என்பார் அக்பரை எதிர்த்து இரண்டாம் பானிப்பட்டுப் போரில் போரிட்ட இந்துப் படைத் தலைவர். உமாயூன் கி.பி. 1556–ஆம் ஆண்டில் காலமானபோது அக்பருக்குப் பதின்மூன்று வயதே நிரம்பியிருந்தது. முடிசூட்டிக் கொண்டவுடன் அவரை எதிர்நோக்கியிருந்த பெரும் சிக்கல் ஈமு (Hemu) என்பாரை எதிர்த்துப் போராடுவதுதான். ஈமு வங்காளத்தை ஆண்ட முகமது சா அதாலி என்பாரின் தலைமை அமைச்சராயிருந்தவர். உமாயூன் காலமாகிவிட்டார் என்ற செய்தி தெரிந்தவுடன் ஈமு ஆக்ராவின்மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டார். அங்கிருந்து இவர் தில்லியை நோக்கி அணிவகுத்துச் சென்று அதனைத் தாக்கினார். தில்லியின் மொகலாய ஆளுநராயிருந்த தார்டிபேக்கு (Tardi Beg) ஈமுவை எதிர்க்கத் துணியாமல் தில்லியை விட்டு ஓடிப்போனான். தில்லியை ஈமு கைப்பற்றிக்கொண்டு விக்கிரமசித்து (Vikramajit) என்னும் பெயருடன் அரசரானார். ஈமு திறமைமிக்க போர்வீரர். இவர் பனியா (Baniya) வகுப்பில் பிறந்தவர். தொடக்கத்தில் இவர் சிறு கடையொன்றை வைத்திருந்தார். கடுமையான உழைப்பாலும் நேர்மைத் திறனாலும் இவர் சௌத்திரி (தலைவர்) என்று கருதப்பட்டார். இவருடைய திறமைகளைக் கண்ணுற்ற அரசு ஊழியர்கள் இவரைச் சுல்தானிடம் அறிமுகம் செய்துவைத்தனர். சிறிதுகாலத்தில் ஈமு சுல்தானின் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உகந்தவராகிச் சுல்தானைப் பல தொல்லைகளிலிருந்து காத்தார். ஈமு தலைசிறந்த நிருவாகியாகவும், படைத்தலைவராகவும் பதவியில் உயர்த்தப் பெற்றார். இத்தகைய போர்வீரருடன் அக்பர் மோதவேண்டிய சூழ்நிலை தோன்றியது. அக்பருக்கு உறுதுணையாகப் பைராம்கான் வந்தார். ஈமுவை எதிர்ப்பதே சரியான வழி என்று அவர் அக்பருக்குக் கருத்துரை வழங்கினார். சமுவின் படைகளும், அக்பரின் படைகளும் கி.பி. 1556–ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பானிப்பட்டுப் போர்க்களத்தில் மோதிக் கொண்டன. தொடக்கத்தில் ஈமுவே வெற்றிபெறும் நிலையில் இருந்தார். ஆனால், அவருடைய கண்ணில் தைத்த அம்பொன்றின் விளைவாக ஈமு உணர்விழந்தார். அவருடைய படையில் குழப்பம் மூண்டது. ஆப்கானியர்கள் தலைவரின்றிப் போர்க்களத்தை விட்டு ஓடினர். ஏறத்தாழ 1500 யானைகளையும், எண்ணற்ற பிற பொருள்களையும் அக்பரும், பைராம்கானும் பெற்றார்கள். ஈமு கைப்பற்றப்பெற்று அக்ப- ருக்குமுன் கொண்டுவரப்பட்டார். அக்பரே ஈமூவைக் கொன்றார் என்று சிமித்து (Smith) கருதுகிறார். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாதவர்களும் உளர். தோல்வியுற்றவரை அக்பர் கொல்லவில்லை என்பது பேராசிரியர் சிரீவசுத்தவா (Srivastava) என்பாரின் கருத்தாகும். அக்பர் பெற்ற இவ்வெற்றி இந்திய வரவாற்றில் ஒரு திருப்புமுனையாகும்.