சுறா
cuṟā
கடல் புலி, கடல் வில்லன், அமங்கல கீதம் (requin) எனப் பல பெயர்களில் சுறா மீன் குறிப்பிடப்படும்.
கடல் புலி, கடல் வில்லன், அமங்கல கீதம் (requin) எனப் பல பெயர்களில் சுறா மீன் குறிப்பிடப்படும். 250-350 வகையான சுறா மீன்கள் இருப்பினும், அவற்றை 20 குடும்பங்களாகக் கூறலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் காணப்படும் சுறாவின் அமைப்பு பெயர், மீன் இயலில் அக்குடும்பத்தின் ஆங்கிலப் பெயர் இவற்றைப் படம் 1இலும் சுறாவின் பொதுவான வெளிப்புற உறுப்புகளைப் படம் (2)இலும் காணலாம்.
சீப்புப் போன்ற பற்களைக் கொண்ட பசுச் சுறா, மடிப்புடைய கழுத்தையும், பாம்பு போன்ற உடலையும் கொண்ட மடிப்புச் சுறா, குத்தூசி போன்ற பற்களுடைய மணற் சுறா, அச்சுறுத்தும் தலையமைப்புடைய பேய்ச் சுறா, மனிதனையும் விழுங்கக் கூடிய வெள்ளைச் சுறா, முரட்டுத் தோலுடைய எலும்புச் சுறா, நீண்ட வாலுடைய அடிச் சுறா, சினமடைந்தாலன்றி, மனிதரைத் தாக்காத வரிக் குதிரைச் சுறா, உருவத்தில் பெரிய திமிங்கிலச் சுறா, இரையைக் கண்டவுடன் வேகமாக நீந்தும் புலிச் சுறா, நீண்ட மூக்குடைய போலிப் பூனைச் சுறா, நச்சுத் தன்மையுடைய தூங்குஞ் சுறா, ஆழ் கடலில் வாழும் தேவதைச் சுறா எனப் பல வகையான சுறாக்கள் உள்ளன. இவற்றுடன் ஜாக்சன் துறைமுகச் சுறா, கொம்புச் சுறா, நாய்ச் சுறா, பூனைச் சுறா, திரைச் சுறா, வேட்டை நாய்ச் சுறா, சுத்தித் தலைச் சுறா, தார்க் குச்சி நாய்ச் சுறா, முட்புதர்ச் சுறா, ரம்பச் சுறா முதலியவையும் அடங்கும்,
சுறாவின் வாலில் நீண்டு காணப்படும் மேடு (keel) வேகமாக நீந்துவதற்கும், நீந்தும் போது வால் புறத்தை உயர்த்துவதற்கும் பயன்படுகிறது. இதன் கல்லீரல், கொழுப்பு எண்ணெயால் நிரப்பப்பட்டுள்ள மையால், அதைச் சுருக்கி, விரித்து, இயக்கி விரைவாக இருந்த இடத்திலிருந்து செங்குத்தாக மேலும், கீழும் செல்ல முடியும். தலையைப் பெரியதாகவோ, தட்டையாகவோ மாற்றிக் கொள்ளும் திறனைத் தேவைக்கேற்றவாறு பயன்படுத்தி, நீரில் திடீரென மூழ்கவும், மேல் நோக்கி விரையவும் முடியும். இதன் மேற்புறம் கறுப்பாகவும், அடிப்புறம் வெளுப்பாகவும் இருக்கும். சிலவற்றில் ஒளிரும் நீலம், வெள்ளை, பழுப்பு போன்ற நிறங்களும், புள்ளிகளும், வரிகளும் காணப்படுகின்றன.
உடலில் கடினமான எலும்புப் பகுதியே இல்லை. மாறாக, வளையக் கூடிய மென்மையான குருத்தெலும்புகளைப் (cartilage) பெற்றுள்ளது. இதன் தலை பல சிறிய குருத்தெலும்புகளால் ஆக்கப்பட்டுள்ளது. சுறாவின் தாடை, மண்டையோட்டுடன் (cranium) எளிய முறையில் இணைக்கப்பட்டுள்ளது. செவுள்கள் குருத்தெலும்புகளின் துணையுடன் தலையின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. சுறாவுக்கே உரிய தடிமனான தோலாலும், செதில்களாலும் உடல் போர்த்தப்பட்டுள்ளது. தாடையிலமைந்துள்ள கூரான பற்களைப் போன்ற செதில்கள், தோலில் அடுக்கு அடுக்காகச் செருகப்பட்டுள்ளமையால், இவை தோலின பற்கள் (dermal teeth) என்றும் கூறப்படுகின்றன.
இரையை வெட்டுவதற்கும், இழுப்பதற்கும் சுறாவிற்கு இரு வகையான பற்கள் உள்ளன. இவற்றின் கூர்மை, வடிவம், எண்ணிக்கை முதலியன இதன் இனத்திற்கும், வயதிற்கும் ஏற்ப வேறுபடும், இப்பற்கள், பெண் சுறாவை விட இரு மடங்கு பெரியவையாக ஆண் சுறாவிடம் காணப்படும், இவ்வமைப்பால் புணர்ச்சியின் பொழுது, பெண் சுறாவின் மேற்புற மீன் துடுப்பை ஆண் சுறா பலமாகப் பிடித்து நிறுத்தும். இதன் பற்கள் உடைந்தால், மீண்டும் முளைக்கும்.
சுறாவின் கல்லீரல் தடிப்பாகவும், மென்மையாகவும், எண்ணெய்ப் பசை கொண்டதாகவும், செம்மண் நிறமுடையதாகவும் காணப்படும். இதன் எடை அதன் இனத்திற்கும், ஆண்—பெண் பாலுக்கும், கோடை குளிர் காலங்களுக்கும், கிடைக்கும் உணவிற்கும் ஏற்றவாறு மாறுபடும். இதன் எடை, மொத்த எடையில் 20% வரை இருக்கலாம். 3.25 மீ. நீளமுடைய ஆண் புலிச் சுறாவின் கல்லீரல் 34 கி.கி. ஆகவும், அதே அளவுடைய பெண் சுறாவின் கல்லீரல் 45 கி.கி. ஆகவும் இருக்கலாம். உணவு கிடைக்காத குளிர் காலங்களில் இது 10 கி.கி. ஆகக் குறைந்து காணப்படும். 45 கி.கி. கல்லீரல் 25-28 லி. வரை சுறா எண்ணெய் (shark liver oil) கொடுக்க வல்லது.
இனப் பெருக்க உறுப்புகளும் ஆண் சுறாக்களில் அணைப்புறுப்பு (Clasper) செலுத்தும் உறுப்பு, வயிற்றுத் துடுப்புடன் இணைந்திருக்கும். திமிங்கிலச் சுறாவில் கருவுற்ற முட்டைகள் பெண் சுறாவிலிருந்து
(oviparous) வெளி வந்து வளர்ச்சியடைகின்றன. தாதிச் சுறாக்களில் கருவுற்ற முட்டை, மெல்லிய தோலால் போர்த்தப்பட்டுச் சினைப் பையிலிருந்து வெளிப்படாமல், சத்துப் பையின் உணவையே பெற்றுச் சினைப் பையிலேயே வளர்ந்து, குட்டியாக வெளி வரும்.
மென்மையான வேட்டை நாய்ச் சுறாக்களில் கருவுற்ற முட்டை சினைப் பையில் வளரும் போது, தாய்ச் சுறா நேரடியாகச் சினைப் பையில் சுரக்கும் ஒரு வகை நீர்மத்தையே உணவாகக் கொடுத்து, வளர்த்து குட்டிகளை ஈனும். கருப்பைகளின் அளவும், வடிவமும், இனத்திற்கேற்ப அமைந்திருக்கும். சில சுறாக்களில் (எ-டு. மணற்சுறா) முட்டைக் கருவிலுள்ள குஞ்சு, தனக்குரிய சத்துப் பைகளிலுள்ள உணவைத் தின்று விட்டு, அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கும் சத்துப் பைகளையும் கவர்ந்து வளர்வதுண்டு.
சுறாக்கள் தங்கள் குட்டிகளை நெஞ்சுப் புற மீன் துடுப்பின் கீழ் பாதுகாப்பாக எடுத்துச் செல்கின்றன. சில சுறாக்கள் (நீலச் சுறா) கங்காருகள் போலக் குட்டிகளை உடலுடன் அணைத்துச் சுமந்து வளர்க்கின்றன. சுறாவின் உடலில் உப்புச் சத்து மிகுந்து காணப்படுவதனால், இது நீரை எளிதில் ஈர்க்கும். சுறாக்களுக்குள்ள மூன்று முக்கிய புலனுணர் உறுப்புகளில் ஒன்று, உடலின் இரு பக்கங்களின் நடுவில் தலையிலிருந்து வால் வரை, ஒரு மெல்லிய கால்வாய் போன்று வழவழப்பான நீர்மத்தால் நிரப்பப்பட்டுத் தோலினுள் புதைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பிரிந்து, உடலின் பல்வேறு பகுதிகளிலும் இணைக்கப் பட்டுள்ள நுண்ணிய நரம்புகள் மூலமாக, நீரோட்டத்தின் வேகத்தை அறிகிறது. மற்றொன்று, தலையின் முன் பகுதியில் நீர்மத்தால் நிரப்பப்பட்ட பல நுண் துளைகளாகக் காணப்படுகிறது.
நீரில் ஏற்படும் நீரமுத்த மாற்றங்கள், கடலின் ஆழம், தட்ப வெப்ப மாற்றம், உப்புக் கரைசலின் அளவு, மின்னழுத்த மாற்றம் முதலியவற்றை இது அறிகிறது. மூன்றாவது உடல் முழுதுமுள்ள இரண்டு செதில்களுக்கு இடையே உள்ள துளைகளுக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும் புலனறி அரும்புகளாகும். இவை சுவையையும், நீந்தும் போது, உடலின் சம நிலையையும் அறியும். இவற்றைத் தவிர தலையில் மணம் அறியும் புலனறி பள்ளங்களுமுள்ளன. மேலும், இதன் கண்கள் ஒளிக்கு ஏற்றவாறு, பார்வையை மாற்றிக் கொள்ளும் திறன் பெற்றவை.
20°Cக்குக் கீழ் நீரின் வெப்ப நிலை குறைந்தால், இது நீண்ட தொலைவிற்கு அப்பால் ஓர் இரையால் உண்டாக்கப்படும் ஒலி அலைகளைக் கேட்கவும், இரையிலிருந்து வெளி வரும் மணத்தை நுகரவும், இரையின் அளவு, தன்மைகளை அறியவும், தொலைவிலுள்ள இரையைப் பார்க்கவும், துரத்தவும் வல்லது. சுறாவால் வெள்ளை நிறத்தை எளிதில் அறிய முடிவதால், கடலில் மூழ்குவோர், பாதம், உள்ளங்கை போன்றவற்றைக் கறுப்பு உறையினால் மூடிக் கொள்வா். கடலில் காணப்படும் அனைத்துப் பொருள்களையும், தன்னையொத்த சுறாவையும் கூட உணவாகக் கொள்கிறது.
இதன் இரைப்பையில் 15% ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பதால், உணவை விரைவாகச் செரிக்க முடிகிறது. பல சமயங்களில் சுறா உட்- கொள்ளும் உணவைச் செரிக்காமலேயே, பாதுகாப்பாகப் பல நாள் வைத்திருக்கும். சுறா பசி எடுத்த பிறகே, இரையெடுக்க வேண்டும் என்பதில்லை. எதிரில் வரும். இரைகளைக் கிடைக்கும் போதெல்லாம் உட்கொள்ளும். செரிக்க முடியாத (தகரப் பெட்டிகள்) பொருள்களைச் சேர்த்து வைத்து, வாய் வழியே வெளித் தள்ளும் திறனுடையது. இரைக்காகச் சுறாக்கள் ஒன்றையொன்று கடுமையாகத் தாக்கிச் சண்டையிடவும் செய்யும்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காகப் படம், பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.----> சுறாவுடன் எப்போதுமே இரு வகையான சிறு மீன்கள் சேர்ந்து வாழ்வதாகத் தெரிய வருகிறது. இந்தத் தோழமையை வைத்துக் கொண்டு, சுறாக்களை, இவையே இரையை நோக்கி வழி நடத்துகின்றனவென்று கருதி, அவற்றை வழி காட்டி மீன் (pilot fish) எனக் குறிப்பிடுவர். சுறாவைக் காந்தம் போன்று பிடித்துச் செல்லும் ரிமோரா (remora) என்னும் ஒரு வகை மீனினம், சுறாவின் அடிப் பகுதியில் ஒட்டியிருந்து, அதன் சத்துப் பொருள்களை உறிஞ்சி வாழ்கிறது. இவை. சுறாவின் நட்பைப் பயன்படுத்தித் தங்களைக் காத்துக் கொள்ளவும், ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு வேகமாக நீந்திச் செல்லவும், அவை பிடிக்கும் இரையில் சிதறி விழுவதை உண- வாகக் கொள்ளவும் பயன் படுகின்றனவே தவிர, சுறாவிற்கு வழி காட்டிகளல்ல என்றும் கருதுகின்றனர்.
சுறா உணவாகப் பயன்படுகிறது. இதன் மீன் துடுப்புகளிலிருந்தும், கிளாஸ்பரிலிருந்தும் தயாரிக்கப் படும் சாறு (soup) மேலை நாடுகளில் விலையுயர்ந்ததாக உள்ளது. இதன் கல்லீரல் எண்ணெய் A வைட்டமின் நிறைந்துள்ளமையால், மனித இனத்திற்குப் பயன்படுகிறது. இதன் முரட்டுத் தோலும், செதில்களும் பதனிடப்பட்டு, உப்புக் காகிதம் (salt paper) போன்ற உராய்வுப் பொருளாகவும், (abrasive material) ஆபரணங்களாகவும் பயன்படுகின்றன. பல்லும், மூளையும் பொடியாக்கப்பட்டு மூளை, சிறுநீரக நோய்களுக்கு மருந்தாகின்றன.
இம்மீன்கள் மிகுதியாகப் பிடிக்கப் படுகின்றன. வரிசையாகத் தூண்டில்களை இரையுடன் மாட்டி, ஒரு நங்கூரத்தில் இணைத்து, அந்த நங்கூரத்தை ஒரு மிதவையில் கட்டிக் கடலுக்கடியில் விட்டு விடுவர். ஓர் இரவு சென்று, அதில் பிடிபட்டிருக்கும் சுறாக்களைப் பிடிப்பர். இம்முறையே, உலகெங்கும் வழக்கத்திலுள்ளது. இது மனிதர்களைத் தாக்குவதால், தென் ஆஃப்ரிக்கா, புளோரிடா (Florida) கடற்கரைப் பகுதிகளில், மக்கள் அதிகமாகக் குளிக்கும் இடங்களில் வலைப் பின்னல்களைக் (meshes) கரைக்குச் சற்று அப்பால், கடலினுள் வளைத்துச் சுறா வருவதைத் தடுப்பர். ஆஸ்திரேலியக் கடல்களில், கடலினடியிலிருந்து தொடர்ந்து காற்று நுரைகளை மேலனுப்புவதால், சுறாக்கள் அவற்றிற்கு அஞ்சி வெளியே வாரா. இம்முறையில், பல சுறாக்களை வலைப் பின்னல்களால் எளிதில் பிடிக்கின்றனர். ஜப்பானியர்கள் இதைப் பிடித்து, வணிகத்தைப் பெருக்கியுள்ளனர். 300 மில்லியன் ஆண்டுகளாக இருந்து வந்த இவ்வினம் அழிந்து விடாமலிருக்க, தற்பொழுது, அனைத்துலக மீன் பாதுகாப்புச் சங்கங்கள் முயன்று வருகின்றன. —ஞா. விக்டர் இராஜமாணிக்கம் நூலோதி. Paul Budker, The Life of Sharks, Weidenfeld and Nicolson, London, 1971; B.W.Halstead, Dangerous Marine Animals, Cornell Maritime Press Centreville, Maryland, 1980: R.W.Gilbert, et. al., Sharks, Skates and Rays, Johnsons Hopkin Press, Baltimore, 1967.
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 593)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pegazctt/
தமிழ்“சுறா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pegazctt/APA
Oliyon Research. (2026). சுறா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pegazctt/MLA
"சுறா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pegazctt/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment