இது அழற்சியில்லாத சிரை அடைப்பாகும். புறங்கால் தசையில் உள்ள சிரையில் படிம உறைவு மிகுதியாக வரும். நோய்க் காரணம். சிரையில் ஏற்படும் காயத்தால் வரலாம். பேறு காலம் பின் நிலையில் சில பெண்களுக்கு ஏற்படும். வயதானவர்கள் நீண்ட நாள் படுக்கையில் இருந்தால் வரும். வயதானவர்களின் தசை நார்கள் சோம்பிய நிலையில் இருத்தல், குருதி உறை நிலை மிகுதியாகிச் சிரையில் அடைப்பு ஏற்படுதல் போன்றவற்றால் வரலாம். சிலருக்கு எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் இறந்த பின், பிணக் கூற்று ஆய்வில் தெரிய வரும். சிலருக்கு அறுவைக்குப் பின் ஏற்படும். நோய் அறிகுறிகள். இந்நோய் அறுவைக்குப் பின்னோ, மகப் பேற்றுக்குப் பின்னோ 10 நாள் கழித்து வரும். சிலருக்கு இரத்தத்தின் உறை நிலை மிகுதியாகி, உடனே அடைப்பு ஏற்படும். அடைப்பின் கீழ், வீக்கமும், வலியும் தோன்ற, குருதி கருநீலமாக இருக்கும். தோல் குளிர்ந்து இருக்கும். சிலருக்கு வீக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நீர் வடியும். சிலருக்கு அரிப்பு ஏற்படும். நோய் கண்டுபிடிக்கும் முறைகள். நீர் அடைப்புக்கு மேல் உள்ள சிரையில் ஊடுகதிர் செலுத்தி, அடைப்பின் காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். குருதியின் உறை நிலையைக் கணக்கிடுதல் மூலமும் அறியலாம். பிற நோய்கள். அடைபட்ட சிரையின் உட்பகுதியிலிருந்து குருதித் துகள்கள் பிரிந்து, குருதி ஓட்டம் மூலம் சுவாசப்பையை அடைந்து, அங்கு அழற்சியையோ, கட்டியையோ உண்டாக்கும். குருதி ஓட்டம் தடைப்படுவதால், தசை நார் நலிந்து விடும். மருத்துவ முறை. முதியோரை நீண்ட நாள் படுக்கையில் படுக்க வைக்கக் கூடாது. இயன் மருத்துவம் (physiotherapy) மூலம் தசை நார்களை நன்றாக இயங்க வைத்தல் வேண்டும். இந்நோய் கால்களைப் பாதிப்பதால், படுக்கையில் காலை உயரே தூக்கி வைத்துக் கொண்டு தூங்க வேண்டும். மருத்துவம். குருதி உறைவைத் தடுக்கும் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தலாம். ஹெபாரின் (heparin) என்னும் மருந்து மிகவும் சிறந்தது. குருதி உறை கட்டியை மேல் நோக்கிச் செல்ல விடாமல், அறுவை மூலம் அடைப்புக்கு மேற்புறம் கட்டி விடலாம். இம்முறையை மிகுதியாகப் பின்பற்றுவதில்லை. சிலர், ஸ்ரெப்டோகைனேஸ் மருந்தைப் பயன்படுத்துகின்றனர். —சொ. நடராசன் நூலோதி. John Macleod, Davidson's Principle and Practise of Medicine, Fourteenth Edition, ELBS, London, 1984.