இருமைக் கொள்கை
irumaik koḷkai
இறைவன் வேறு, உயிர்கள் வேறு; இறைவனே அனைத்து வல்லமையும் பெற்ற தன்னிகரற்ற தலைவன்; உயிர்கள் அவரது ஆணைக்குட்பட்டு, அவனைப் பக்தி செய்தல் மூலமே உய்ய முடியும் என்ற கோட்பாட்டினை, உலகு உய்ய அளித்துப் புகழுற்றவர் மத்துவர்.
இறைவன் வேறு, உயிர்கள் வேறு; இறைவனே அனைத்து வல்லமையும் பெற்ற தன்னிகரற்ற தலைவன்; உயிர்கள் அவரது ஆணைக்குட்பட்டு, அவனைப் பக்தி செய்தல் மூலமே உய்ய முடியும் என்ற கோட்பாட்டினை, உலகு உய்ய அளித்துப் புகழுற்றவர் மத்துவர். அவர் கருநாடக மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள மங்களூரை அடுத்த உடுப்பி அருகில் உள்ள பாசகசேத்திரம் என்னுமிடத்தில் பிறந்தார். துவைத வேதாந்தம் என்றும் தத்துவவாதம் என்றும் வடமொழியில் பெயர்பெற்ற அவரது இருமைக் கோட்பாடு, சங்கரரின் அத்துவைத வேதாந்தத்திற்கு எதிர்மறையானதாகும். முற்பிறப்புகளில் அனுமனாகவும் பீமனாகவும் பிறந்து, இறைவனின் செயல்களுக்குத் துணை இருந்த வாயுபகவான் உலகில் இருமைக் கோட்பாட்டினை நிலைநிறுத்த மத்துவராகப் பிறந்தார். வாசுதேவன் என்பது அவரது இயற்பெயராகும். ஆனந்ததீர்த்தர், அனுமான தீர்த்தர், சுகதீர்த்தர், பூரணபிரஞர் என்பன அவர்தம் புகழ்ப் பெயர்களுள் சில.
மத்துவர் இளமையில் பெற்றோரால் இனிமையுடனும் அன்புடனும் வளர்க்கப்பட்டார். அவர் பற்பல அற்புதங்களை இயற்றினார். ஒரு சமயம் அவர் ஒரு பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு ஊருக்கு வெளியே சென்றுவிட்டார். பெற்றோர் மகனைக் காணாது பல இடங்களில் தேடி மனம் வருந்திய நிலையில், அவர் மீண்டும் பசுவின் பின்னே வந்து சேர்ந்தார். தாய் ‘குழந்தாய் எங்குச் சென்றிருந்தாய்?’ எனக் கேட்க, தான் இறைவனைக் கண்டு வருவதாக அவர் கூறினார். பிறிதொரு காலத்தில் தந்தைக்குக் கடன் அளித்திருந்த வணிகன் தான் கொடுத்த கடனைத் திரும்பப் பெற அவரது மனைக்கு வந்தபோது, தந்தை பொருள் வசதி இன்மையால் வாங்கிய கடனை எவ்விதம் திரும்பச் செலுத்துவது எனக் கலங்கினார். அப்போது மத்துவர் மழலை பேசி அவ்வணிகனிடம் கைநிறையப் புளியங்கொட்டைகளை அளிக்க, இறையருளால் அக்கொட்டைகள் அனைத்தும் பொற்கழஞ்சுகளாயின. வணிகனும் கடனுக்கு மேலேயே பொருள் வந்த திருப்தியுடன் மனை ஏகினான். இளமையில் இவ்வாறு பற்பல அற்புதங்களைப் புரிந்த மத்துவர், அச்சுத பிரேசர் என்ற துறவியை அணுகித் தீட்சைப் பெற்று, பரம அமிச பரிபுராசாகர் என்ற பெயரில் மனைவாழ்வைத் துறந்து துறவியானார்.
ஒரு சமயம் மத்துவர் ஒரு நாத்திகரை எதிர்கொள்ள நேரிட்டது. மறைகள் மற்றும் மந்திரங்கள் முதலானவை பொய்யுரைகள் என வழக்காடிய அவரிடம், அவை உண்மையே எனக் கூறினார். மேலும், அவர் சிறிது நீரைக் கையில் எடுத்து ஒரு மாங்கொட்டையை அதில் வைத்துச்சில மந்திரங்களை முனகினார். அம்மாங்கொட்டை உடனே மாஞ்செடியாக மாறியது. அக்காலத்தில் வடக்கே சென்ற மத்துவர் கங்கை நதித் தண்ணீரில் படகு உதவியின்றித் தம் கால்களாலேயே தவவலிமையின் உதவியால் நடந்து அக்கரையில் இருந்த இராம் நகரை அடைந்தார். பின்னர் அவர், அந்நாட்டை ஆண்டு கொண்டிருந்த முசுலீம் அரசனிடம், அவனது தாய்மொழியான உருது மொழியிலேயே பேசி, அவ்வரசனைப் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
மத்துவர் பத்திரிநாத்து என்னும் புனிதத் தலத்தை அடைந்தார். அங்கு அவர் வேதவியாசரைக் கண்டு வணங்கி, அவரிடம் தாம் இயற்றிய கீதாபாடியம் என்ற நூலைப் பணிவுடன் வழங்கினார். அந்நூலைக் கண்டு மகிழ்வுற்ற வேதவியாசர், அதில் மத்துவர் தான் ‘சக்திக்கேற்றவாறு’ (சக்திதகா), என்று எழுதியிருந்ததை எளிமையாக (இலேசதகா) எனத் திருத்தித் தமது ஒப்புதலை அளித்தார். இவ்விதம் திருத்தியதன் மூலம் வேதவியாசர் மத்துவரின் பெரும் அறிவாற்றலை உலகிற்கு வெளிப்படுத்தினார் எனக் கொள்வர். பின்னர்ப் பாரத நாடு முழுவதும் இருமைக் கோட்பாட்டினை நிலை நாட்டுதல் வேண்டும் என்ற வியாசரின் ஆணையைத் தலைமேற் கொண்டு, இந்தியத் துணைக் கண்டம் எங்ஙணும் பலமுறை சுற்றுப்பயணம் செய்து தமது கொள்கையை நிலை நாட்டினார்.
சோபனபட்டர் என்ற புகழ்பெற்ற வடமொழிப் புலவரை வாதத்தில் தோற்கடித்து, அவரைத் தம் சீடராக ஏற்றுப் பத்துமநாபத்தீர்த்தர் எனப் பெயரளித்து அவரைத் துறவியாக்கினார். திரு விக்கிரம பண்டிதாச்சாரியார் என்ற அத்துவைதப் பெரும் புலவரையும் வாதத்தில் மத்துவர் வென்று, அவரையும் தம் சீடராக்கிக் கொண்டார். இவ்விருவரும் பிற்காலத்தில் மத்துவரின் பல நூல்களுக்கு விளக்கவுரைகள் இயற்றினர். எருதின் உருவத்தில் இருந்து மத்துவரிடம் பாடம் கற்ற இந்திரன், பிற்காலத்தில் செயதீர்த்தராக அவதரித்து, அவர் எழுதிய அனுவியாக்கியானம் என்ற நூலிற்கு இந்து மதத்தின் அனைத்துப் பிரிவினர்களாலும் புகழப்படும் ‘நியாயசுதா’ என்ற தெளிவுரையை வழங்கினான்.
தென் கன்னடத்தில் உடுப்பியில் எட்டு மடங்களை நிறுவிய மத்துவர், அங்குப் பெருமை வாய்ந்த கண்ணன் திருக்கோயிலை எடுப்பித்து கண்ணன் திருவுருவை நிறுவினார். எட்டு மடங்களின் துறவிகள் முறையாக இரு மாதங்களுக்கு ஒருமுறை, மாறி மாறி இறைவன் கண்ணனைப் பூசை செய்து வழிபடுதல் வேண்டும் என்ற நியதியை ஏற்படுத்தினார். இவ்வழிபாடு பின்னர்ச் சோதே மடத்தைச் சார்ந்த வாதிராசவெதிகள் காலத்தில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப்பெற்றது.
மத்துவர் துவைத வேதாந்தக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு 37 சிறந்த நூல்களை இயற்றியுள்ளார். அவர்தம் அறிவுசான்ற ஆக்கப்பணிகள் அளவிறந்தன. அவர் நூல்கள் பொதுவில் சருவ மூலம் எனப்படுகின்றன. அவர் பிரம்ம சூத்திரங்களுக்கு நான்கு விளக்கவுரைகளும், பகவத் கீதைக்கு இரண்டு விளக்கவுரைகளும், பத்து உபநிடதங்களுக்கு விளக்கங்களும், இருக்கு வேதத்தின் நாற்பது மந்திரங்களுக்கு விரிவாக்கங்களும் எழுதியுள்ளார். மேலும், அவர் பாரதத்தை மகாபாரத தாத்பரிய நிருணயம் என்றும், பாகவதத்தைப் பாகவத தாத்பரிய நிருணயம் என்றும் இயற்றியுள்ளதோடு, தம் மதக் கோட்பாடுகளுக்குத் தசப்பிரகரணங்களின் மூலம் செம்மையான வடிவம் அளித்துள்ளார். துவாதச தோத்திரத்தையும் வேறொரு தோத்திரப்பாடலையும் மத்துவர் இயற்றியுள்ளார். அவர் கிருட்டிண செயந்தி விழாவைக் கொண்டாடும் முறை பற்றிச் ‘செயந்தி நிருணயம்’ என்னும் நூல் இயற்றியுள்ளார். பெண்கள், துறவிகள், இல்லறத்தார், பிரமசாரிகள் ஆகியோர் எங்ஙனம் வாழ்வு நடத்துதல் வேண்டும் என்பது பற்றிய செய்திகளை மத்துவர் மூன்று நூல்களில் விளக்கியுள்ளார். தந்திரசாரம், மடக்கணிச் சொற்களினால் ஆன ‘இயமகபாரதம்’ முதலிய நூல்களும் மத்துவரால் இயற்றப்பெற்றவையே.
:மத்துவரின் இருமைக் கொள்கை பின்வருமாறு:
::1. இறைவன் (விட்டுணு) ::2. அனைத்து உயிர்கள் ::3. இயற்கை
1. அனைத்து உயிர்களும் இயற்கையும் இறைவனாகிய விட்டுணுவின் மேலாணைக்கு உட்பட்டவையே. விட்டுணு குறைவற்ற, இணையற்ற உயர் பண்புகளை உடையவன். எவ்விதக் கட்டுகளும் அற்ற நிறை சுதந்திரம் உடையவன். அனைத்து உயிர்களும் அவனது ஆணைக்குட்பட்ட குடிமக்கள்.
2. மத்துவர் ஐந்து விதமான, என்றும் அழிவற்ற வேற்றுமைகளைக் கூறுகிறார். அவை,
:: உயிர்களுக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள வேற்றுமை.
:: உயிர்களுக்கும் உயிர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமை.
:: உயிர்களுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள வேற்றுமை.
:: இயற்கைக்கும், இறைவனுக்கும் இடையே உள்ள வேற்றுமை.
:: இயற்கைக்கும், இயற்கைக்கும் இடையே உள்ள வேற்றுமை.
அனைத்து உயிர்களும் அறியாமை காரணமாக உலக வாழ்க்கை அல்லது பிறவி என்கிற சிறையில் அடைபட்டுச் செய்வது அறியாது துன்புறுகின்றன. இந்த அறியாமை காரணமாக உண்டாகும் வாழ்க்கைத் திரை ஆண்டவனின் உண்மை உருவத்தை மறைத்து, அதனை உயிர்கள் அறிய முடியாதவாறு தடைசெய்கின்றது. இந்தத் திரை எல்லா உயிர்களுக்கும் இயற்கையாகவே உள்ளது. இதற்குத் தொடக்கம் இல்லை. ஆனால், நீக்கம் அல்லது அழிவு உண்டு, இதன் காரணமாக உயிர்கள் பிரமத்தின் குணநலன்களை அறிய முடிவதில்லை. இதன் காரணமாகத் தமக்கும் இறைவனுக்கும் உள்ள வேற்றுமைகளைப் பிரித்து உணரமுடியாது உயிர்கள் அல்லல் அடைகின்றன. உயிர்கள் அறியாமை காரணமாக அழியக்கூடிய உடலே அனைத்தும் என்று நினைத்து, உடலைப் பேணுதலே தமது தலையாய கடமையாகக் கொண்டு, உடலின்பத்தை நாடி எங்கணும் அலைந்து, இறைவனை அறவே மறந்து முடிவற்ற துன்பத்தை அடைகின்றன. இக்கொடிய பிறவிச் சிறையிலிருந்து விடுதலை அடைவதற்கும் துயரக் கலப்பற்றதும் நிலையானதும் இன்புருவானதுமான மேல்நிலை அல்லது வீட்டினை அடைவதற்கும் இறைவனான நாராயணனின் அருள் மிக மிகத் தேவை. முழுமுதற் கடவுளான விட்டுணு ஒருவனாலேயே உயிர்களுக்கு வீடுபேறு அருள் இயலும். அவனருள் பெறுவதற்கு உயிர்கள் அவனைப் பக்தி செய்தல் வேண்டும்.
பக்தி செய்தலுக்கு உயிர்கள் இறைவனின் பெருமை முழுவதும் உணர்தல் வேண்டும். இறைவனின் பெருமையை உணர்வதற்கு, உயிர்கள் ஒரு சிறந்த ஆசிரியர்வழி மறைநூல்களை ஓதி உணர்தல் வேண்டும். உயிர்களுக்கு நன்னடத்தையும், ஆசிரியர் பால் பணிவன்பும் இருத்தல் வேண்டும். நல்லாசிரியர் மற்றும் மறை நூல்களின் வழிகாட்டுதலுடன் உயிர்கள் இறைவனை மனத்தூய்மையோடு வழிபட்டால், பக்திமுற்றி, இறைவனின் மனம் இரங்கிஅவன் அருள் கிட்டும். இறைவனது அருள் பெற்றால், பிறவிக் கட்டிலிருந்து விடுதலை பெற்று, அவன் திருவடிகளை அடைந்து, மேன்மேலும் அவனது அருள் சுரத்தலால் வீடுபேறு என்ற மேல்நிலை அடையலாம். வீடுபேறு அடைந்த நிலையிலும் உயிர்கள் இறைவனது ஆணைக்குட்பட்டவையே. இவ்வாறு மத்துவர் இருமைக் கொள்கைகளை விளக்குகிறார். பி.நா
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 235)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pedgzzxk/
தமிழ்“இருமைக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pedgzzxk/APA
Oliyon Research. (2026). இருமைக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pedgzzxk/MLA
"இருமைக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pedgzzxk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment