோட்பாடும் கி.பி. 1225-ஆம் ஆண்டிற்குப் பிறகு கருத்து மாறுபாடுகளுக்கு உட்பட்டன.
அக்குவினசு அவரோசின் கருத்துகளைத் திறனாய்வு செய்தார். அவரோசிடமிருந்து அக்குவினசு நிறையச் செய்திகளை அறிந்து கொண்டார். அவரோசு கடவுள் நம்பிக்கையற்றவர் என்று மக்களால் கூறப்பட்ட கருத்தை அக்குவினசு (Aquineces) மறுத்தார். புதிய தத்துவ அறிஞர்கள், அவரோசு தத்துவ விளக்கத்திற்கு ஒரு தூண் போன்றவர் எனவும், பகுப்பாய்வு மதி நுட்பம் கொண்டவர் எனவும் கூறினார்கள். இவர் கி.பி. 1198–ஆம் ஆண்டு காலமானார்.மு.மு.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 899)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pta9pk9u/
தமிழ்“அவரோசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pta9pk9u/APA
Oliyon Research. (2026). அவரோசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pta9pk9u/MLA
"அவரோசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pta9pk9u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment