காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகள் எதுவுமின்றி, பல்வேறு உறுப்புகளில் வளர் கட்டிகளையும், நார்ப் பொருள்களையும் உருவாக்கும் நோய் நிலை சார்க்காய்டோசிஸ் (sarcoidosis) எனப்படும். கிரேக்க மொழியில் சார்க் என்றால் தசை என்று பொருள். இந்நோய் தசை உள்ளிட்ட தோலையும் பாதிக்கிறது. நுண் வலையுடைய அகத்தோலிய மண்டலம் (reticulo endothelial system), நிணநீர் மண்டலம், நிணநீர்ச் சுரப்பிகள், அடிநாச் சதை, எலும்பு மஜ்ஜை, மண்ணீரல், நுரையீரல், கல்லீரல், கண், இதயம், தசை, தோல், உமிழ்நீர்ச் சுரப்பி, கண்ணீர்ச் சுரப்பி, சிறுநீரகம், மைய நரம்பு மண்டலம் ஆகியவையும் இந்நோயால் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன. நோய்க் காரணம் தெரியவில்லை. சார்காய்டோசிஸ், காசநோயைப் போன்று இருக்குமோ என்று கூடக் கருதப்பட்டது. ட்யூபர்குலின் (மாண்டோ) ஆய்வு எதிர்மறையாக இருப்பதால், இந்நோய்க்கும் காச நோய்க்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என முடிவு செய்யலாம். இந்நோய் பெருமளவில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் காணப்பட்டாலும், இந்தியா, சீனா போன்ற நாடுகளில் மிகுதியாகக் காணப்படுவதில்லை. சார்காய்டு நோயால் மரணமடைபவர்களில் 75 சதவீதத்தினருக்கு கல்லீரல் வீங்கிப் பெரியதாகக் காணப்படுகிறது. எலும்புகளும், மூட்டுகளும் பாதிக்கப்படும் போது, கணுக்கால் மூட்டே பெரிதும் பாதிக்கப்படுகிறது. நுரையீரல்கள் சார்க்காய்டோசிசால் பாதிக்கப்படும் போது, ஹைல நிணக் கட்டிகளும், மையத்தான நிணக் கட்டிகளும் வீங்கிக் காணப்படுகின்றன. இந்நோய், பெரும்பாலும் தானாகவே சீரடைகிறது. பாதிக்கப்பட்ட உறுப்புகளில் நார்ப் பொருள் மிகுதியாக உருவாவதால், பணிகள் பாதிக்கப்படுகின்றன. நோயை முடிவு செய்ய, கிவீம் (Kveim) ஆய்வு உதவுகிறது. பாதிக்கப்பட்ட உறுப்புகளில் இருந்து பெறப்பட்ட பிழிசாற்றைத் தோல் இடை ஊசியாகச் செலுத்தி, நோய் முடிவு செய்யப்படுகிறது. 90% நோயாளிகளிடம் இந்த ஆய்வு உதவுகிறது. இந்நோய்க்கெனத் தனி மருத்துவம் எதுவும் இல்லை. தொடக்க காலத்தில் கார்டிகோஸ்டீராய்டு நல்ல பலனளிக்கிறது. மேலும், தனியான சிறப்பான மருத்துவம் எதுவும் இல்லாததால், பாதிக்கப்பட்ட உறுப்புகளிலிருந்து உருவாகும் அறிகுறிகளைப் பொறுத்தே மருத்துவம் அளிக்கப்படும். —அ. கதிரேசன்