அல்லி என்னும் அரசியின் கதையைக் கூறும் நாட்டுப்புறப் பாடல் நூலாகும். இதனைப் புகழேந்திப் புலவர் பாடியதாகச் செவி வழிச் செய்தி கூறும். இவர் இயற்றியனவாகக் கூறப்படும் கதைப்பாடல்கள், கி.பி. 18–ஆம் நூற்றாண்டில் எழுத்து வடிவம் பெற்றுக் கி.பி. 19–ஆம் நூற்றாண்டில் அச்சாகியுள்ளன. அல்லி அரசாணி மாலையில் கூறப்படும் கதை மகாபாரதக் கதைப் பாடல்களுள் ஒன்றாகும். சோழ நாடு பஞ்சமுற்றபோது பாண்டியன் சோழனுக்காக இந்திரனிடம் போய் மழைவரம் கேட்டான். பாண்டியன் நடந்துகொண்ட முறை சரியில்லை என எண்ணி இந்திரன் அவன்மீது சினம் கொண்டு சோழ நாட்டிற்கு வளத்தையும், பாண்டிய நாட்டிற்கு வறட்சியையும் நல்கினான். பாண்டியர்கள் குழந்தை வரம் கேட்டுத் தவம் செய்தார்கள். அவர்களுக்குச் சொக்கநாதர் அருளால் அல்லி மகளாகப் பிறந்தாள். இடைக்காலத்தில் பாண்டிய அரசின் ஆட்சிப் பொறுப்பேற்ற நீள்முகன் எனும், வெள்ளாட்டி பெற்ற மகன் அரசைத் திரும்பக் கொடுக்க மறுத்துப் பாண்டியர்களை அடிமையாக்கித் திறை பெற்று வந்தான். அல்லி பெரியவள் ஆனதும் நீள்முகனை வென்று ஆட்சியைப் பெற்று இராணியானாள். ஆண்களை வெறுக்கும் இவளைத் தீர்த்த யாத்திரைக்குக் கிருட்டிணனோடு வந்த அருச்சுனன் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறான். கிருட்டிணன் உதவியால் பல இடையூறுகளைக் கடந்து பாம்புருவில் அந்தப்புரம் சென்று, அவளை மயக்கிக் கூடி, அவன் கழுத்தில் தாலியும் கட்டிவிடுகிறான். அல்லி அறிந்து, அந்த இழிவைப் போக்கிடப் பாண்டவர்கள் மீது படையெடுத்தாள். இவளை நேரில் வெல்ல முடியாமல் சகாதேவன் புலிக் கூண்டால் தந்திரமாகப் பிடித்து விடுகிறான். இறுதியில் பாஞ்சாலி அல்லியின் மனத்தினை மாற்றி மணமுடித்து வைக்கிறாள். இக்கதை, அல்லி திருமணம், அல்லி அருச்சுனா, அல்லி அர்ச்சுனன், அல்லி சரித்திரம் எனும் பெயர்களில் நாடகமாகவும், நடத்தப் பெற்று வருகிறது.சு.ச.