அடிப்படைப் பொருளியல்
aṭippaṭaip poruḷiyal
மனிதன் அன்றாட வாழ்க்கையில் வருவாயை ஈட்டி அவ்விதம் ஈட்டப்பட்ட வருவாயைத் தன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு எவ்வாறு செலவிட முயல்கின்றான் என்பதை ஆராயும் சமூகவியலே பொருளியல் எனப்படும்.
மனிதன் அன்றாட வாழ்க்கையில் வருவாயை ஈட்டி அவ்விதம் ஈட்டப்பட்ட வருவாயைத் தன் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு எவ்வாறு செலவிட முயல்கின்றான் என்பதை ஆராயும் சமூகவியலே பொருளியல் எனப்படும். ஆகையால், மனிதனின் அன்றாட வாழ்க்கையில் பொருளாதார ஆற்றல்கள் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் ஒரு பொருளாதார அடிப்படையில் இயங்கும் ஓர் உயிரினம் என்று கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையில் பொருளாதார ஆற்றவில் இணைக்கப்படாத மனிதன் ஒருவனும் இல்லையென்றே கொள்ளல் வேண்டும்.
பற்றாக்குறை
இவ்வாறு இயங்கும் பொருளாதார மனிதன், உலகிலே முதலில் கண்டறிவது பற்றாக்குறை (Shortage). அவனுக்கு விருப்பம் பலவாகவும் அவற்றை நிறைவு செய்யத் தேவைப்படும் பொருள்கள் குறைவாகவும் உள்ளதைக் கண்டறிகின்றான். அவனுக்குப் பயன்பாடு உடையவை பற்றாக்குறையாக இருப்பதனால் அவற்றை அடைவதற்கு மனிதன் ஆவலுறுகின்றான். அதற்கு ஒரு விலை கொடுத்து வாங்குவதற்கு முனைகின்றான். தேவையோடு ஒப்பிடும்போது அளவுக்கு மிகுதியாக அரிசி கிடைக்குமானால் அதனை விலை கொடுத்து வாங்குவதற்கு முனைய மாட்டான். ஆகையால் பொருளாதாரத்தில் சிக்கலுக்கு உரித்தான கூறுகளில் பற்றாக்குறை என்பது அடிப்படையானது. சூரிய வெளிச்சம் பெருமளவில் கிடைப்பதால் அதனை யாரும் தேடுவதும் இல்லை; விலை கொடுத்து வாங்குவதற்கு முன் வருவதும் இல்லை. காண்க: அருமைப்பாடு.
பயன்பாடு
பொருளியலில் மனிதன் தேடும் பொருள்களுக்குப் பயன்பாடு உண்டு. பயன்பாடு (Utility) என்பது மனித விருப்பத்தை நிறைவு செய்யும் ஆற்றல். இப்பயன்பாடு வடிவப் பயன்பாடாகவும் (Form Utility), இடப் பயன்பாடாகவும் (Place Utility), காலப் பயன்பாடாகவும் (Time Utility) இருக்கலாம். அப்பொருளில் பயன்பாடு இருப்பதால்தான் அதனை மக்கள் விரும்புகின்றனர். உலகில் இயற்கையில் தோன்றும் எல்லாப் பொருள்களும் ஏதேனும் ஒரு வகையில் பயன் உடையவே. ஆனால் பயன்பாடு இருந்தால்தான் மக்கள் அதற்குப் பணத்தை அல்லது பணியைத் தந்து பெற முயல்கின்றனர். இயற்கையில் கிடைக்கும் பண்டத்தின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் வடிவப் பயன்பாட்டைப் படைக்கலாம். எடுத்துக்காட்டு: களிமண்ணிலிருந்து பானையை உருவாக்குதல். பண்டம் கிடைக்கும் இடத்தை மாற்றுவதன் மூலம் இடப்பயன்பாட்டைப் படைக்கலாம். எடுத்துக்காட்டு: வங்காளத்திலிருக்கும் சணலைத் தமிழகத்தில் கிடைக்கச் செய்தல். பண்டம் கிடைக்கும் காலத்தை மாற்றுவதன் மூலமும் பயன்பாட்டைப் படைக்கலாம். எடுத்துக்காட்டு: மழைக்காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமித்துக் கோடையில் வேளாண் பெருமக்களுக்குக் கிடைக்கும்படி செய்தல். இம்மூன்றோடு பணிப்பயன்பாட்டையும் (Service Utility) குறிப்பிடலாம். ஒரு சில பண்டங்களில் இப்பயன்பாடுகள் கலந்து இருப்பதையும் காணலாம். எடுத்துக்காட்டு: மின்சாரம். இத்தகைய பயன்பாடுகளைப் படைப்பதையே ஆக்கம் அல்லது உற்பத்தி எனக் குறிப்பிடலாம்.
நுகர்வு
பண்டங்களையும் பணிகளையும் பயன்படுத்தி மனிதன் மனநிறைவைப் பெற முயல்கிறான். இதுவே பொருளியல் நடவடிக்கைகளின் தொடக்க நிலை. நுகர்வில் (Consumption) நாட்டம் இல்லையெனில் பொருளியல் நடவடிக்கைகளும் மங்கிமடிந்து விடும். ஆகையால் நுகர்வு மிகவும் அடிப்படையான பொருளியல் தத்துவம். ஆனால் இப்படி நுகர்வதில் மனிதன் ஒரே சீராக நுகர்வதில்லை. பொருளின் பல அலகுகளை ஒருவன் நுகரும்போது, அப்பொருளை நுகர்வதற்கான வேட்கை அவனுள் குறைந்து விடுவதனால், ஒரு பொருள் மேலும் மேலும் கிடைக்கும் போது அப்பொருளின் இறுதி அலகின் பயன்பாடு குறைந்து கொண்டே வரும். இவ்விதியைக் குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாடு விதி (Law of Diminishing Marginal Utility) என்பர். அதைப்போன்று மனிதன் தன்னுடைய வருவாயைப் பல பொருள்களில் பயன்படுத்தும்போது தனக்குக் கிடைக்கும் மொத்தப் பயன்பாட்டு உச்சஅளவில் கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்வான். எனவே பல பண்டங்களின் இறுதி நிலைச் சமன்பாடுகளும் ஒன்றோடொன்று சமமாக இருக்கும் வண்ணம் பணத்தைப் பகிர்ந்து பயன்படுத்துவான். இதைச் சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி (Law of Equi-Marginal Utility) என்பர்.
நுகர்வின் அளவைக் குறைத்துச் சேமிப்பை மிகுதியாக்குவதன் மூலம் மூலதனத்தைத் திரட்டி முதலீடு செய்து நாட்டை முன்னேறச் செய்ய வேண்டும் என்பது ஒரு கொள்கை. ஆனால் இக்கருத்து இக்காலத்தில் முற்றிலும் நிறைவான ஒன்று என ஏற்றுக் கொள்ளப்படவில்லை. நுகர்வை மிகுதிப்படுத்தி அதன் மூலம் தேவையைப் பெருக்கி அதன் வழியாக உற்பத்தியையும் வருவாயையும் வேலை வாய்ப்பையும் பெருக்கிப் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறலாம் என்ற கருத்து இக்காலத்தில் வலுப்பெற்று வருகிறது.
பொருளாக்கம்
படைத்தல் என்பது உற்பத்தி அல்லது ஆக்கம். பொருள் ஆக்கத்திற்கு (Production) இன்றியமையாத காரணிகள், நிலம் (Land), உழைப்பு (Labour), மூலதனம் (Capital) இம்மூன்றையும் இணைக்கும் அமைப்பு (Organisation) என நான்கு ஆகும். இயற்கைச் செல்வம் உலகிலேயே பரந்துகிடக்கும் நிலங்கள், தட்பவெப்பக் கால நிலைகள், ஆறுகள், மலைகள் போன்றவை. இவை பொருளியலில் நிலம் என்று சொல்லப்படுகிறது. மனிதனின் உடலால் அல்லது சித்தனையால் பயன் கருதி மேற்கொள்ளப்படும் முயற்சி உழைப்பு எனப்படும். செல்வத்தை ஆக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் செல்வத்தின் பகுதி மூலதனமாகும். இதை மனிதன், தான் ஈட்டும் வருவாயிலிருந்து சேமித்து அளித்தல் வேண்டும். இம்மூன்று காரணிகளையும் ஒருங்கிணைத்துப் பயனுள்ளதாகச் செய்யும் காரணி, அமைப்பு எனப்படுகின்றது.
ஆக்கக் காரணிகளை உற்பத்தியில் ஈடுபடுத்தும் போது அவைகளால் ஏற்படும் பயன்கள் எப்பொழுதும் சமநிலையில் இருப்பதில்லை. சில காலங்களில் மிகையான ஆக்கக் காரணிகளைப் பயன்படுத்தும் போது விளைவுகள் மிகும் விகிதத்தில் இருக்கும். இதுவே வளர்ந்து செல் விளைவு விதியாகும். இதனைப் பெருமளவுக்கு எந்திரத் தொழில்களில் காணலாம். சில ஆக்க முறைகளின் காரணிகள் குறைந்த விகித விளைவை அளிக்கும். எடுத்துக்காட்டாக வேளாண்மையில் காரணிகளை ஓர் அளவுக்கு மேல் மிகச்செய்தால் இறுநிநிலை விளைவு குறைந்து செல்லும், இதுவே குறைந்து செல் விளைவுவிதி ஆகும்.
அங்காடி
தனக்குத் தேவையான பொருள்களை மனிதன் அங்காடியில் பெறுகின்றான். அங்காடி (Market) என்பது ஒரு பரப்பு. அங்கு வாங்குவோரும் விற்பவரும் நேரடியாக அல்லது மறைமுகமாகத் தொடர்பு கொள்கின்றனர். பண்டங்களுக்கும் பணிகளுக்கும் அங்காடியில் அவற்றின் தேவை, அளிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றின் விலை வரையறுக்கப்படுகிறது. அளிப்போர் மிகுதியான விலையில் விற்கவும் வாங்குவோர் குறைவான விலையில் வாங்கவும் போட்டியிடுவர். இவ்வாறு போட்டியிடுவதன் முடிவில் அளிப்போரும் நுகர்வோரும் சமநிலை அடைவர். இந்தச் சமநிலையில் அளிக்கும் பொருளின் அளவும் நுகரும் பொருளின் அளவும் சமநிலை அடையும். இந்தச் சமநிலையில் கூறப்படும் விலையே அந்தப் பொருள்களுக்கு அங்காடி விலையாகும். ஒரு கத்திரிக்கோலில் இரண்டு தகடுகளும் ஒரே சமயத்தில் இயங்கிக் குறிப்பிட்டதொரு வேலையை முடிப்பது போல, அளிப்பும் தேவையும் ஒரே சமயத்தில் இயங்குவதால் அங்காடிச் சமநிலை உருவாகிறது; பண்டம் அல்லது பணியின் விலை வரையறுக்கப்படுகிறது.
பகிர்வு
ஓராண்டில் ஒருநாட்டில் உற்பத்தியான பொருள்களின் மொத்தத்தை நாட்டின் வருவாய் (National Income) என்று கொள்ளலாம். இந்த உற்பத்தியான பொருளை ஆக்கக் காரணிகளுக்குப் பகிர்ந்தளித்தல் (Distribution) முறையாகும். அப்படிப் பகிர்ந்து அளிக்கும்போது ஒவ்வொரு காரணிக்கும் வரும் பங்கு, வாரம், கூலி, வட்டி, ஆதாயம் என்று பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இயற்கைச் செல்வங்கள் வாரத்தையும், உழைப்புக்கூலியையும், மூலதனம் வட்டியையும், அமைப்பு ஆதாயத்தையும் பெறுகின்றன. அதாவது நிலக்கிழார்கள் வாரம்என்ற வடிவத்திலும் உழைப்பாளர்கள் கூலி என்ற வடிவத்திலும் மூலதனக்காரர்கள் வட்டி என்ற வடிவத்திலும் அமைப்பாளர்கள் ஆதாயம் என்ற வடிவத்திலும் தங்கள் பங்கினைப் பெறுகின்றனர்.
பணம்
பொருள்களை ஒருவர் கையிலிருந்து மற்றொருவர் கைக்கு மாற்றுவதற்கு, அதாவது பண்ட மாற்றத்திற்கு இன்றியமையாத கருவி பணம் (Money), பணமென்பது பொருள்களின் மதிப்பை அள- விடும் கருவியாகும். பணத்திற்குச் சிறப்பான இலக்கணம் அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் செலாவணியாயிருக்க வேண்டும். ஆகையால் அப்பணத்தை அரசாங்கம் முறையாக அச்சிட்டு வெளியிடுவது இன்றியமையாததாகும். வங்கிகளும் பணத்தைப் பெருக்குகின்றன. அப்பணம் வங்கிகளில் கடன் விரிவாக்கம் மூலம் உண்டாகிறது. இவ்வாறு உண்டாகும் பணம் பண்டமாற்றத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. பொருள்கள் ஓர் அளவாகவும் பணம் மிகுதியாகவும் இருக்குமேயானால் பொருள்களின் விலை மிகுதியாகும். பொருள்கள் ஓர் அளவாகவும் அளிப்புக் குறைவாகவும் இருக்குமேயானால் விலை குறையும். ஆகையால் பொருள்களின் விலை பண அளிப்பின் தன்மையோடு நேர்முக விகிதமாக இணைந்து இருப்பதைக் காணலாம். இந்தத் தன்மையைவிளக்கும் தத்துவம் பண அளவுக் கோட்பாடு எனப்படுகிறது.
ஒரு நாட்டின் பணம், அந்நாட்டின் எல்லைக்குள் சுழலும் செலாவணியாகும். ஆனால் பன்னாட்டு வாணிகத்தில் அயற் செலாவணியைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படுகிறது. அந்த அயற் செலாவணி நிலையை வரையறை செய்வதற்கு மிகவும் சிறப்பானது பண்ட ஏற்றுமதியும் இறக்குமதியும் ஆகும்.
பொது நிதி
தனியார் வருவாயைப் பெற்றுச் செலவு செய்து உச்ச அளவு நன்மையைப் பெற முயல்வதைப் போன்று, அரசுகளும் பல வழிகளில் பல கோட்பாடுகளின் அடிப்படையில் பணத்தைப் பெற்றுப் பணத்தைச் செலவிட்டு உச்ச அளவு சமுதாய நன்மையைப் பெற முயல்கின்றன. அரசின் செலவைப் பொதுச் செலவு என்றும் அரசின் வரவைப் பொது வரவு என்றும் கூறுவர். அரசின் வரவு செலவுகளை முன்னதாக அறிவிக்கும் நிதி அறிக்கைகைப்பட்செட் (Budget) என்றும் வரவு செலவு அறிக்கை என்றும் குறிப்பிடுவதுண்டு, வரவுக்கு மிஞ்சிய செலவு இருக்கும்போது பொதுக் கடன்களை எழுப்பி நிதி நிலையைச் சமன்செய்ய அரசுகள் முயல்கின்றன. தனி மனிதன் பொது வரவிற்குத் தன்னாலியன்ற பங்கைச் செலுத்துகிறான்; பொதுச் செலவினால் நன்மைகளைப் பெறுகிறான். பொருளாதார வாழ்வில், அரசு நடவடிக்கைகள் வளர்ந்து செல்லும் இக்காலத்தில் பொதுநிதி மிகுந்த சிறப்பைப் பெற்று வருகிறது.
வங்கியல்
பணத்தைப் பொது மக்களிடமிருந்து குறைந்த விலைக்கு (வட்டிக்கு) வாங்கிப்பணத் தேவையுள்ளவர்களுக்கு மிகுந்த வட்டிக்குக் கொடுத்து அதன் மூலம் வணிக வங்கிகள் ஆதாயம் பெறுகின்றன. நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு, பண அளிப்பைத் தேவைக்கேற்ப மாற்றி, அரசுகளுக்கும் வங்கிகளுக்கும் வங்கியாகத் தலைமை நிலையில் விளங்குவது மையவங்கி. கூட்டுறவின் பயன்களை முழுமையாகப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன கூட்டுறவு வங்கிகள்; அயற் செலாவணிப் பணியில் சிறப்பாகப் பணியாற்றுவன அயற் செலாவணி வங்கிகள்; ஊரகங்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு செயல்படுபவை ஊரக வங்கிகள். இவை போன்ற பல நிதி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. தனி மனிதன் பல நிலைகளில் இந்நிறுவனங்களோடு தொடர்புடையவனாக இருக்கிறான்.
போக்குவரத்தும் செய்தித் தொடர்பும்
நாட்டின் பொருளாதாரத்திற்கு அடிப்படையாகத் திகழ்வன இவை. இத்துறையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கேற்ப நாடுகளின் பொருளாதார முன்னேற்றமும் அமையும்.
பொருளாதார முன்னேற்றம்
தனியாள் உண்மை வருவாய் (Per Capita Income) வளர்ந்து செல்வதைப் பொருளாதார முன்னேற்றம் எனலாம். இன்றைய அரசுகள் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதில் மிகுந்த அக்கரையும் ஆர்வமும் காட்டி வருகின்றன. நாட்டு வருவாயை மிகைப்படுத்தி, மக்கள் பெருக்க வேகத்தைக் கட்டுப்படுத்தி, கல்வி நிலையை மேம்படுத்தி, வேலையின்மையைத் தவிர்த்து, விலைகளை நிலைப்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எல்லா நாடுகளும் அயராது பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றன. பொருளாதார முன்னேற்றத்தைப் பெறுவதில் அரசுகளின் பங்கு நாள்தோறும் பெருகிக் கொண்டே வருகிறது.
இப்பொருளியல் அடிப்படைகள் பொருளியலில் பதிந்திருப்பதைத் காணலாம். எளிய மனிதன் உலகில் வாழ்க்கை நடத்த வேண்டுமேயானால் இவ்வடிப்படைப் பொருளியல் ஆற்றல்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும்.அ.இரா.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 252)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pdb9afhn/
தமிழ்“அடிப்படைப் பொருளியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pdb9afhn/APA
Oliyon Research. (2026). அடிப்படைப் பொருளியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pdb9afhn/MLA
"அடிப்படைப் பொருளியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/pdb9afhn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment