இனக்குழு இசையியல் என்பது ஒவ்வொரு குழுவினரின் வாழ்க்கையமைப்பிலும் காணப்பெறும் இசைமுறைகளை, அறிவியல் முறைப்படி ஆராயும் ஒரு பண்பாட்டாய்வுப் பிரிவாகும். மக்கள் குழுவினர் அனைவருமே தாம் வாழும் நிலப்பகுதியாலும், மொழியாலும், வாழ்க்கை முறைகளாலும் ஒன்றுபட்டு இனக்குழுவினராகக் (Ethnic group) காணப்படுகின்றனர். ஒவ்வோர் இனக்குழுவினரும் தம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள், விலங்குகள், இயற்கையமைப்பு, விண்வெளி, உலகம், இசை, சமயம், தெய்வம், வாழ்வின் நிகழ்ச்சி ஆகியவை பற்றி வெவ்வேறான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். இக்கருத்தின் அடிப்படையிலேயே உலகத்தின்பால் பொதுக் கருத்தையும் தொடர்புபடுத்தி எண்ணுகின்றனர். இனக்குழு இசையியல் (Ethnomusicology) என்னும் சொல்லை 1950–இல் சாப் குன்சுட்டு (Jaap Kunst) என்னும் தச்சு (Dutch) நாட்டவர் உருவாக்கினர். இசையியலாரையும் மானிடவியலாரையும் கொண்ட இனக்குழு இசையியல் என்னும் கழகம், 1955–ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்றது. பண்பாட்டின் பல தலையான கூறுகளுள் ஒன்றான இசையைத் தனியே விரிவாக ஆராயும் பொருட்டு முகிழ்த்த இத்துறை, கி.பி. 1880–இல் ஒப்பீட்டு இசையியல் (Comparative Musicology) எனக் கூறப்பட்டு வந்தது. இனக்குழு இசையியலார் கி.பி. 19–ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இசையின் எல்லை (Pitch), மானிடவியல் தரவுகள், அருங்காட்சியகப் பொருள்கள் முதலானவற்றில் ஈடுபடலாயினர். அவர்கள் இவை தவிர்த்துச் சப்பானியரின் கலை இசை (Japanese Art Music), நியூகினியா (New Guinea) பழங்குடிகளின் இசை, ஆப்பிரிக்கக் காதல் சார்ந்த இசை ஆகிய இசைகளையும் ஆங்கிலேயரின் நாட்டுப் புறப் பாடல்கள், ஐரோப்பிய – அமெரிக்கப் பாடல்கள் ஆகியவற்றின் இசைகளையும் ஆராய்வதில் ஈடுபட்டனர். இனக்குழு இசையியல், வளர்ந்து வரும் மானிடவியல்சார்ந்த ஒரு பிரிவாகும். இத்துறையில் இக்காலத்தினர் பல்வேறு அணுகுமுறையில் ஒவ்வொரு சமூகக் குழுவின் இசை அறிவிளை ஆராய்வதன்வழி பல்வேறு கருத்துகளை வெளிக்காட்ட முற்படுகின்றனர். பழங்குடி மக்களிடையேயும் கிராமப்புற மக்களிடையேயும் இசை ஆழ்ந்த சமூகப் பிணைப்பினைக் கொண்டுள்ளது. சமயச் சடங்குகள், மந்திரம் சொல்லல், சமூக, குடும்ப விழாக்கள், இசையைக் கொண்டு மருத்துவம் புரிதல், ஆவிகள், இயல்பிறந்த சக்திகள் முதலானவற்றிலிருந்து விடுபட இசையைப் பயன்படுத்துதல், ஈமச் சடங்குகளின் போது கையாளப்படும் இசை, இயற்கைச் சீற்றத்தினைக் குறைக்க முயலும் இசை ஆகிய பல்வேறு துறைகளில் பயன்படும் இசையில் தன்மையை இனக் குழு இசையியலார் ஆராய்கின்றனர். பல்வேறு சமூகங்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளின் வகைகளையும் அவற்றைச் செய்யும் தொழில் நுட்ப முறைகளையும் கண்டறிவதனால் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளையும் ஆராயலாம்.