சமூகத்திலுள்ள எல்லாச் செல்வ வளங்களும் தனியாருடைய உடைமைகளாக இல்லாமல், சமூகத்தவரனைவருக்கும் பொதுவுடைமையாக ஆக்கப்படுதல் வேண்டும். யாவருக்கும் அச்செல்வ வளங்களோடு தமது உழைப்பைக் கலக்கவும், உழைப்பின் பயன்களைத் துய்க்கவும் சமமான உரிமையும் வாய்ப்பும் இருத்தல் வேண்டும். இதுவே சமநிலைக் கோட்பாட்டின் சுருக்கமான பொருள் ஆகும். இத்தகையய சமநிலைக் கோட்பாட்டைப் பொதுவுடைமைக் கருத்தாக வடித்தெடுத்து ஓர் அரசியல் கோட்பாடாக முதல் முதலிற் கூறியவர் கி.மு. ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிளேட்டோ என்ற கிரேக்க அரசியற் சிந்தனையாளராவர். அடுத்து கி.பி. 1477–ஆம் ஆண்டிற்கும் கி.பி. 1535–ஆம் ஆண்டிற்கும் இடையில் வாழ்ந்த சிறந்த ஆங்கிலக் கலை மறுமலர்ச்சி எழுத்தாளரும் (English Renaissance Writer), மனிதப் பற்றாளருமாகிய (Humanist) சர் தாமசு மூர் (Sir Thomas More) என்பவர் இலத்தீன் மொழியில் கி.பி. 1515–ஆம் ஆண்டில் எழுதி, 1516–ஆம் ஆண்டில் வெளியிட்ட தமது ‘உடோப்பியா’ (Utopia) என்ற நூலில் கூறியுள்ள சமநிலைக் கருத்துகள், ‘உடோப்பிய சமநிலைக் கோட்பாடு’ என்று கூறப்படும். உடோப்பியா என்ற சொல் எந்தவிதமான தவறும் அல்லது குறையும் இல்லாத பொருள்களெல்லாவற்றையும் தன்னிடத்தே உள்ள கற்பனை உலகு என்று பொருள்படும். இது மிகச் சிறந்த பொருளாதார, சமூக நிலைகளையுடைய ஒருவகைச் சமுதாயத்தைக் குறிப்பிடுவதாகும். ஆகையால் செயற்படுத்த இயலாத, கருத்தளவாகவே உள்ள சீர்திருத்தத் திட்டங்களைக் குறிப்பிடும்போது, அவற்றை உடோப்பியத் திட்டங்கள் எனக் கூறுதல் வழக்கம். நடைமுறையில் காணப்படாத மிகச் சிறந்த எடுத்துக்காட்டான ஒரு சமூகத்தை அவர் கற்பனை செய்து கொண்டு அதனைப் பற்றி விளக்கம் தருவதால், அச்சமூகத்தார் வாழ்ந்த ஒரு தீவுக்கு அவர் அளித்த கற்பனைப் பெயரே உடோப்பியா (Utopia) என்பதாகும். இத்தீவு புதிய உலகமாசிய அமெரிக்கக் கரைக்கப்பால் உள்ளதென்றும், இதற்கு மூன்று தடவை அமெரிகோ வெசுபூகியுடன் கடற்பயணம் செய்து போய்வந்த இராபேல் இதிலோடேய் (Raphael Hythlodaye) என்ற போர்ச்சுகீசிய மீகான் (Sailor), இவ்வியத்தகு தீவில் வாழ்ந்த நன்மக்களுடைய சமத்துவநிலையையும் செழிப்பையும் கல்வியையும் அறிவையும் விரித்துக்கூறுவதாகவும் இந்நூல் கூறுகிறது; இதன் ஆசிரியர் மூர் இக்கற்பனைச் சமூகத்தவருடைய நற்பண்புகளைக் கூறும்போது, தம்கால ஐரோப்பிய, ஆங்கிலச் சமூகத்தாரிடம் காணப்பட்ட சீர்கேடுகளையும் ஒப்பிட்டு வஞ்சப்புகழ்ச்சியாகக் (Satire) குறிப்பிடுகிறார். தாம் காணும் கற்பனை நாட்டைப் பற்றிக் கூறும் நூலுக்கு ‘நல்ல இடம்’ (Good Place) என்றும், ‘எங்கும் காணப்படாத தீவு’ (Island of Nowhere) அதாவது கற்பனைத் தீவு என்றும் பொருள்கள் தரக்கூடிய உடோப்பியா என்ற கிரேக்கப் பெயரைத் தாமே புனைந்து இட்டார். மூர் கூறும் சமநிலைக் கருத்துகள் இக்கற்பனைத் தீவினராகிய உடோப்பிய மக்கள் சமநிலைக் கோட்பாட்டை (Socialism) அடிப்படையாகக் கொண்டு வாழ்தலால், அவர்களிடையே அக்கால ஐரோப்பிய மக்களிடையே காணப்பட்ட சீர்கேடுகள் காணப்படவில்லை; அதில் எல்லாக் குடிமக்களும் உணவுப் பொருள்களை விளைவித்தல், நெசவுத் தொழில், வீடு கட்டுதல், கல்வி பயிலுதல், தத்துவ ஆராய்ச்சி செய்தல், ஆட்சிப் பணிகளை நிறைவேற்றுதல், போர்த் தொழில்கள் செய்தல், சமயப் பணிகள் செய்தல் முதலிய எல்லாச் செயல்களையும் சம உரிமையோடு பங்கு கொண்டு செய்து கூட்டு வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களுடைய சமூகம் ஒரு கூட்டுறவு அரசியற் சமூகமாகும் (A Co-operative Common Wealth); திருமண முறை ஒன்று மட்டுமே இக்கூட்டு வாழ்க்கைக்கு விதிவிலக்காகும்; அதாவது ஒருவருக்கு ஒரு மனைவிதான் என்ற ஒரு மணமுறையோடு (Monogamy) கூடிய இல்லற நெறியே உடோப்பிய மக்களால் மிகவும் கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இக்கற்பனை நாட்டில் முழுக்குடி உரிமை (Full Citizenship) பெறுதற்கு ஒருவருக்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி என்னவென்றால், இவ்வுலகத்தை ஆளுபவரும், இம்மைக்கு அடுத்தபடியாக உள்ள அழியா மறுமை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய செயலுக்குத் தக்க நன்மையையோ தண்டனையையோ வழங்குபவரும், நலன் தருபவரும், நல்ல நெறிமுறையாளருமாகிய ஒப்பற்ற இறைவனிடம் நம்பிக்கையோடிருப்பதுதான். இவ்வாறு ஒரு நல்ல சமூகத்தின் பண்புகளைப் பற்றிக் கூறும் மூர், தம் காலத்தில் ஆய்வு செய்யப்பட்ட தண்டனை இயல் (Penology), இனமேம்பாட்டு இயல் (Eugenics), நோவு இல்லாத சாவு (Euthanasia), மண விலக்கு (Divorce), நாணயத்தில் கையாளப்படும் தங்க நிலைமுறை (Gold Standard), பெண்கள் உரிமைகள், தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட கல்வி முறை, பல்சமய முறை, சூழல் முறை (Ecology) முதலிய எல்லாப் பொருள்களைப் பற்றியும் தமது கருத்துகளைக் கூறியிருக்கிறார்; அவ்வாறு கூறும்போது தம் காலத்திய ஐரோப்பாவில், முக்கியமாக இங்கிலாந்தில் காணப்பட்ட பொருளாதார, சமூகச் சீர்கேடுகளை இடித்துரைக்கிறார். கற்பனை நாடாகிய உடோப்பியாவில் தனியார் உடைமை உரிமை இல்லாமல், சமூக உடைமையும் கூட்டுறவு உழைப்பும் சமத்துவமும் இருப்பதால், அங்குத் தனியார் முதலாளித்துவ அமைப்பில் காணப்படுவதும் எல்லாச் சமூகத் தீங்குகளுக்கும் பிறப்பிடமாக இருப்பதுமாகிய பேராசை என்ற கொடிய நச்சரவத்துக்கு இடமே இல்லை என்று கூறுகிறார். தகாவழியில் ஆட்சி உரிமையைக் கைப்பற்றியவனாகிய மூன்றாம் இரிச்சர்டு (Richard III) என்பவனைப் பற்றித் தாமெழுதிய ஒரு நூலிலும் மூர், தம் காலத்திய ஆங்கிலச் சமூகத்தவரிடம் காணப்பட்ட வரம்பற்ற பொருள் சேர்க்கும் மனப்பான்மையை இகழ்ந்துரைத்தார். சமூகத்தில் பொருளாதாரச் சீர்கேடுகள் மலிந்திருத்தலால், குற்றங்களும் அவற்றை ஒடுக்குவதற்கு மிகவும் கடுமையான காட்டுமிராண்டித்தனமான குற்றஇயற் சட்டங்களும் பெருருகின்றன; சட்டங்கள் கடுமையாக இருத்தலால் பயன் ஏதும் இல்லை; ஏனெனில் பெரும்பாலான மக்களுக்குப் பிழைப்பதற்குரிய ஒரே வழி குற்றங்கள் செய்தலே, ‘திருடர்களை நீங்கள் தோற்றுவித்து விட்டுப் பின்னர் அவர்களைத் தண்டிப்பதைத் தவிர வேறு நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று மூர் வினவுகிறார். சமூகத்தில் வேலை இல்லா நிலை தோன்றுதற்குக் காரணத்தையும் ஆராய்கிறார். போர்வீரர் பயிற்சி அளிக்கப்பட்ட ஆட்கள் போர் நீக்கப்பட்ட காரணத்தால், வேலை இல்லாமல், தொழிலில் ஈடுபட வாய்ப்பும் இல்லாமல், சமூகத்தாருக்குப் பெரும் சுமையாக வந்து விடுகின்றனர். மிகவும் ஊதியத்துக்கு விலை போகிற ஆட்டுக் கம்பளியைப் பெருக்கும் பொருட்டு, விளைச்சல் நிலங்களெல்லாம் (Arable Lands) மேய்ச்சல் நிலங்களாக (Pasture) மாற்றப்படவே, அவற்றில் வேளாண்மை செய்து வாழ்ந்தவரெல்லாம் துரத்தப்படுகின்றனர்; இவ்வாறு வேளாண் தொழிலாளரையே அத்தொழில் காப்பாற்ற இயலாமற்போக, வேலை இல்லாத போர் வீரர்களுக்கும் வேலை கிடைப்பது அரிதாகிறது. இவ்வாறு ஆடுகள் வயல்களையே மேய்ந்து அழித்து உண்டுவிட, வயல்களோடு வீடுகளும் நகரங்களும் வளமிழந்து மறைகின்றன. குடியானவர் பட்டினி கிடக்கின்றனர். உயிர் வாழ்தற்காகச் சில வேளைகளில் திருட்டுத் தொழிலிலும் ஈடுபடுகின்றனர். செல்வர்களோ பகட்டாக உடுத்தி, விருந்துண்டு காலங்கழிக்கின்றனர். இத்தகைய தீங்குகளை நீக்குதற்கு அரசாங்கம் யாதொரு முயற்சியும் செய்யாமல், சட்டம் என்ற போர்வையிலிருந்து கொண்டு மக்களிடமிருந்து கடும் வரிகளை வாங்கி, பயனற்ற, கேடுகளை விளைவிக்கக்கூடிய போர், நாடு பிடிக்கும் திட்டம் ஆகியவற்றைச் செயற்படுத்த முனைகிறது. விளைச்சல் நிலங்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்றுதல், ஊர்ப் பொது நிலங்களைப் பெருநிலக்கிழார்கள் வேலி அடைப்புப் போட்டுத் தமது உடைமைகளாக எடுத்துக் கொள்ளுதல், வேலை இல்லாத அவலநிலை முதலிய சமூகக் கேடுகளெல்லாம் உடோப்பியாவில் இல்லை. அங்கு அனைவரும் கூட்டுறவு முறையில் வாழ்ந்து உழைக்கின்றனர் உழைப்பின் பயனை நுகர்கின்றனர்; கல்வி பெறுகின்றனர் இறையுணர்வும் ஒழுக்க உணர்வும் பெற்றுள்ளனர்; பொருளாதார ஏற்றத்தாழ்வோகளவோ வேலை இன்மையோ அந்நாட்டில் தலை காட்டுவதில்லை என்று மூர் உடோப்பிய மக்கள் வாழ்க்கையைச் சிறப்பித்துரைக்கிறார். மூரின் கருத்தைப் பற்றிய மதிப்பீடு மூர் தமது உடோப்பியாவில் கூறியுள்ள சமநிலை அல்லது பொதுவுடைமைக் கோட்பாட்டைப் பற்றிப் பிற்கால ஆசிரியர்கள் பலரும் பல்வேறு விளக்கங்களைத் தந்துள்ளனர்; காரல் காட்சுகி (Karal Kautsky) என்ற செருமானியச் சமநிலைக் கோட்பாட்டாளர் மூர் பிற்கால உருசியப் பொதுவுடைமைப் புரட்சிக்கு (1917–ஆம் ஆண்டு) வித்திட்ட ஓர் அறிஞராவார் என்று புகழ்கிறார்; வரலாற்றாசிரியர்கள் காலத்தில் ஆங்கிலப் பேரரசு (British Empire) உருவாகப் போகிறதென்று முன்னரே மூர் தமது நூலில் எடுத்துக் காட்டினார் என்றும், எந்த ஒரு சாராரோடும் சேராத ஓர் அறிஞருடைய சிறந்த நடுவு நிலை நோக்கை உடோப்பியா எடுத்துக் காட்டுகிறதென்று இலக்கியத் திறனாய்வாளரும், அது கிறித்தவ சமய மறுமலர்ச்சிக்கு இன்றியமையாது வேண்டப்படும் முழுச் சீர்திருத்தத்தைக் கூறும் ஒரு திட்டம் ஆகுமென்று மனிதப்பற்றாளரும் (Humanists) மதிப்பீடு செய்கின்றனர். இக்காலப் புலவர்கள் உடோப்பியாவுக்குப் பிற்பட்ட காலத்தில் மூர் எழுதிய நூல்களை ஆராய்ந்து, உடோப்பியாவை அவர் எழுதுவதற்குத் தூண்டுதல்களாக இருந்த சூழ்நிலைகளையும் அவருடைய நகைச்சுவை ததும்பும் நடையையும் அளவுகோலாக வைத்தே அவருடைய நூல்களின் கருத்துகளை மதிப்பிடுகின்றனர். அரசியல் ஆசிரியர் சி.எச். சபைன் என்பவர் (G.H. Sabine) மூர் தமது காலத்திய வாணிகப் பொருளாதார முறையைத் (Economics of Business Enterprise) தாக்கியதற்கு முக்கிய காரணம் இடைக் காலத்தில் (Middle Ages) காணப்பட்டதும், மூர்காலத்தில் மறைந்து கொண்டு வந்ததுமான கூட்டுறவுச் சமுதாயம்(Co-operative Commonwealth) என்ற சமூகக் கோட்பாட்டில் அவருக்கு இருந்த நம்பிக்கையும் பற்றுமே ஆகும் என்று கூறுகிறார். ஒன்றோடொன்று ஒத்துழைக்கும் பல்வேறு வகுப்புகளை உடையதாகச் சமுதாயம் அமைதல் வேண்டுமென்ற பிளேட்டோவின் கருத்தை மூர் ஏற்றுக் கொண்டார். சமூகத்திலுள்ள ஒவ்வொரு வகுப்பும் பொது நலனுக்கு ஏற்ற ஒரு பணியைச் செய்து. மற்ற வகுப்புகளின் சம உரிமையில் தலையிடாமல் தனக்குரிய ஊதியத்தைப் பெறுகிறது; இம்முறையில் தனியார் முயற்சிக்கு வழி கிடையாது. அரசினுடைய ஒழுக்க இயல் சார்ந்த நோக்கம் யாதெனில், நல்ல குடிமக்களையும் அறிவியல் ஒழுக்க உரிமை உடையோரையும் உருவாக்குதலே ஆகும்; அது சோம்பேறித்தனத்தையும் கடும் உழைப்பையும் நீக்கி, யாவருக்கும் வாழ்க்கைத் தேவைகளை அளித்து ஆடம்பரத்தையும் பொருளழிவையும் ஒழித்து, வறுமையையும் செல்வ மிகுதியையும் குறைத்து, பொருட்பற்றையும் பொருட்பறிப்பையும் மிகவும் குறைத்து, மனவளர்ச்சிக்கு முழு உரிமை வழங்குதல் வேண்டும். மிகவும் சிறப்பான ஒழுக்க இயற்கருத்து ஏதேனும் ஒன்று இருக்குமானால், அது நிச்சயமாக மூர் கூறும் உடோப்பியக் கருத்தே ஆகுமென்று சபைன் மதிப்பிடுகிறார். ஏனென்றால் அவருடைய காலத்தில் சமயப் போர்கள் நிகழ்க்கூடிய சூழ்நிலைகளும், இக்கால வாணிக முறை தோன்றக்கூடிய சூழ்நிலைகளும் இருந்தனவாகையால், மூர் எடுத்து இயம்பிய கூட்டுறவு வாழ்க்கை முறைக்கும் மனிதப் பண்புக்கும் இடமில்லாமற் போயிற்று. இது மறைந்து கொண்டு வந்த ஒரு பழைய கருத்தை எடுத்துக் காட்டிய ஒரு நூலே தவிர, புதிதாக வந்து கொண்டிருந்த ஒரு காலத்தின் கருத்தை எடுத்துக்காட்டவில்லை. மூரின் சமநிலைக் கருத்துகளை இராபர்ட்டு ஓவன் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் செயற்படுத்துதற்கு எடுத்த முயற்சியும் பயனும் ஆங்கில நாட்டில் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகவும் செல்வாக்குடனிருந்த உடோப்பியச் சமநிலைக் கோட்பாட்டாளர்களுள் இராபர்ட்டு ஓவன் (Robert Owen கி.பி. 1771–1858) என்ற வேல்சு நாட்டுத் தொழிலதிபர் முக்கியமானவர், சிறுவயதில் ஒரு தொழிலாளரிடம் வேலைக்கமர்ந்த இவர் தமது உழைக்கும் திறமையினால் முதலாளிகளின் ஆதரவைப் பெற்று, நூற்பாலை ஒன்றை இலங்காசயமில் நியூலானார்க்குப் (New Lanark) பட்டணத்தில் தாமே வாங்கி, அவ்வூரில் குற்றமனப்பான்மையிலும் சுகாதாரச் சீர்கேடுகளிலும் வாழ்ந்த 2000 மக்களையும் சீர்திருத்தும் நோக்கத்துடன், அவர்களுடைய வீட்டு வசதிகளையும் துப்புரவு நிலைகளையும் சீராக்கி, சிக்கனமாக வாழும் பழக்கத்தை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார், நல்ல தரமான பொருள்களை வாங்கிய விலைக்குச் சிறிதளவே கூடுதலான விலைக்கு விற்கக்கூடிய ஒரு பண்ட சாலையை (Store) நிறுவியதோடு குழந்தைகக்ளுகாக ஒரு பள்ளிக்கூடத்தையும் நிறுவினார். முதலில் அவரைச் சிறிது ஐயப்பாட்டுடனே நோக்கிய உள்ளூர் மக்கள், பின்னர் அவருடைய நற்செயல்களை உணர்ந்து நம்பிக்கை கொண்டு ஆதரவளித்தனர். அவருடன் தொழில் நடத்திய பங்குதாரர்கள், அவருடைய சீர்திருத்தத் திட்டங்கள் மிகவும் செலவுக்குரியவையாகையால் அத்திட்டங்களுக்கு ஆதரவளிக்க விரும்பவில்லை. எனவே அவர் அவர்களை விட்டு விலகி, முதலீட்டிற்கு 5% மட்டுமே ஊதியம் பெற முன்வந்த பயன்வழிக் கோட்பாட்டாளராகிய செரிமி பெந்தம் (Jeremy Bentham, the Utilitarian Political Thinker), வில்லியம் ஆலன் முதலியோரைப் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டு, பழைய தொழில் நிறுவனத்தை வாங்கி நடத்தினார். அவர் தொழில் நடத்திய நியூலானார்க்குப் பட்டணத்துக்குச் சமூகச் சீர்திருத்தவாதிகளும் அரசியலறிஞர்களும் அரச குடும்பத்தவரும் வந்து கண்டு, வியந்து பாராட்டிச் சென்றனர். அங்கு வளர்ந்த குழந்தைகளெல்லாம் உடல் நலமும் வளமும் நற்பண்புமுடையவராகப் புகழ்பெற்றனர். அவருடைய தொழில் நிறுவனமும் வாணிக முறையில் செழித்து வளர்ந்தது. தொழிலாளர் பணிநேரக் கட்டுப்பாடு, இடர்ப்பாடில்லாத பணிச் சூழ்நிலை, துப்புரலான வீட்டு வசதி, தொழிலாளருக்குக் கணிசமான ஊதியம் முதலிய தொழிலாளர் சீர்திருத்தத்துக்காக எவரும் எந்த முயற்சியும் செய்யாத அந்தக் காலத்தில், ஓவன் தாமே முன்வந்து, தொழிலாளர் நலச் சட்டங்கள் உடனே இயற்றப்படுதல் வேண்டுமென்று துணிந்து, கி.பி. 1815–ஆம் ஆண்டில் ஓர் இயக்கம் நடத்தினார் இதற்கு ஆதரவு கிடைக்காததனால், இவருடைய இயக்கத்துக்கு உடனடியாக நற்பயன் எதுவும் கிடைக்கவில்லை. எனினும், பிற்காலத்தில் பிரிட்டனில் ஏற்பட்ட சமநிலைக் கோட்பாட்டின் (Socialism) வளர்ச்சிக்கும், கூட்டுறவு இயக்கத்துக்கும் (Co-operative Movement) இவர் ஒரு முன்னோடியாக விளங்கினார் எனலாம். ஓவன் செயற்படுத்திய சமநிலைக் கோட்பாடு; மனித உழைப்போடு இயந்திரங்கள் போட்டி போடுதனால், தொழிலாலர்களுக்கு நீங்காத் துன்பம் ஏற்படுகிறது. இதை நீக்க ஒரே வழி மனிதனுக்கு உட்பட்டதாக இயந்திரங்கனைக் கட்டுப்படுத்தி உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துதல்தான். வறியோருடைய துன்பத்தைப் போக்குதற்கு இது ஒன்றே வழி ஆகும். அப்போது (ஓவன் காலத்திலிருந்த) நடைமுறையிலிருந்த சமய நெறி முறைகள் வறுமையைப் போக்குதற்குச் சிறிதும் பயன்படவில்லை; அதற்குப் புதிய வழி ஒன்றைக் காண வேண்டிய தேவை ஏற்பட்டது. மனிதனுடைய பண்பாடு அவனால் கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலைகளினாலேயே உருவாக்கப்படுகின்றபடியால், மனிதப் பண்பாட்டைச் சரியான முறையில் உருவாக்குவதற்கேற்ற ஒரே வழி அவனை அவனுடைய இளமையிலிருந்தே தக்க சூழ்நிலைகளில் வளருமாறு செய்தலே யாகும். மனிதனுடைய பொறுப்பற்ற போக்கும் அவனுடைய தொடக்ககால வாழ்க்கைச் சூழல் நிலைகளுமே ஓவனை ஒரு புதிய கல்வித் திட்டத்தையும், மனித சமூக மேம்பாட்டுத் திட்டத்தையும் வகுக்குமாறு வழிகாட்டின. ஒற்றுமையும் கூட்டுறவும் என்ற அடிப்படையில் ஊர்கள் அமைக்கப்படுமானால் வேலை இன்மையை நீக்க இயலும். ஒவ்வோர் ஊரிலும் ஏறக்குறைய 1200 பேர் 1500 ஏக்கர் பரப்பளவில் வாழத்தக்கதாக, ஒரு பெரிய பொதுவான வீடு ஒரே அடுக்களையுடனும் பல உணவருந்தும் கூடங்களுடனும் ஒவ்வொரு குடும்பமும் இருப்பதற்குத் தனித்தனி அறைகளுடனும் கட்டப்படுதல் வேண்டும். குழந்தைகள் 3 வயது வரை பெற்றோராலும் பின்னர்ச் சமுதாயத்தாலும் வளர்க்கப்படுதல் வேண்டும். அத்தகைய சமுதாயத்தில் வேலையும் பயனும் யாவராலும் பகிர்ந்து கொள்ளப்படுதல் வேண்டும். வறுமையை (Pauperism) ஒழிப்பதற்கு ஓவன் பரிந்துரைத்த இந்தத் தன்னிறைவுச் சமுதாய வாழ்க்கையை (Self – Contained Communities) அவர் இலண்டனில் எடுத்துரைத்த போது, அதை மக்கள் பலர் வரவேற்றாலும் அவர் சமய நெறித் துறைகளை மறுத்ததனால், அவர் பலருடைய ஆதரவை இழந்தார். அவர் அமெரிக்காவில் இந்தியானா (Indiana) மாநிலத்தில் நியூ ஆர்மனி (New Harmony) என்னுமிடத்தில் 30,000 ஏக்கர் நிலத்தை வாங்கி, அதில் எடுத்துக்காட்டுத் தன்னிறைவுச் சமுதாயத்தை அமைத்தார். அந்த அமைப்பு அவருடைய நேர் மேற்பார்வையிலிருக்கும் வரையில் நல்லமுறையில் செயற்பட்டு வந்தது. பின்னர், அங்கு இருக்க வேண்டிய ஆட்சி அமைப்பு, சமய நெறிமுறைகள் ஆகியவை பற்றிக் கருத்து வேறுபாடுகள் தோன்றவும், ஓவன் பெரும் பொருள் நட்டத்துடன் இவ்வமைப்பிலிருந்து விலகிவிட்டார். வேறு பல இடங்களிலும் ஓவன் முறைச் சமுதாயங்கள் பலரால் நிறுவப்பட்டன. சமுதாய அமைப்பு மாறாத வரையில், வெறும் சமுதாயச் சீர்திருத்தங்களால் பயன் இல்லை என்னும் அவருடைய கருத்துக்கும், அவருடைய தன்னிறைவுச் சமுதாயக் கருத்துக்கும் இளம் தொழிலாளர்கள் ஊக்கத்துடன் ஆதரவளித்தனர். இவற்றுக்காகக் கழகங்கள் அமைக்கப்பட்டு, மாத, வார, நாள் ஏடுகள் வெளி- யிடப்பட்டன. ஓவனின் கோட்பாடு (Owenism) தன்னாட்சியுடைய தொழிற்சாலை முறையைத் (Self Governing Workshop) தோற்றுவித்தது. இத்தொழிற்சாலையில் செய்யப்பட்ட பொருள்களை விற்பதற்குரிய சந்தையாகத் தேசிய சமத்துவ தொழிலாளர் விற்பனை நிலையம் (National Equitable Labour Exchange) கி.பி. 1832–ஆம் ஆண்டில் தோன்றிற்று. இதனுடைய அடிப்படைக்கொள்கை, ‘எல்லாச் செல்வங்களுக்கும் தோற்றுவாயாக இருப்பது உழைப்பே ஆகும்’ என்பதாகும். இதுவே எல்லா வகைச் சமநிலைக் கோட்பாடுகளுக்கும் பொதுவான ஒரு கொள்கை ஆகும். இதை ஆதாரமாக வைத்தே ஓவன் தம் கல்வி, ஒழுக்க, அறிவியல், திருமணம் பற்றிய சீர்திருத்தக் கருத்துக்களை உருவாக்கினார். அவர் தமது கொள்கையைப் பரப்பச் செய்த முயற்சிகளின் பயனாக ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழிற்சங்கம் தோன்றிற்று. அவற்றையெல்லாம் கூட்டாட்சி முறையில் இணைத்துத் தேசிய தொழிற் சங்கங்களின் பேரிணையம் (1834) (Grand National Consolidated Trades Unions) தோன்றிற்று. இதற்குத் தொழிலாளர்கள் வரவேற்பு இருந்தாலும், முதலாளிகளும் அரசாங்கமும் நீதிமன்றங்களும் இவ்வியக்கத்தை வெகுவிரைவில் ஒடுக்கி விட்டன. ஓவனிடம் அவர்தம் முதுமைக் காலத்தில் அவருடைய கருத்துகளை அவருக்குப்பின் எத்தனைபேர் செயற்படுத்த உள்ளனர் என்று அமெரிக்கச் சிந்தனையாளர் வால்டோ எமர்சன் என்பவர் (Waldo Emerson) கேட்க, அதற்கு அவர் ‘ஒருவருமில்லை’ என்று விடை அளித்தாராம். இவ்வாறிருந்தாலும் சமநிலைக் கோட்பாட்டைச் செயற்படுத்துதற்குத் தம்முயற்சி ஒன்றையே நம்பித் துணிந்து செயலாற்றியவர் ஓவன்தாம் என்பதையும், அவருடைய சமுதாய வாழ்க்கைக் கருத்துகளே உலக முழுவதும் இப்பொழுது பரவியுள்ள நுகர்வோர் கூட்டுறவு இயக்கத்துக்கு (Consumers Co–operative Movement) அடித்தளமாக அமைந்தன என்பதையும் எவராலும் மறுத்தல் இயலாது. சர் தாமசு மூர் கூறும் உடோப்பியக் கற்பனைக் கருத்துகள் பிளேட்டோ கூறும் குடியரசைப் போலக் கருத்தளவில் கொள்ள வேண்டிய ஒரு நோக்கமேயன்றிச் செயற்படுத்துதற்குரிய ஒரு நோக்கம் அன்று. துணை நூல் Sabine, George H., A History of Political Theory, Oxford & IBH. Publishing Co., Calcutta, 1961.