அரசியல் முறைமைக்கு உட்படுகை
araciyal muṟaimaikku uṭpaṭukai
அல்லது அரசியலமைப்பில் பற்றுடைமை (Constitutionalism) என்பது, அரசாங்கத்தை நிறுவி, அதற்கு அதிகாரத்தையும் பணிகளையும் அளிக்கிற அரசியலமைப்புச் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் முற்றிலும் உடன்பட்டு அல்லது கீழ்ப்படிந்து இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறது.
அல்லது அரசியலமைப்பில் பற்றுடைமை (Constitutionalism) என்பது, அரசாங்கத்தை நிறுவி, அதற்கு அதிகாரத்தையும் பணிகளையும் அளிக்கிற அரசியலமைப்புச் சட்டங்களுக்கும் விதிகளுக்கும் முற்றிலும் உடன்பட்டு அல்லது கீழ்ப்படிந்து இருக்கும் நிலையைக் குறிப்பிடுகிறது. அரசாங்கத்தைவிட சட்டத்துக்கு இருக்கும் மேலான நிலையை இக்கருத்து உணர்த்துகிறது. இதிலிருந்து அரசாங்க அதிகாரங்கள் கட்டுப்பாடு அல்லது வரம்பு அற்றவை அல்ல என்பதும், அவையெல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளால் வரம்புக்குட்படுத்தப்பட்டுள்ளன என்பதும் தெரிகின்றன. அரசியலமைப்பு என்பது அரசாங்கத்தின் அதிகாரங்களும், குடிகளின் உரிமைகளும், இவைகளை முரண்பாடின்றி இணைப்பதற்குரிய விதிகளும் அடங்கிய சட்டத்தொகுப்பு ஆகும். அரசியலமைப்பு விதிகளுக்கு முழுதுமாகக் கட்டுப்பட்டிருக்கும் நிலையே அரசியல் முறைமைக்கு உட்படுகை (Constitutionalism) எனப்படும். இதிலிருந்து நாட்டின் அடிப்படைச் சட்டமாக ஓர் அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது என்பதனையும், அரசாங்கத்தின் தன்விருப்பமான அல்லது எதேச்சாதிகாரமான செயல்களுக்கு வரம்புகள் உண்டு என்பதனையும், ஆளப்படுவோரின் உரிமைகளுக்குப் பொறுப்பு அல்லது உத்தரவாதம் அளித்தல் என்பதனையும், நாட்டின் இறைமை, அதிகாரம் செயற்படும் வழிகளை வரையறுத்துக் கூறுதல் என்பதனையும் உய்த்துணரக் கூடும்.
அரசியல் முறைமைக்கு உட்படுகை என்ற கருத்து, அரசியலமைப்புக்கு உட்பட்ட அல்லது அரசியலமைப்புச் சட்டத்தினால் வரம்புபடுத்தப்பட்ட அதிகாரங்களை உடைய அரசாங்கம் (Constitutional Government) என்ற கருத்தினுக்குத் தோற்றுவாயாக இருக்கிறது. எனவே, அரசியலமைப்புக்கு உட்பட்ட அரசாங்கம் என்னும் கருத்து, எதேச்சாதிகார அரசாங்கத்துக்கு மாறான குடியாட்சி அரசாங்க முறையையும் உணர்த்துகிறது. குடியாட்சி அரசாங்கங்கள் எல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தால் வரம்புபடுத்தப்பட்ட அதிகாரங்களை உடைய அரசாங்கங்கள் தாம். ஆனால் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட எல்லா அரசாங்கங்களும் குடியாட்சி அரசாங்கங்கள் ஆகமாட்டா. ஓர் அரசாங்கத்துக்கு அடிப்படையாக ஓர் அரசியலமைப்புச் சட்டம் இருக்கலாம். ஆனால் அச்சட்டத்தில் சுதந்திரமான தேர்தல்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம், சட்டமன்றத்துக்குப் பொறுப்பான நிருவாகம், நீதிமன்றத்தின்
சுதந்திரம் முதலிய குடியாட்சிக் கூறுகள் கூறப்படாமலிருக்கலாம். அதாவது, எதேச்சாதிகார அரசாங்கத்துக்கு (மக்களால் கட்டுப்படுத்தப்படாத அரசாங்கத்தை நிறுவுவதற்கு) ஓர் அரசியலமைப்புச் சட்டத்திலேயே வழிசெய்யப்பட்டிருத்தல் கூடும். எடுத்துக்காட்டாகப் பிரிட்டிசாசின் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் செயற்பட்ட அரசாங்கங்கள் எதேச்சாதிகாரமாக (அதாவது மக்களுக்குப் பொறுப்பாக இல்லாமல்) செயற்படுவதற்குக் கி.பி. 1861, 1892, 1909–ஆம் ஆண்டுகளில் பிரிட்டிசுப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட இந்தியக் கவுன்சில்கள் சட்டங்கள் (Indian Councils acts) வழிசெய்தன. எனவே இந்திய அரசாங்கத்தை நிறுவிய இவையெல்லாம் அரசியலமைப்புச் சட்டங்கள் (Constitutional laws) என்றும், இவற்றின்படி அமைக்கப்பட்ட இந்திய அரசாங்கம் ஒரு குடியாட்சி அரசாங்கம் ஆகாது என்றும், அது ஓர் எதேச்சாதிகார அரசாங்கமே என்றும் கூறலாம்.
அரசியல் முறைமைக்கு உட்படுகை என்பதைப் பற்றி மூன்றுவகையான கருத்துகள் இருக்கின்றன. முதலாவது அரசியலமைப்புக்கு உட்படுகைபற்றி மேற்கத்தியக் கருத்து, அரசியலமைப்பு என்பது ஒரு குறிக்கோளை மட்டும் கூறுவது ஆகாது; அது அந்த நோக்கத்தை அடையும் வழிகளையும் கூறுவது ஆகும். அது கூறும் நோக்கம் மக்களுடைய பாதுகாப்பும் மக்களுடைய உரிமைகளைக் காப்பதும் ஆகும்; அது மதிப்பீட்டு ஆய்வுக்கு உட்படாததாகவும் (Value free), மதிப்பீட்டாய்வுக்கு உட்பட்டும் (Value laden), குறிக்கோளியல்பு உடையதாகவும் (Normative), செயலறிவு சார்ந்ததாகவும் (Empirical) இருக்கிறது. இக்கருத்தின்படி அரசாங்கம், அரசியலமைப்பின் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டிய கடமையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் அரசுக்கு ஓர் அரசியலமைப்புச் சட்டம் உண்டு. இந்தச் சட்டத்தின் வாயிலாக அரசாங்கம் ஒரு வரம்புக்குட்பட்ட அரசாங்கமாகச் செயற்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டுகளாக, பிரிட்டிசு, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகியவற்றின் அரசாங்கங்களைக் கூறலாம். இவற்றில் அரசியலமைப்புச் சட்டமே தலைமையானது; அதனால் வரம்புக்கு உட்படுத்தப்பட்டுத்தான் அரசாங்கம் இயங்குகிறது. பிரிட்டனில் வயதுவந்தோருக்கு வாக்குரிமை, சுதந்திரமான தேர்தல்கள், பாராளுமன்றத்துக்குப் பொறுப்புடைய நிருவாகம், சுதந்திரமான நீதித்துறை ஆகிய குடியாட்சிக் கூறுகளை உடைய அரசியலமைப்பு இருக்கிறது. இதற்கு ஏற்பவே அரசாங்கம் செயற்படுதல் வேண்டும்; எனவே அரசியலமைப்புத்தான் அரசாங்கத்தைவிட உயர்வானது. அதுவே குறிக்கோளும் ஆகும். அமெரிக்க நாட்டிலும் குடியாட்சி அரசாங்கத்தை நிறுவியுள்ள அரசியலமைப்புச்சட்டந்தான் மேலானது.
அரசியலமைப்புக்கு உட்படுகையைப்பற்றி சோவியத்தின் கருத்து இண்டாவது வகையாகும். இதன்படி அரசியலமைப்பு என்பது ஒரு நோக்கம் அல்லது குறிக்கோள் அன்று; அது “விஞ்ஞான சோசலிசம்” என்னும் குறிக்கோளை அடைவதற்குரிய ஒரு வழியேதான். எனவே அஃது அரசாங்கத்தைவிட மேலானது ஆகாது. தொழிலாளருடைய சருவாதிகாரத்தினால் கையாளப்படக்கூடிய ஒரு கருவியாகத் தான் உள்ளது. சோவியத்துச் சட்டத்துக்குட்பட்டவையே மற்றெல்லாச் சட்டப் பிரிவுகளும் ஆகும். எனவே இது மேற்கத்திய அரசியலமைப்புக்கு உட்படுகையை ஒத்துக்கொள்ளவில்லை.
அரசியலமைப்புக்கு உட்படுகையைப் பற்றிய மூன்றாவது கருத்து வளர்ந்து வரும் நாடுகளில் (Developing Countries) காணப்படுகிறது. இது மேற்கத்தியக் கருத்துக்கும் சோவியத்துக் கருத்துக்கும் இடைப்பட்ட கருத்தாகும். இது அரசியலமைப்பை உயர்வானதாகக் கருதினாலும், அதனை ஆளும் கட்சியார் தம் விருப்பம்போல் மாற்றக் கூடியதாகவும் கருதுகிறது.
அரசியலமைப்புக்கு உட்படுகை என்ற போக்கு வெற்றியாகச் செயற்படுவதைப் போர், நெருக்கடி நிலை, சமூக– பொருளாதார நிலைகள் சீர்கெடுதல் ஆகிய காரணிகள் தடுக்கின்றன. போர்க்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு வேண்டியவற்றைச் செய்யும் போது அரசாங்கம் துல்லியமாக அரசியலமைப்பு விதிகளைப் பின்பற்ற இயலாமல் சூழ்நிலைகள் தடுக்கின்றன. கட்சிப் பூசல்கள், வேலை நிறுத்தங்கள், கலகங்கள் முதலியவற்றால் அரசாங்கம், அரசியலமைப்பு விதிகளை ஒட்டிச் செயற்பட முடியாமற் போகிறது. பல்வேறு சமூக வகுப்புகளுக்கிடையேயும், நல்லுறவு ஏற்படாமல் வருப்புப் பூசல் தோன்றும்போதும், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பாருக்குத் தங்கள் உரிமைகளைக் கையாளக் கூடிய ஆர்வம் இல்லாத நிலையிலும், அரசாங்கம் அரசியலமைப்பு விதிகளையொட்டிச் செயற்பட முடியாத நிலைமை உண்டாகிறது. அரசியலமைப்புக்கு உட்படுகை என்ற நிலையை வளர்ப்பதற்கு ஏற்ற காரணிகளும் இருக்கின்றன. அவற்றுள் முதலாவது, தேசியம் என்னும் உணர்வு ஆகும். இந்த உணர்வு மக்களிடையே, அவர்கள் எல்லோரும் ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்தையும் ஒற்றுமையையும் தோற்றுவிக்கிறது. இதனால் நாட்டின் அரசியலமைப்னாப் பின்பற்றியே அரசாங்கம் செயற்படுதல் வேண்டுமென்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இரண்டாவது, குடியாட்சி முறையும், வரம்புக்குட்பட்ட அரசாங்கம் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அரசியலமைப்புக்கு உட்படும் போக்கைக் குடியாட்சி முறை வலுப்படுத்துகிறது. மூன்றாவது, சோசலிசக் கோட்பாடு அரசியலமைப்புக்கு உட்படுகை என்ற போக்கை வலுப்படுத்துகிறது. சோசலிசக் கருத்துகளை அரசியலமைப்புக்குள் புகுத்தினால், அக்கருத்துகளை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகிறது. நான்காவது, கூட்டாட்சி அரசியலமைப்பும் இத்தகைய நிலைக்குச் சாதகமாக இருக்கிறது. இவ்வரசியலமைப்பில், நடுவண் அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் அரசியலமைப்புச் சட்டத்தினால் தத்தமக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைக் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. ஆகையால் இவை அரசியலமைப்பு விதிகளுக்கு மாறாகச் செயற்படுதல் இயலாது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜந்தாவது, சர்வதேசக் கோட்பாடு (Internationalism), ஒரு நாட்டின் அரசாங்கம், மற்ற நாடுகளின் அரசாங்கங்களின் உரிமைகளை மதித்து நடத்தல் வேண்டும் என்றும், அப்பொழுது தான் அதனுடைய உரிமைகள் மற்றவற்றால் மதிக்கப்படும் என்றும் தெளிவாக உணர்த்துகிறது.பா.சூ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 708)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pt78tac8/
தமிழ்“அரசியல் முறைமைக்கு உட்படுகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pt78tac8/APA
Oliyon Research. (2026). அரசியல் முறைமைக்கு உட்படுகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pt78tac8/MLA
"அரசியல் முறைமைக்கு உட்படுகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pt78tac8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment