இறையனார் அகப்பொருள் என்னும் நூல் அகப்பொருள் இலக்கணங்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறது. இது இறையனார் களவியல் என்றும் பெயர் பெறும். இறையனாரால் இயற்றப் பெற்றதால் இந்நூல் இறையனார் அகப்பொருள் என வழங்கப்பெறுகிறது. இது சங்ககாலத்தைச் சார்ந்த நூலாகும் என்று கருதப்படுகிறது. இது தோன்றிய வரலாற்றினை இந்நூல் முதல் நூற்பா உரை குறிப்பிடுகிறது. பஞ்சம் நீங்கித் தம் நாடு திரும்பிய புலவர்களுள் பொருளதிகாரம் அறிந்த புலவர் ஒருவரும் இல்லையே எனப் பெரிதும் கவலை கொண்ட பாண்டிய மன்னனுக்குச் சிவபெருமான் இரங்கி, அகப்பொருள் இலக்கணத்தைக் குறிக்கும் அறுபது நூற்பாக்களை மூன்று செப்பேடுகளில் எழுதித் தம் பீடத்தின் கீழே வைத்தார். மறுநாள் இறைவனுக்குப் பூசனை புரியும் அந்தணன் அச்செப்பேடுகளைக் கண்ணுற்று அவற்றை எடுத்துச் சென்று மன்னனிடம் கொடுத்தான். மன்னன் மகிழ்ந்து, தன் குறையைத் தீர்த்த சிவபெருமானைப் போற்றினான். இந்நூலின் பெருமையை உணர்த்துதற்கு இக்கதை புனையப்பட்டிருக்கலாம். இறையனார் என்ற பெயர் கொண்ட ஒரு புலவரால் இந்நூல் செய்யப்பட்டதெனக் கொள்வது பொருத்தமாகும். இந்நூலின் அறுபது நூற்பாக்களுள் முதல் முப்பத்து மூன்று நூற்பாக்கள் களவொழுக்கத்தின் இலக்கணத்தையும், எஞ்சிய இருபத்தேழு நூற்பாக்கள் கற்பொழுக்கத்தின் இலக்கணத்தையும் கூறுகின்றன. அன்பினாலாய ஐந்திணைக் களவு கந்தருவ வழக்கந்துக்கு ஒப்பாகும். ஒருவனும் ஒருத்தியும் தாமே தற்செயலாய் எதிர்ப்பட்டுக் காதல் வயத்தவராய்க் கூடுவர். இது இயற்கைப் புணர்ச்சி எனப்படும். பின்பு பாங்கன் குறியிடமறிந்து சொல்லத் தலைவன் தலைவியை எதிர்ப்படுதலும், தானே சென்று அவளை எதிர்ப்படுதலும் உண்டு. அடுத்துத் தோழியைக் குறையிரந்து தலைவியை எய்த முயல்வான்; அல்லது தோழி தலைவியோடு இருக்குங்கால் ஊரும் பெயரும் பிறவும் வினாவித் தன் காதலைக் குறிப்பாக உணர்த்துவான். தலைவன் தலைவியர் இயற்கைப் புணர்ச்சியைத் தோழி பலவகையிலும் ஆய்ந்து உணர்வாள். தன்னிடம் வந்து குறையிரக்கும் தலைவனோடு தோழி பலவாறு உரையாடி நகைத்து அவன் தலைவியை அடைவதற்கான வேட்கையை மிகுவிப்பாள். பகற்குறியிடத்தும் இரவுக்குறியிடத்தும் தலைவன் தலைவியர் சந்திப்பர். தலைவன் தலைவியர் களவொழுக்கங்குறித்து ஊரில் அம்பலும் அலரும் தோன்றும், தோழி செவிலிக்குத் தலைவன் தலைவியர் களவொழுக்கத்தைத் தெரிவிப்பாள்; செவிலி நற்றாய்க்கும் நற்றாய் தந்தைக்கும் ஐயன்மார்களுக்கும் அறிவிப்பாள். இது அறத்தொடு நிற்றல் எனப்படும். தலைவி தலைவன் பிரிவை ஆற்றாது அரற்றுதலும் காப்பு மிகுதியின் கண் அவள் செயலற்றுக் கூறும் மொழிகளும் ஆகிய இவை போன்றவை வரைதல் வேட்கையைக் குறிக்கும். இது இந்நூல் கூறும் களவொழுக்க இலக்கணத்தின் சுருக்கம். இனிக் கற்பொழுக்க இலக்கணத்தின் முக்கிய குறிப்புகள் பின்வருமாறு; தலைவன் கல்விக்காகவும் நாடுகாத்தற்கும் இரு பகையரசர்களைச் சந்து செய்வித்தற்கும் அரசனுக்கு உற்றுழி உதவுவதற்கும் பொருள் ஈட்டுதற்கும் பரத்தையர் பொருட்டும் பிரிவான். கல்விக்காகவும் நாடுகாத்தற்கும் பிரிதல் அந்தணர், அரசர் ஆகிய இரு திறத்தார்க்கும் உரியது. வேந்தர்க்கு உற்றுழி உதவுவதற்காகவும் பொருளுக்காகவும் பிரிதல் வணிகருக்கும் வேளாளருக்கும் உரியது. பரத்தையர் பொருட்டுப் பிரிதல் நான்கு திறத்தார்க்கும் உரியது. நாடிடையிட்டும் காடிடையிட்டும் பிரியும் தலைவன் இன்ன நாள் அல்லது இன்ன திங்களுக்குள் வருவதாகச் சொல்லிப் பிரிதல் வேண்டும். மனைவிக்குப் பூப்புத் தோன்றிய நாள் முதல் பன்னிரு நாட்கள் தலைவன் அவளை அகன்றுறைதல் அறமாகாது. வாயில்களான தோழி, பார்ப்பான், பாணன், பாடினி முதலியோர் தலைவன் பிரிவின்கண் தலைவியை ஆற்றுவிப்பர். இறுதியாக, அகப்பொருளுக்குப் பொதுவாகத் திணை, கைகோள், கூற்று, கேட்போர், இடம், காலம், எச்சம், மெய்ப்பாடு, பயன், பொருள்கோள் ஆகிய பத்தையும் இந்நூல் குறிப்பிட்டு ஒவ்வொன்றையும் விளக்கியுள்ளது. அகப்பொருள் இலக்கணத்தைத் தெளிவுபட உணர்வதற்கு இந்நூல் பெரிதும் பயனுடையதாகும். தா.ஏ.ஞா.