இறையிலிக் கொள்கை
iṟaiyilik koḷkai
சிலர் பொறிகள் வாயிலாக அறியப்படுவனவே உண்மை என்ற கொள்கையைக் கொண்டுள்ளனர்.
சிலர் பொறிகள் வாயிலாக அறியப்படுவனவே உண்மை என்ற கொள்கையைக் கொண்டுள்ளனர். கண்களுக்கு உடல் தெரிகிறது, உலகமும் தெரிகிறது. ஆகவே, இவை உண்மைப் பொருள்கள், உயிரையும் இறைவனையும் கண்ணால் காண முடியாது. ஆகையால் கடவுள், உயிர் என்பன இல்லை. குடத்தை வனைகின்ற ஒரு குயவன் இருப்பது போல் உலகத்தைப் படைக்க இறைவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று கருதல் அளவையால் (அநுமானத்தால்) இறைவன் உண்டு என்று கூறுகின்ற மதங்கள் உண்டு. ஆனால் கருதல் அளவையை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களுடைய கொள்கை உயிரற்ற உலகே மூலப்பொருள் என்ற அடிப்படையில் அமைந்ததாகையால் இவர்கள் உலகாயதர் எனப்படுவர். இவர்கள் சாருவாகர் எனவும் கூறப்படுவர்.
சமணர் சித்தாகிய உயிர் (சீவன்), சடமாகிய உயிரல்லாத பொருள் (அசீவன்) என்ற இரண்டும் அடங்கியது உலகம்; இவை இரண்டும் என்றும் உள்ள பொருள்கள் என்பர். இவற்றிற்கு அப்பால் மூன்றாவதாக இறைவன் உண்டு என்ற வேறு சில மதத்தினரின் கூற்றை இவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. வேறு சில மதத்தினர் கூறுவது போல, உயிர் அதனதன் வினைப்பயனை நுகர்கிறது என்று இவர்கள் ஏற்றுக் கொண்டாலும், வினைப்பயனை அனுபவிக்கச் செய்ய இறைவன் தேவை இல்லை என்று கூறுவர். இறைவன் அருள் இன்றியே உயிர் தன் முயற்சியாலேயே முத்தியைப் பெற இயலும் என்பர்.
இறைவன் உண்டு எனக் கூறுவோர் வேதம் முதலானவற்றை உரை அளவையாகக் (சத்தப்பிரமாணமாகக்) கொள்வர். பௌத்தர்கள் காண்டல், கருதல் என்ற இரண்டு அளவைகளையே ஏற்றுக் கொண்டனர். உரை அளவையை ஏற்றுக் கொள்ள வில்லை. ஆதலால் அவர்கள் நிரீசுரவாதிகள் எனப்பட்டனர். சமணரைப் போலவே பௌத்தரும் வினைப்பயன் தானே உயிரைச் சாரும்; இறைவன் தேவையில்லை எனக் கொண்டனர்.
சாங்கியர் உயிரில்லாப் பொருளாகிய உலகிற்குக் காரணமாக அறிவுடைய பொருளான இறைவன் இருக்க முடியாது என்றும், உலகைப் படைப்பதற்கு உயிர்களின் (புருடனின்) முன்னிலையே போதுமான காரணம், இறைவன் தேவையில்லை என்றும், தருக்க முறையில் இறைவன் இருக்கிறான் என்பதை நிலைநிறுத்த முடியாதென்றும் கூறுவர்.
பிற்காலத்து வந்த குமாரிலபட்டர் முதலான மீமாம்சகர்கள் கடவுட் கொள்கையை ஏற்றுக் கொண்ட போதிலும், மீமாம்சகர்களுள் முதன்மையானவரான சைமினி இறைவனைப் பற்றிக் குறிப்பிடவில்லை. பண்டை மீமாம்சகர் வேதத்தை மேலான அளவையாகக் கொண்டிருந்த போதிலும், வினைக்கே (கருமம்) முதலிடத்தைக் கொடுத்து இறைவன் தேவையில்லை என்று கருதினர். பெ.தி.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 545)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nzn2vwrq/
தமிழ்“இறையிலிக் கொள்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nzn2vwrq/APA
Oliyon Research. (2026). இறையிலிக் கொள்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nzn2vwrq/MLA
"இறையிலிக் கொள்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nzn2vwrq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment