இலெபனான் நாட்டுக் கல்வி அமைப்பில் பள்ளி முன் தொடக்கக் கல்வி (Primary Education) முதல் படியாகும். குழந்தைகள் மழலையர் பள்ளிகளில் இரண்டாண்டுகள் பயிலுகின்றனர். இப்பள்ளிகளில் குழந்தைகள் நான்கு வயதில் சேர்ந்து ஐந்து வயதில் பள்ளி முன் தொடக்கக் கல்வியை முடிக்கின்றனர். ஆறு வயதில்தான் குழந்தைகள் தொடக்கப் பள்ளிக் கல்வியில் சேருகின்றனர். பதினொரு வயதில் தொடக்கப் பள்ளியில் கல்வி பெற்று வெளியேறுகின்றனர். தொடக்கப் பள்ளிக் கல்வியின் மொத்தக் கால அளவு ஆறாண்டுகளாகும். தொடக்கப்பள்ளிக் கல்வி குழந்தைகளுக்குக் கட்டாயம் என்ற சட்டம் இலெபனானில் (Lebanon) இன்னும் இயற்றப்படவில்லை. தொடக்கப் பள்ளிக் கல்வி பெற்ற மாணவர்கள் பன்னிரண்டு வயதில் உயர்நிலைப் பள்ளிகளில் (Junior High School) சேர்ந்து நான்காண்டுகள் பயிலுகின்றனர். பின்பு இவர்கள் பதினாறு வயதிலிருந்து பதினெட்டு வயது வரை மேல் நிலைப் பள்ளிகளில் (Senior High School} பயிலுகின்றனர். மேல்நிலைப் பள்ளிக் கல்வி முடித்த பதினெட்டு வயது நிறைந்த மாணவர்களே பல்கலைக் கழகங்களுக்குச் செல்கின்றனர். பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரையில் ஆண், பெண் மாணவர்கள் விகிதத்தில் வேறுபாடு இல்லை. ஆண்களும் பெண்களும் சமமாகக் கல்வி பயிலுகின்றனர். பல்கலைக் கழகக் கல்வி நிலையில் 40 விழுக்காடு பெண்கள் பயிலுகின்றனர். மொழிக்கு முதலிடம் இலெபனான் நாட்டுக் கல்வியின் சிறப்புக் கூறு மொழியைக் கற்றலுக்கு முதலிடம் கொடுத்திருப்பதாகும். பள்ளிக்கல்வியில் மாணவர்கள் இரு மொழிகளைக் கற்கின்றனர். அலுவலக மொழியான அராபிய மொழியினை மாணவர்கள் தாய்மொழியாகக் கற்கின்றனர். இரண்டாவதாகப் பிரெஞ்சு மொழியோ ஆங்கில மொழியோ கற்பிக்கப்படுகிறது. பிரெஞ்சு மொழியினை மொத்தம் 75 விழுக்காடு பள்ளி மாணவர்கள் கற்கின்றனர். மொத்தம் 25 விழுக்காடு மாணவர்களே ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்கின்றனர். மூன்றாம் மொழியையும் மாணவர்கள் பதினொரு வயதிலிருந்தே கற்பதும் பள்ளிகளில் உண்டு. இந்நாட்டில் பாதிக்கு மேற்பட்ட மக்கள் இருமொழி பேசுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிருவாகம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசு நிறுவனங்கள் அல்ல; தனியார் கல்வி நிறுவனங்களும் இலெபனானில் உண்டு. தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் பெறுகின்றன. தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களின் குழந்தைகளே கல்வி பயிலுகின்றனர். ஏழை மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகள் இடமளிக்கின்றன. கல்வி அமைச்சகமே அனைத்து நிலைக் கல்விக்கும் முழுப் பொறுப்பாகும். கல்விக் கொள்கைத் திட்டம், பாடத் திட்டம் ஆகியவை தேசிய அளவில் நடைபெறும். தேர்வு, அரசுப் பள்ளிகள், இலெபனானியப் பல்கலைக் கழக நிருவாகம் ஆகிய அனைத்தும் கல்வி அமைச்சகத்தால் கண்காணிக்கப்படுகின்றன. தேசிய கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி மையம் (Centre for Educational Research and Development) கல்வி அமைச்சகத்தின் பணிகளில் உதவி புரிகிறது. தனியார் பள்ளிகள் தாங்களாகவே இயங்கிக் கொண்டாலும் தேசிய பாடத்திட்டத்தைப் (National Curricula) பின்பற்றுகின்றன. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டும். மதப் பள்ளிகள் அரசு, தனியார் பள்ளிகளைத் தவிர்த்து, தொடக்கப் பள்ளிக் கல்வி நிலையில் மட்டும் பிற நிறுவனங்கள் நடத்தும் பள்ளிகளும் உண்டு இந்நிறுவனங்களுக்கு அரசு ஊக்க உதவித் தொகை (Subsidy) அளிக்கிறது. இப்பள்ளிகளில் மிகவும் ஏழை மாணவர்களும் மதக் கல்வி பெற விரும்பும் மாணவர்களும் மட்டுமே சேர்ந்து பயிலுகின்றனர். உயர்கல்வி இலெபனானின் தலைநகரான பெய்ரூட்டிலும் மற்ற நகர்ப்புறப் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 15 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இவற்றில் அராபி, பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய ஏதாவதொரு மொழியே பயிற்று மொழியாக உள்ளது. இப்பல்கலைக்கழகங்கள் வெவ்வேறு மதப்பிரிவோடும் வெவ்வேறு நாட்டோடும் இணைந்து இயங்கி வருகின்றன. வயது வந்தோர் கல்வி இலெபனான் 1943–இல் தந்திரம் பெற்றது. அன்றிருந்து முறைசாராக் கல்வியும் இந்நாட்டில் வளரத் தொடங்கிவிட்டது. சமூக நலத் துறையும் (Ministry of Social Affairs) இதனோடு இணைந்த மற்ற நிறுவன அமைப்புகளும் அரசிடம் பண உதவி பெற்று. முறைசாராக் கல்வித் திட்டத்தை நடத்தி வருகின்றன. முறைசாராக் கல்வித் திட்டத்தில் தனியார் முயற்சி பெரும்பங்கு பெறுகிறது. தனியார் பல்கலைக் கழகங்கள், தொழிற் பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள் (Benevolent Associations) ஆகியவை முறைசாராக் கல்வியினை முனைப்புடன் செயற்படுத்தி வருகின்றன. இத்திட்டத்தில் மாணவர்களுக்கு அயல்மொழி கற்பிக்கப்படுகிறது; தொழில் திறனை உயர்த்த உதவும் கருத்து விளக்கக் கல்வி (Theoretical Knowledge) கற்பிக்கப்படுகிறது: வேலை வாய்ப்புப் பெற உதவும் வகையில் தகுதி மேம்படுத்தப்படுகிறது. கவின் கலை, பொழுதுபோக்குத் துறை ஆகியவற்றில் அறிவு விளக்கம் அளிக்கப்படுகிறது; உடல் ஊனமுற்றவர்களைப் பாதுகாப்பது எப்படி என்றும் சொல்லித் தரப்படுகிறது; அதனோடு, குடும்ப நலம் பற்றிய சிந்தனையும் ஊக்குவிக்கப்படுகிறது. உதவித் தொகை மாணவர்களுக்கு உதவித் தொகை பொதுவாக வழங்கப்படுவதில்லை. ஆனால், இலெபனானியப் பல்கலைக் கழகத்தில் மட்டும் தேசிய உதவித் தொகைத் திட்டம் உள்ளது. தனியார் பல்கலைக் கழகங்களில் மிகக் குறைந்த மாணவர்களுக்கே உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. ஆசிரியர், ஆசிரியர் பயிற்சி பொதுவாக, இலெபனானில் ஆசிரியர் பற்றாக்குறை இல்லை; எனினும், பாதிக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் முழுத்தகுதியும் பெற்றவர்கள் அல்லர் (Underqualified). மழலையர் பள்ளி ஆசிரியர்களும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களும் தேசிய கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகின்றனர். மேல்நிலைப் பள்ளிக் கல்வித் தகுதியுடைய ஆயிரத்திலிருந்து மூவாயிரம் வரையுள்ள மாணவர்கள் 10 மாதங்கள் பயிற்சி பெறுகின்றனர். உயர்நிலைப் பள்ளியில் பாடம் கற்பிக்க ஆசிரியர்கள் 10 மாதப் பயிற்சியோடு மேலும் ஈராண்டுச் சிறப்புப் பயிற்சியும் பெறுகின்றனர். பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக் கழகக் கல்வியியல் புலத்தில் ஈராண்டு பயிற்சி பெறுகின்றனர். இத்தகுதி பெற்ற ஆசிரியர்களே மேல் நிலைப் பள்ளிகளில் பாடம் கற்பிக்கின்றனர். ஓராண்டுக்கு ஏறத்தாழ 400 ஆசிரியர்களே இவ்வாறு பயிற்சி பெறுகின்றனர். கல்வி அமைச்சகம் நடத்தும் தொழிற் கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி உண்டு பாடத் திட்டம் கல்விப் பாடத் திட்டத்தை அரசே முடிவு செய்கிறது. இதில் கல்வி வல்லுநர்களின் கருத்துரைகளை அரசு விரும்பிக் கேட்கிறது. அரசு தரும் பாடத் திட்டமே நாடு முழுவதற்கும் உள்ள பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாகப் பாடநூல்களைப் பள்ளி ஆசிரியர்களும் பல்கலைக் கழக ஆசிரியர்களுமே எழுதிக் கொள்கின்றனர். அரசின் பொறுப்பிலுள்ள தொடக்க உயர்நிலைப் பள்ளிகளுக்கான பாட நூல்களைத் தேசிய கல்வி ஆய்வு வளர்ச்சி மையம் உருவாக்கித் தருகிறது. தேர்வு முறை ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்கு மாணவர்களை அனுப்புவதைப் பொதுவாக ஆசிரியர்களே செய்கின்றனர். இருப்பினும், மாணவர்கள் தங்களின் 15,17,18 ஆகிய வயதுகளில் முறையே உயர் நிலைப்பள்ளி இறுதி ஆண்டிலும் மேல்நிலைப் பள்ளியின் இரண்டு ஆண்டிலும் அரசுத் தேர்வை எழுதியே வெற்றி பெறுதல் வேண்டும். இவ்விரு தேர்விலும் வெற்றி பெற்ற மாணவர்களே பல்கலைக் கழகக் கல்வியில் சேர இயலும் கல்வியியல் ஆய்வு பல்கலைக் கழகக் கல்விப் புலம் வழக்கமான கல்வியியல் ஆய்வுகளைச் செய்து வருகிறது. பாடத்திட்டம், கற்பித்தல் முறைகள், ஆசிரியர்கள் பயிற்சி, கல்வி உளவியல் போன்ற பகுதிளில் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இப்பொழுது, தேசிய கல்வி ஆய்வு வளர்ச்சி மையத்தின் உதவியுடன் நாட்டு வளர்ச்சிக்குப் பயன்படும் வகையில் கல்வியியல் ஆய்வுகள் செய்யப்படுகின்றன. இந்நாட்டின் கல்விச் சிக்கல்களாகச் சிலவற்றைக் குறிப்பிடலாம். நாடு சுதந்திரமடைந்த பின்னர்க் கூடத் திட்டமிடப்பட்ட அணுகுமுறை இன்னும் இல்லாத காரணத்தால், நாட்டின் சமுதாயப் பொருளாதாரத் தேவைகளைக் கல்வியால் நிறைவு செய்ய இயலவில்லை. சான்றாக, இன்று நாட்டில் நிறையத் தொழில் திறம் பெற்றோர் (Technicians) தேவையாயிருந்தும், தொழிற் கல்வி கற்றோரின் விகிதம் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் இன்னும் கல்வித் தரம் தாழ்ந்தே உள்ளது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் அயல்மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆனால், அந்த மொழியில் அனைத்து மாணவர்களும் திறன் பெற்றவர்களாக இல்லை. இந்நாட்டுக் கல்வித் திட்டம் இன்னும் மாற்றப்படாமல் பழையதாகவே இருந்து வருகிறது.