கி.பி. 15-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கோவைப் பிரபந்தங்களுள் ஒன்று. இராமேசுவரம் என்னும் தலத்தில் கோயில் கொண்டுள்ள இராமநாத சுவாமியின் மீது பாடப்பட்டது இச்சிற்றிலக்கியம். இதன் ஆசிரியர் கயாதர நிகண்டு என்னும் நூலை இயற்றிய கயாதரர் ஆவார். இராமேசுவரத்தினைச் சேர்ந்த இவர் அந்தணமரபில் தோன்றியவர்; சைவ சமயத்தவர்; வடமொழியிலும் தமிழிலும் புலமை நிரம்பியவர். இவர் கயாதர நிகண்டேயன்றி, தேவை அந்தாதி என்றொரு அந்தாதி நூலையும் இராமேச்சுரக் கோவை என்றொரு கோவை நூலையும் பாடிய செய்தியினைக் கயாதர நிகண்டின் இரு செய்யுட்களில் (402,566) குறிப்பிட்டுள்ளார். இவ்வந்தாதி அந்தாதி வகையிலமையும் பிரபந்தமாகவன்றி, ஒருவகை நிகண்டுத் தொகுப்பாக இருத்தல் கூடும் என்று கருதப்படுகிறது, தேவை என்பது இராமேசுவரத்தினைக் குறிக்கும் வேறு பெயர். இவ்வூர் இறைவன் மீது பாடப்பெற்ற இராமேச்சுரக் கோவை காயாதரச் செய்யுளில் ‘தென் தமிழ்த் தேவை மன்னும் கோவை இராமீச்சுரக் கோவை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏடெழுதுவோரால் நேர்ந்த பிழையாகுமென்று எஸ். வையாபுரிப் பிள்ளை கருதுகிறார். இந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.