பேரண்டத்தில் பல்வேறு கோள்களும், துகள் பொருள்களும் மிகுவேக இயக்கத்தில் உள்ளன. இவ்வியக்கத்தில் தீர்வு காண முடியாத சில சிக்கல்கள் உள்ளன. இவற்றில் முப்பொருள் சிக்கலும் ஒன்றாகும். இது ஒன்றுக்கொன்று ஈர்ப்பு விசைகளால் மட்டுமே செயல்படும் மூன்று கோளகப் பொருள்களின் இயக்கத்தைப் பற்றியதாகும். பொருள்களின் இயக்கங்கள் நியூட்டனின் இயக்க விதிகளுக்கும், ஈர்ப்பு விதிகளுக்கும் உட்பட்டவை. இவ்விதிகளைப் பயன்படுத்தி, இரு பொருள் அமைப்புகளில் அவற்றின் இயக்கங்களை முழுதுமாக அறுதியிடலாம். ஆனால், முப்பொருள்களைக் கொண்ட அமைப்புகள் சிக்கலானவை. எளிதில் தீர்க்க முடியாதவை. சில குறிப்பிட்ட அமைப்புகளைத் தவிர, ஏனையவற்றை அறுதியிடல் கடினமாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கணக்கியல் வல்லுநர்களான லெனார்ட் ஆய்லர், கோசப் லெக்ரான்ஞ்சி ஆகியோர், இத்தகைய சிக்கல் மிகுந்த கடினமான கணக்கீடுகளுக்குத் தீர்வுகளை உருவாக்கினர். அவற்றில் ஒன்று, ஒரு சம பக்க முக்கோணத்தின் மூன்று முனைகளில், மூன்று பொருள்கள் இருக்கும் என்று கொள்ளப்பட்டது. இப்பொருள்கள் அண்டவெளியில் தற்சுழற்சியுடையவையாக இருக்கலாம். இவ்வமைப்பில், ஒரு பொருள் ஏனையவற்றை விட மிகுந்த பொருண்மையுடையதாக இருப்பின், இது நிலைத் தன்மையுடன் இருக்கும். சான்றாக, சூரியன், ஜூபிடர் கோளம், டிரோஜன் அஸ்டிராய்டு ஆகியவற்றைக் கொள்ளலாம். மற்றொரு வகை அமைப்பில், மூன்று பொருள்களும் ஒரே நேர் கோட்டில் அமைவதாகக் கொள்ளப்படும். ஆனால், இவ்வமைப்பு மிகுந்த நிலைத் தன்மையற்றது. மிகச் சிறிய இடையூறு கூட இவ்வமைப்பைக் கலைத்து மாற்றி விடக் கூடும். முப்பொருள் சிக்கல்கள் பெரும்பாலும் துணைக் கோள் இயக்கங்களைக் கணக்கிடுவதில்தான் தோன்றுகின்றன. இதில் ஒரு பொருள், ஏனைய இரண்டையும் விட, மிகு தொலைவில் இருக்கும். மற்றொரு வகை மூன்று கோள்களுக்கிடையே இயக்கங்களைக் கணக்கிடுவதில் தோன்றும் சிக்கலாகும். இதில் ஒன்றுக்கொன்று இடைப்பட்ட தொலைவுகள் சமமாக இருக்கும். ஆனால், ஒன்றின் நிறை, ஏனையவற்றை விடப் பன்மடங்கு மிகுதியாக இருக்கும். சில குறிப்பிட்ட வகைகளில், மூன்று பொருள்களில் ஒன்றின் நிறை ஏனையவற்றை விட மிகக் குறைவாக, பிற இயக்கங்களைப் பாதிக்காத அளவில் இருக்கும். இப்பொருள்கள் ஒன்றோடொன்று வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். எடுத்துக் காட்டாகப் புவி, சந்திரன், விண்வெளிக் கலம் ஆகியவற்றின் இயக்கங்களைக் குறிப்பிடலாம். —எஸ். சோமசுந்தரம் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்த பக்கத்தில் ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->