அடிப்படைத் திறன்கள்
aṭippaṭait tiṟaṉkaḷ
அறிவு பெறுதலிற் சில திறன்கள் அடிப்படையாக அமைகின்றன.
அறிவு பெறுதலிற் சில திறன்கள் அடிப்படையாக அமைகின்றன. கல்வியறிவு பெறுதலிலும் அடிப்படைத் திறன்கள் தேவையாகின்றன. அறிவியல், கணிதவியல், மொழியியல், முறைசாராக் கல்வி ஆகியவற்றில் அறிவைப் பெருக்க விழையும் ஒருவருக்குச் சில அடிப்படைத் திறன்கள் இன்றியமையாதன.
அறிவியல் அடிப்படைத் திறன்கள்
அறிவியற் கல்வி பெற்றுக் கொள்ள விரும்பும் மாணவருக்குச் சில அடிப்படைத் திறன்கள் தேவை, அறிவியல் கற்பதில் பிறர் கண்ட அறிவை ஆசிரியர் கூற, அவ்வாறே ஏற்பதை விட மாணவர்கள் தாமாகவே அறிவியல் முயற்சியில் ஈடுபட்டு, அறிவு பெறுதற்கு அடிப்படைத் திறன்கள் இன்றியமையாதவை. இயற்கைச் சூழலில் உள்ள பொருட்கள், உயிரினங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மாணவர் பார்க்கலாம்; ஆனால், அவற்றைக் கூர்ந்து கவனிப்பது அறிவியல் கற்பதற்குத் தேவையான அடிப்படைத் திறனாகும். கூர்ந்து கவனிக்கும்போது, மாணவர் மனத்தில் பல வினாக்கள் எழலாம். அறிவியல் வளர்ச்சிக்குத் தேவையான கேள்விகளைக் கேட்பது மற்றொரு திறன். இக்கேள்விகள், இயற்கைச் சூழலில் நிகழும் நிகழ்ச்சிகளை இன்னும் கூர்ந்து கவனிக்கச் செய்கின்றன. அன்றியும், பல தகவல்களை, ஆராய்ச்சிக்குத் தேவையான பொருள்களை, உயிரினங்களைச் சேகரிக்க இக்கேள்விகள் மாணவரை ஊக்குவிக்கின்றன. சேகரித்தவற்றை வகைப்படுத்தி, வரிசைப்படுத்தி ஆராய்வது அறிவியற் பாடத்தில் உள்ள அடிப்படைச் செயல்களுள் அடங்கும். இம்முயற்சி சில அடிப்படைக் கேள்விகளுக்குத் தன்னிடமுள்ள தகவல்களையொட்டி ஒரு கருதுகோள் அல்லது விளக்கம் பற்றிய ஊகம் அமைக்கும் திறனைத் தருகிறது. தான் ஊகித்து அறிந்த விளக்கம் தவறா, அன்றா என்பதைச் சோதித்தறிவது மிகவும் இன்றியமையாதது. அதற்கு ஏற்ற சோதனையைத் தேர்ந்தெடுத்துச் செய்து முடிக்கும் திறன் வேண்டும். இவ்வாறு, சோதனைகள் மூலமாக மெய்ப்பிக்கப்பட்ட உண்மைகளைத் தொகுக்கும் போது புதிய உண்மைகள் தோன்றுகின்றன. அறிவியல் உண்மைகளை வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கும் ஒருவருக்கு இவ்வடிப்படைத் திறன்கள் தேவை. தாம் கண்டுபிடித்த உண்மைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளவும், மற்றவர்கள் கண்டுபிடித்த உண்மைகளைச் சீர்தூக்கி அறியவும் அறிவியல் ஆற்றல் மிக இன்றியமையாததாகும்.ஜி.எம்.ஜா.
மொழியில் அடிப்படைத் திறன்கள்
மொழியின் அடிப்படைத் திறன்கள் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என நான்கு ஆகும். அவற்றுள் கேட்டல், பேசுதல், ஆகிய இரண்டும் ஒலியை அடிப்படையாகக் கொண்ட திறன்களாகும். படித்தல், எழுதுதல் ஆகிய இரண்டும் வரிவடிவ அமைப்பை அடிப்படையாகக் கொண்ட திறன்களாகும். கேட்டலும் படித்தலும் செய்திகளை அல்லது கருத்துகளை நாம் அறிந்து கொள்ள உதவுவதால் இவற்றை உட்கொள்ளும் திறன்கள் (Receptive Skills) என்பார். பேசுதல் மூலமும் எழுதுதல் மூலமும் நாம் பிறர்க்கு அறிவிக்க வேண்டிய கருத்துகளையும் செய்திகளையும் வெளியிடுகிறோம். எனவே, இவற்றை வெளியிடும் திறன்கள் (Expressive Skills) என்பர். இந்நான்கு அடிப்படைத் திறன்களிலும் வல்லமை உடையவரே மொழியைக் கையாளும் திறன் பெற்றவர் ஆவார்.
கேட்டல் திறனை (Listening Skill) ஒலிகளைக் கேட்டல், கேட்டுப் பொருளுணர்தல் என நுண்ணிய வேறுபாடு அமைந்த இரு பெருங்கூறுகளாகப் பிரிக்கலாம். செவி நரம்புகள் வழியாக ஒலி மூளைப் பகுதியில் பதிவாதலைக் கேட்டல் (Hearing) எனலாம். ஒலிக்குரிய பொருளுணர்ந்து தமது முன்னறிவுடன் இணைத்து அறிந்து கொள்ளுதலே கேட்டுப் பொருளுணர்தல் (Listening) ஆகும். கேட்டல் திறன் என்னும் பொழுதெல்லாம் நாம் கேட்டுப் பொருளுணர்தலையே குறிக்கிறோம்.
கேட்டல் திறனின் இன்றியமையாமையை உணர்ந்து இக்காலத்தில் மொழிப்பாடம் கற்பித்தலில் அதற்குச் சிறப்பிடம் தந்துள்ளனர். குழந்தைகள் கேட்டுச் செய்திகளை அறிவதற்குத் தகுந்த சூழ்நிலையமைத்து அவர்கள் விரும்பக் கூடிய செய்திகளைக் கூறுதல் வேண்டும். சிறுகதைகள், விளையாட்டுகள் பற்றிய செய்திகள், விடுகதைகள் ஆகியவற்றை ஏற்ற முறைகளில் கையாளுவதன் மூலம் கேட்டல் திறனை வளர்க்கலாம்.
பேசுதல் திறன்
நம்முடைய கருத்துகளை வெளியிடுவதற்கு ஏற்ற பொருள் தரும் சொற்களை ஒலிவடிவில் வெளிப்படுத்தல் பேச்சுத் திறன் எனப்படும். தெளிவான, பிழையற்ற பேச்சினை வளர்க்கப் பேச்சுப் பயிற்சியளித்தல் வேண்டும். ஒலிகளைப் பிழையின்றி ஒலிப்பதற்காக ஒலிப்புப் பயிற்சி (Sound Drill) நாநெகிழ் பயிற்சி, நாபிறழ் பயிற்சி போன்றவைகளைப் பயன்படுத்துதல் வேண்டும். பேச்சுத்திறமை பெறுவதற்காக உரையாடல்களையும், கதைகளையும் ஆட்டப் பாடல்களையும், செவிலிப் பாடல்களையும் பயன்படுத்தலாம். அறிவிப்புகளைப் படிக்கச் செய்தல், சிறு சொற்பொழிவாற்றுதல், பேச்சுப்போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தல் போன்றவைகளும் பேச்சுத் திறன் வளர்க்க உதவுவனவாம்.
மொழியின் வரிவடிவத்தைக் கண்டு ஒலித்தோ ஒலிக்காமலோ படித்துப் பொருள் அறிதலே படித்தலாம். ஒலித்துப் படித்தலை வாய் விட்டுப் படித்தல் (Loud Reading) என்றும், ஒலிக்காமல் படித்தலை வாய்க்குட் படித்தல் (Silent Reading) என்றும் கூறுவர். படித்தல் என்னும் போது படித்துப் பொருள் உணர்தல் என்றே பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் உணரச் சொற் களஞ்சியத்தைப் பெருக்குதல், உவமை, பழமொழி, வருணனைத் தொடர் ஆகியவற்றை விளக்குதல், நிறுத்தற்குறிகளின் பயன் அறிதல் ஆகியவற்றில் பயிற்சியளித்தல் வேண்டும்.
பேசும் மொழியின் ஒலிக்குரிய வரிவடிவத்தைப் பயன்படுத்திக் கருத்தை உணர்த்துதலே எழுதுதல் திறன் ஆகும், வரிவடிவத்தை ஒழுங்காக அமைக்கவும் ஒரு சீராக எழுதவும் பயிற்சியளிக்க வரியொற்றி எழுதுதல் (Copy writing), பார்த்து எழுதுதல் (Transcription) போன்ற பயிற்சிகளை அளித்தல் வேண்டும். பின்னர், பிழையின்றியும் முறையாகவும் எழுதுவதற்குச் சொல்வது எழுதுதல் அல்லது ஒப்ப எழுதுதல் (Dictation), தாமே எழுதுதன் (Original writing) போன்ற பயிற்சிகளை அளித்தல் வேண்டும். இவ்வாறு நான்கு அடிப்படைத் திறன்களிலும் பயிற்சி அளித்தால் மொழியைக் கையாளும் திறனை ஒருவர் பெறலாம்.
பள்ளிப் படிப்பின் தொடக்க நிலையில் சொற்களைப் பிழையின்றி ஒலித்தலிலும் வரிவடிவத்தை நன்குணர்தலிலும் பயிற்சியளித்தல் வேண்டும். பின்னர், வாய்க்குட் படித்தலிலும், திறமையாகப் பேசுதலிலும், முறையாகவும், சுவையாகவும் எழுதுதலிலும் பயிற்சியளித்து மொழித்திறன்களை வளர்த்தல் வேண்டும்.வி.க.
முறைசாராக் கல்வியில் அடிப்படைத் திறன்கள்
வளர்ந்து வரும் நாடுகளில் நிலவிவரும் முறைசாராக் கல்வித் (Non-Formal Education) தொடர்பான செயல்களை ஆய்ந்து பார்க்கும் பொழுது, பல வகையான கல்வி நடவடிக்கைகள் நடைபெறுவது புலப்படும். இக்கல்வியின் அடிப்படையில் பெரும்பாலான நடவடிக்கைகள் பள்ளியின் வெளியே நடைபெறுகின்றன. இதன் காரணமாகத்தான் முறைசாராக் கல்வியைப் பற்றி ஒரு குறிப்பிட்ட விளக்கம் தர முடியாத நிலை உள்ளது. ஆயினும் ஒரு வகையான பொது விளக்கம் தர முடியும். முறைசாராக் கல்வியைப் பயன்படுத்திச் சில குறிப்பிட்ட திறன்களைத் தனிப்பட்டவர்களுக்கோ குழுக்களுக்கோ புகுத்தலாம்.
முறைசாராக் கல்வி ஒருவன் சமுதாய வளர்ச்சிக்குத் தன்னால் இயன்றதை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்கி வருகிறது. சமுதாய வளர்ச்சிக்குத் தனி மனிதன் உதவ வேண்டுமாயின் அவனுக்குச் சில திறன்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாகத் தன் நிலையை உணரும் திறன் மிக இன்றியமையாத ஒன்று. இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் வெற்றியடையாமல் போவதற்கு ஒரு காரணம் அவற்றில் பங்கு பெறும் ஒருவன், தான் யார்? தன் நிலை என்ன? எந்நிலையை அடைய வேண்டும்? என்று உணர முடியாத நிலையில் இருப்பதே. எனவேதான், அடிப்படையாகத் ‘தன் நிலையை உணரும் திறனை’ வளர்க்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. அத்திறனை அடைந்துவிட்டால், பிறர் ஊக்குவித்தல் இன்றித் தன் ஊக்கத்தின் அடிப்படையில் தானும் வளர்ந்து சமுதாய வளர்ச்சிக்கும் தன்னால் இயன்றதைச் செய்ய முடியும்.
முறைசாராக் கல்வியில் வளர்க்க வேண்டிய இரண்டாம் திறன், ‘ஒரு காரணத்தின் அடிப்படையில் விளையும் விளைவுகளையும் புதைந்து கிடக்கும் பிணைப்புகளையும்’ (Cause-effect relationship) அறிந்து கொள்ளும் திறன். இன்று உலகில் நிலவும் தத்துவங்கள் (Phenomena) அனைத்தும் காரண காரியங்களினால்தான் நிலவுகின்றன என்று கூறத் தேவையில்லை. இருப்பினும், நம்மில் பலர் எக்காரணத்தினால் விளைவுகள் ஏற்படுகின்றன என்று சிந்திப்பதில்லை. எனவேதான் முறைசாராக் கல்வி ஏற்பாட்டின் மூலம் காரண விளைவுகளில் இருக்கும் பிணைப்புகளைப் புரிந்து கொள்ளக் கூடிய திறன்களை வளர்க்க வேண்டும் என்பது கருதப்படுகிறது. இத்திறனால் ஒருவன் அன்றாடச் சிக்கல்களுக்கு விடை காண முடியும்.
மதிப்பீடு செய்தல், அதன் அடிப்படையில் ஒரு முடிவு எடுத்தல் ஆகியவை முறைசாராக் கல்வி மூலம் வளர்க்க வேண்டிய பிற திறன்களாக அமைகின்றன. கல்வியறிவில்லாத பலர் எந்த முடிவினையும் எடுக்க முடியாதவர்களாகவும் அவ்வாறே முடிவெடுத்தாலும் எவ்வாறு செயலாற்றுவது என்று அறியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதன் விளைவாக, அவர்கள் சார்பில் நடுவர்கள் முடிவெடுத்துத் தங்கள் முடிவுகளுக்கு அவர்களை அடிமைகளாக ஆக்கி விடுகிறார்கள்.
முடிவாக மனப்பாங்கில் (Attitudinal Changes) சில மாற்றங்களைத் தோற்றுவிக்கக் கூடிய சில அடிப்படைத் திறன்களையும் இக்கல்வி மூலம் உண்டாக்க வேண்டும். அவ்வகைத் திறன்களாவன:
1. செயலற்றுக் கிடக்கும் நிலையிலிருந்து ஊக்கமுடன் செயலில் இறங்கக் கூடிய உள்ளத் திறன்.
2. கூச்சத்தால் பங்கு கொள்ள முடியாத மன நிலையில் இருந்து தன்னம்பிக்கையுடன் செயலாற்ற முனையும் உள்ளத் திறன்.
3. செய்ததையே திரும்பத் திரும்பச் செய்யும் மன நிலையில் இருந்து விலகி ஆக்கவுணர்வுடன் செயல்படும் உள்ளத் திறன்.ஆர்.ஜெ.
கணிதவியல் அடிப்படைத் திறன்கள்
கணிதப் பாடத்தின் அடிப்படைத் திறன்களாய்க் கருதப்படுவன கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவையாம். இயற்கணித அடிப்படை உண்மைகளை அறிதலும் அவற்றைப் பயன்படுத்தும் திறனை வளர்த்தலும் கணிதப்பாடம் கற்பித்தலின் குறிக்கோள்களாகும். திறன்களைப் பெறுவதிலும் பன்முறைப் பயிற்சி மட்டுமே போதாது, அடிப்படை உண்மைகளை அறிந்து பயன்படுத்தும்போதே திறன் சிறப்புற வெளிப்படும். எண்கள், குறியீடுகள் ஆகியவற்றைப் பருப் பொருள்களின் அடிப்படையில் தொடங்கிக் கற்கும்போது அவை தெளிவாக விளங்குகின்றன. கணிதப் பாடத் திறன்களில் நுணுக்கமும் (Accuracy) விரைவாகச் செய்தலும் சிறப்புத் தன்மைகளாய் அமைவன.
மின்னணுக் கணக்குப் பொறிகள் மிகுதியும் பயன்படுத்தப்படும் இந்நாளில், கணிதப் பாட அடிப்படைத் திறன்கள் யாவை என்ற வினா எழுகிறது. இப்பொறிகளைப் பயன்படுத்தும் போது கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய திறன்களிலும் முன் போலவே பயிற்சி வேண்டப்படுவதில்லை. இக்கருவிகளை வேண்டுமிடத்து வேண்டும் முறையில் நன்கு பயன்படுத்தும் திறன் கணிதப் பாடத்தில் ஓர் அடிப்படைத் திறனாக இன்று அமைகிறது. கணக்கிடும் பொறிகளைக் கையாளும் திறனோடு, இப்பொறிகளில் இருந்து வெளிப்படும் தீர்வுகளை நன்கு விளக்கும் திறனும் பெறுதல் வேண்டும்.
கணிதப் பாடத்திறன்கள், கருத்துகளின் தெளிவிலிருந்தும் பிரிக்கப் படக் கூடியனவல்ல, கருத்துகளைத் தெளிந்து சிக்கல்களைத் தீர்க்க, அவற்றைப் பயன்படுத்தத் தெரியும் திறன், கணிதப் பாடத்தின் அடிப்படைத் திறன்களுள் முதன்மை பெறும். செய்து காட்டும் திறன் (Operation Skill) பன்முறைப் பயிற்சியால் அமையலாம், ஆயின் இச்செயலின் அடிப்படையான கருத்துகளின் தெளிவே இன்று கணிதப் பாட அடிப்படைத்திறன் எனக் கொள்ளப்படுகிறது. கணிதச் செயல்களைச் செய்ய இன்று எளிதாய்க் கையாளவல்ல மின்னணுக் கருவிகள் பல உள்ளன. எனவே செயல்களைச் சாராது, இச்செயல்களுக்கு அடிப்படையான கருத்து விளக்கங்களின் தெளிவே கணிதப் பாடத்தின் அடிப்படைத் திறன்களாகும்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 248)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ph5qrm2w/
தமிழ்“அடிப்படைத் திறன்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ph5qrm2w/APA
Oliyon Research. (2026). அடிப்படைத் திறன்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ph5qrm2w/MLA
"அடிப்படைத் திறன்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ph5qrm2w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment