திருச்சி மாநகரின் தலைசிறந்த வழக்கறிஞரும் கல்வியாளருமாவார். தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தில் பின்னவாசல் என்னும் சிற்றூரில் கி.பி. 1896–ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30–ஆம் நாளன்று இவர் பிறந்தார். இவர் தந்தை நடேசகனபாடிகள் என்னும் வேதவிற்பன்னர். இவர் பள்ளிப் படிப்பை முடித்ததும் சட்டம் பயின்று வழக்கறிஞரானார். இவர் 1916–ஆம் ஆண்டு அலமேலு என்னும் சீதாலட்சுமியை மணந்தார். இராமசாமி அய்யர், என். இவர் 1925–இல் மாவட்ட வெள்ள நிவாரணக் குழுவின் உறுப்பினராகவும், விடுவிக்கப்பட்ட கைதிகள் நலன்நாடும் கழகத்தின் செயலாளாராகவும். இந்தியச் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல சமூக சேவை அமைப்புகளின் உறுப்பினராகவும் விளங்கி ஆற்றிய பணிகள் பல. மகரிசி கார்வே என்பவர் பெண்கள் பல்கலைக் கழகமொன்றை நிறுவியது, இவரது பெண் கல்வித் தொண்டிற்குத் தூண்டுகோலாக இருந்தது. இவர் தம் முழு ஆற்றலையும் ஊதியத்தையும் பெண் கல்விக்காகச் செலவிடத் தொடங்கினார். கிறித்தவ சமயத்தவரால் நடத்தப்பெறும் கல்விச் சாலையைப் போல இந்து சமயத்தவர்களுக்கென்று ஒரு கல்வி நிறுவனம் அமைய வேண்டுமென்று இவர் கருதியமை, 1938–இல் ‘சாவித்திரி வித்யாசாலா’ என்ற இந்து உயர்நிலைப்பள்ளி அமையக் காரணமாயிற்று. இக்கல்விக்கூடத்தை மிகப் பெரிதாக ஆக்க வேண்டுமென்று கருதி இடையறாது உழைத்து, அதன் பயனாகச் ‘சீதாலட்சுமி இராமசாமி’ என்ற பெயரில் 1951–ஆம் ஆண்டு கல்லூரி ஒன்று தொடங்கினார். இவர் ஆற்றிய சமுதாய நலப் பணிகளைப் பாராட்டி அன்றைய ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு 1932–இல் ‘இராவ்சாகிபு’ என்ற பட்டத்தினையும், 1938–இல் ‘இராவ்பகதூர்’ என்ற பட்டத்தினையும் வழங்கிச் சிறப்பித்தது. ‘திவான் பகதூர்’ என்னும் பட்டமும் 1946-இல் இவரைத் தேடி வந்தது. மத்திய அரசு 1962–இல் இவர் தொண்டினைப் பாராட்டி ‘பத்மசிரீ’ பட்டமும், 1971–இல் ‘பத்ம பூசன்’ பட்டமும் அளித்துச் சிறப்பித்தது. இவர் 28–3–1976 இல் காலமானார். இந்நிறுவனத்தில் காமகோடி வித்யாலயா, பெண்கள் தொழில் நுட்பப் பயிலகம், மாலைநேரக் கல்லூரி, கணிப்பொறி மையம். நிருவாகக் கல்வி போன்றவை தொடங்கப்பட்டு வியத்தகு முறையில் செயற்பட்டு வருகின்றன. தொடக்கப் பள்ளியில் சேர்ந்த ஒரு குழந்தை டாக்டர் பட்டம் பெற்று வெளியேறும்வரை படிப்பதற்குரிய எல்லா வாய்ப்புகளையும் ஒரே இடத்தில் ஏற்படுத்திய பெருமை என். இராமசாமி அய்யரையே சாரும். இந்துசமயப் பண்பாட்டோடு கல்வி அமைவது சாலச்சிறந்தது என்ற துணிவோடு அம்மரபினைப் போற்றும் வகையில் விடுதியில் வாழும் மாணவியர் வெளியிற் சென்று கோயிலில் வழிபடும் இடர்ப்பாடு நீங்க, மாணவியர் விடுதியிலேயே இராமர் கோயிலும், ஆண்டு வழிபாட்டு மண்டபமும் அமைத்த, அகிலாண்டேசுவரி அடிபணியும் இராமசாமி அய்யர் நிலைபெற்ற புகழுடையவராக விளங்குகிறார்.எஸ்.நா.