பூக்காத தாவரப் பிரிவைச் சார்ந்த பழுப்பு நிறக் கடற்பாசிகளில் முக்கியமானவை சார்காசம் (sargassam) என்ற கடற் களைகளாகும். மிகு தோற்றம் காரணமாகவே, இவை களைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன. பச்சையத்தைக் கொண்டிருப்பினும், இவற்றை மஞ்சள் பழுப்புப் போன்ற நிறமிகள் (chromatophores) மறைப்பதால், இவை பழுப்பு நிறத்தை வெளிப்படையாகக் கொண்டுள்ளன. ஏனைய நிலத் தாவரங்களைப் போலவே, ஒளிச்சேர்க்கையால் தம் உணவை இவை உற்பத்தி செய்கின்றன. சார்காசம் ஆழம் குறைந்த வெப்பக் கடற் பகுதிகளின் அடி மட்டத்தில் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பொருளில் ஒட்டியவாறே காணப்படும். எனினும், அவ்வப்போது அடிமட்டத்திலிருந்து பெயர்ந்து, நீர் மட்டத்தோடு மிதந்தும் செல்லக் கூடும். இவற்றிலிருந்து பிரிந்த துண்டுகளிலிருந்தே புதுத் தாவரம் உருவாவதால், இவற்றின் உற்பத்தி விரைவாகவும், மிகுதியாகவும் இருக்கும். வட அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு பகுதியான சார்காசாக் கடல் இதன் மிகு உற்பத்தி காரணமாகவே இப்பெயர் பெற்றுள்ளது. இக்கடலில் 4—11 மில்லியன் எடையுள்ள சார்காசம் களைகள் உள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. கொலம்பசின் முதல் கடற் பயணத்திலிருந்தே மீனவர்கள் சார்காசத்தை அறிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடற்களைகளிலேயே மிகப் பெரிய பருமனைக் கொண்டுள்ளவை சார்காசக் களைகளே, பல பிரிவுகளாலான நீளத் தண்டுகளில், விட்டு விட்டு அமைந்த ஒழுங்கற்ற முள்கள் உள்ள இலைகளைக் கொண்டவை. இலைகளுக்கிடையில் தொடர்ந்து பிரிந்து பல்கிப் பெருகுவதற்கு ஏற்ற மெலிந்த தண்டுகளோடு ஒவ்வோர் இலையின் அருகிலும் திராட்சைப் பழ வடிவத்தையொத்த ஒரு காற்றுப்பை இருக்கும். இக்காற்றுப்பைகள் கடலின் மேல் மட்டத்தில் மிதந்து செல்வதற்குத் துணை புரிகின்றன. போர்ச்சுக்கீசிய மொழியில் சார்கா (sarga) என்பது திராட்சைப் பழத்தைக் குறிப்பதாலும், இக்களைகள் திராட்சைப் பழ வடிவக் காற்றுப்பைகள் கொண்டுள்ளமையாலும், சார்காசம் எனப் பெயர் பெற்றுள்ளன. சார்காசக் களைகள் ஓரிரு மீட்டர் பரப்பு களாகப் பெரிதும் மிதந்து காணப்படுகின்றன. இவற்றில் மீன், இறால், மெல்லுடலிகள் போன்ற கடல்-வாழ் உயிரினங்கள் மறைந்து வாழ முடியும். எனவே இப்பரப்புகள் விலங்கியல் தோட்டங்கள் எனப்படுகின்றன. சார்காசம் மீன்களும் இவற்றில் மறைந்து வாழும். சார்காச இலைகள் போன்றஅமைப்புகள் இம்மீன்களின் வெளித் தோலிருந்து நீண்டு தொங்குவது குறிப்பிடத்தக்கது. சார்காசக் களைகள் மடிந்து அழுகும் போதும், அவை இருக்கும் பகுதிகளில் வாழும் மீன் போன்ற விலங்கினங்களுக்குச் சிறந்த உணவாக அமையும், ஹோயர்ட் என்னும் ஆய்வாளர், 1000—1500 மீட்டர் ஆழப்பகுதிகளில் மிதக்கும் நுண்ணுயிரிகளும், மீன்களும் கிழக்குக் கடல் பகுதிகளை விடச் சார்காசக் கடலில் மிகுதியாக உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். சார்காசம் மிரியோசிஸ்டம், சா. சினரியம், சா.ஜான்ஷ்டனி, சா.டெனிரிமம் போன்ற இனங்கள் இந்தியக் கடற்கரையோரப் பாறைகளிலும், பவளப் பாறைகளிலும், கற்களிலும், பிற தாவரங்களிலும் ஒட்டி வளர்கின்றன. தமிழ்நாடு, குஜராத், கோவா, கார்வார், வர்கலா, வங்கம், விசாகப்பட்டினம், பம்பாய், ரத்தினகிரி, இலட்சத்தீவுகள், அந்தமான், நிக்கோபார் தீவு இவற்றில் மிகுதியாகக் காணப்படுகின்றன. பயன்கள். சார்காசம் களைகளின் செல் சுவர்கள் செல்லுலோஸ், அல்ஜீனிக் அமிலம் போன்றவற்றால் ஆனவை. செல்கள் மானிட்டால் என்ற மாவுப் பொருளை உற்பத்தி செய்து சேமித்து வைக்கின்றன. உலர்ந்த சுளைகளின் எடையில் 2% மானிட்டால் உள்ளது. இக்களைகளிலிருந்து பிரித்தெடுக்கக் கூடிய அல்ஜீனிக் அமிலம், பெரும்பாலான உணவுப் பொருள்களில் அவற்றின் தன்மையை நிலைப்படுத்தும் பொருளாக ஆலைகளில் பயன்படுகிறது. மேலும், இக்களைகளில் புரோலின், டைரோசின் மெத்தியோனின், ஐசோலூசின், லூசின் போன்ற அமினோ அமிலங்கள் உட்பட 19 அமினோ அமிலங்கள் பிரித்தெடுக்கப்பட்டுள்ளன. காற்றில் உலர்ந்த 100 கிராம் சர்காசக் களைகளில் 25 மி. கி. அயோடினும், ஆர்செனிக், போரான், கோபால்ட், தாமிரம்,இரும்பு, மாங்கனீஸ், துத்தநாகம் போன்ற தனிமங்களும் உள்ளன. சா மிரியோசிஸ்டம் என்ற இனத்தில் எலுமிச்சம் பழத்தில் உள்ளதை விட அதிக அளவில், அதாவது, 100 கிராம் உலராத களை எடையில் 67 கி. கி. அளவில் வைட்டமின் C உள்ளதாக அறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சார்காசம் களைகளை உரமாகவும், ஆடு, மாடு, கோழி போன்றவற்றின் தீவனத்தில் ஒரு பகுதியாகவும் பயன்படுத்த வாய்ப்புள்ளது. கடற்களைகளில் உள்ள சத்துப் பொருள்கள் எளிதில் நீரில் கரையும் தன்மை கொண்டமையால், அவை எளியவாகவும், விரைவாகவும் தாவரங்களுக்குக் கிடைக்கின்றன. வெண்டை, சீனிக் கிழங்கு, காய்கறி- களின் உற்பத்தி கடற்களைகளின் உரத்தில் பெருகுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. —கோலி, இராமசாமி நூலோதி . P. Burton. The Seashore and Its Wild Life, Orbs Publishing Co., Ltd., London. 1977; A. R. O. Chapman, Biology of Sea Weeds, Edward Arnold, London, 1979.