பிட்யூட்டரி சுரப்பியால் உண்டாக்கப்படும் செனிப்பக ஹார்மோன்கள் சூலகங்களில் பெருமளவு மாற்றங்களைத் தோற்றுவிக்கும். இவை குமிழ்ப் பை முதிர்ச்சி, குமிழ்ப் பையின் நிலை, முதிர்ந்த குமிழ்ப் பையின் வெடிப்பு (முட்டை வெளியாகும் நிலை) கார்பஸ்லூட்டியம் உருவாகும் நிலை என மூன்றாகப் பிரிக்கப் படுகின்றன. குமிழ்ப் பை முதிர்ச்சி. புறத் தோல் (epithelial) செல்களின் அடுக்கால் போர்த்தப்பட்ட ஒரு முதிரா அண்டச் செல் முதிராக் குமிழ்ப் பையில் உள்ளது. இதன் வெளிப் புறம் இணைப்புத் திசுவால் சூழப் பட்டுள்ளது, குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலும், சூல் பையுள் இருக்கும் கருவின் வளர்ச்சியிலும், முதிராக் குமிழ்ப் பைகள் உருவாகின்றன. முதிராக் குமிழ்ப் பைகள், எண்ணிக்கையில் 400,000—500,000 வரை இருக்கும். குழந்தை. பருவ நிலை அடைந்தவுடன் 35,000—40,000 வரை குமிழ்கள் தொடர்ந்து வளர்கின்றன. ஏனையவை சிதைந்து விடுகின்றன. முதிராக் குமிழ்ப் பைகளில் 450—500 மட்டும் முதிர்ச்சியடையும். ஏனையவை, சூம்பி விடுகின்றன. முதிர்வதற்கு முன்பே, சிதைவுறும் சூலகக் குமிழ்ப் பைகளையே சூம்பி விடுபவை என்று ஸ்வாவ்யான்ஸ்கி என்பார் குறிப்பிட்டார். அண்டச் செல்லும் செதில் அடுக்கும் நசிந்து விட, குமிழ்ப் பையில் இணைப்புத் திசு தோன்றும். மாத விடாய் வட்டத்தின் முதல் அரைப் பகுதியிலேயே, 28 நாள் வட்டத்தில் 14 ஆம் நாளில் (அல்லது 21 நாள் வட்டத்தில் 10—11 நாள்களில்) குமிழ்ப் பை முதிர்ச்சியடைகிறது. இந்நிலையில், இதன் ஏனைய பகுதிகளான அண்டச் செல் செதில் அடுக்கு, இணைப்புத் திசு உறை ஆகியவை மிகுந்த மாற்றம் அடைகின்றன. அண்டச் செல் 5—6 மடங்கு அதிகரிக்கிறது. அதன் பரப்பில், பளிங்கு போன்ற உறை தோன்றுகிறது. அதன் புரோட்டோபிளாசத்தில் சிக்கலான மாற்றங்கள் நிகழ்கின்றன. குமிழ்ப் பை முதிர்ச்சியடைவதற்கு முன்பு. இரண்டு நிலையில் பகுப்புத் தோன்றுகிறது. முதல் பகுப்பில், இரண்டு சமமில்லாத செல்கள் உண்டாகின்றன. சிறிய செல் அகற்றப் படுகிறது. பெரிய செல் மீண்டும் பகுப்படைகிறது. அப்போது, பாதி குரோமோசோம்கள் ஒதுக்கப்படுகின்றன. இரண்டாம் பகுப்பிற்குப் பிறகு, முட்டை முதிர்ச்சியடைந்து, பொலிவடைய ஆயத்தமாக உள்ளது. முதிர்ச்சி அடையும் போது, குமிழ்ப் பை புறத் தோல் அடுக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. செதில் உறையாக மாறுகிறது. முதலில் அண்டச் செல்லுக்கும், இணைப்புத் திசு உறைக்கும் இடையிலுள்ள வெற்றிடத்தைச் செதில் அடுக்குச் செல்கள் நிரப்புகின்றன. ஆனால், பின்னர் செல் திரட்சியில் ஒருங்கிணைந்து, பெரிய குழிவாக மாறுகின்றன. பெரிய குழிவில் உள்ள குமிழ்ப் பையில், ஒளி ஊடுருவும் நீர்மம் நிறைந்து காணப்படும். பெரிய குழிவினுள் நீர்மம் தேக்கமடையும் போது, செதில் செல்கள், முட்டையின் பக்கமாகவும், குமிழ் பைச் சுவரின் பக்கமாகவும் நகர்கின்றன. ஆர வளைவுள்ள மகுடத்தால் சூழப்பட்ட அண்டச் செதில் அடுக்குச் செல்களின் முகட்டின் ஓர் ஓரத்தில் அமைந்துள்ளது. குமிழ்ப் பை முதிர்ச்சியடைந்தவுடன், முகட்டிலிருந்து ஒரு முதிர்ந்த முட்டை வெளிப்பட்டு, குமிழ்ப் பை நீர்மத்துள் கிடக்கிறது. பெண் உடலில் சிக்கலான வினைகளை உண்டாக்கும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், குமிழ்ப் பையால் சுரக்கப்படுகிறது. பருவமடைந்தவுடன் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன், சூல் பை, யோனி, வெளிப் பிறப்புறுப்புகள் இரண்டாம் நிலைப் பாலினப் பண்புகள் ஆகியவற்றின் வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் ஊக்குவிக்கிறது. வயது வந்த நிலையில், முதிர்ச்சியடையும் குமிழ்ப் பைகளால் சுரக்கப்படும் ஈஸ்ட்ரோஜென்கள், கருவகத் தசைச் செல்கள் பெருக்கமடைவதைத் தூண்டுகின்றன. கருப்பையின் விறைப்புத் தன்மையையும், அதன் சுருக்கங்களைத் தூண்டும் பொருள்களின் கிளர்த்தலையும்,கூருணர்ச்சியையும் ஈஸ்ட்ரோஜென்கள் அதிகரிக்கின்றன. மார்பகச் சுரப்பிகளின் பணிகளையும், வளர்ச்சியையும் ஈஸ்ட்ரோஜென்கள் ஊக்குவிப்பதோடல்லாமல், பாலுணர்ச்சியையும் செறிவடையச் செய்கின்றன. குமிழ்ப் பை முதிரும் போது, அதன் இணைப்புத் திசுப் படலம் இரண்டு உறைகளாக மாறுகிறது. அவை உள்ளுறை, வெளிப் புற நார்ப் பொருள் ஆகியவையாகும். முட்டை வெளிப்படல். கிராஃப் நுண் குமிழ் உடைபட்டு, முதிர்ந்த பொலிவுறாத முட்டை வெளிப்படுகிறது. ஆர வளைவு கொண்ட மகுடத்தில் சூழப்பட்ட முட்டை, குமிழ் நீர்மத்துடன் உதரவுறைக் குழிவினுட் சென்று கருவகக் குழலினுள் நுழைகிறது. 28 நாள் வட்டத்தில் 14—15ஆம் நாளில் முட்டை வெளிப் படுகிறது. மாத விடாய் தொடங்கிய முதல் நாளிலிருந்து கணக்கெடுக்க வேண்டும். (21 நாள் மாத விடாய் வட்டத்தில் விரைவிலேயே நிகழ்கிறது). பொலிவடைய இதுவே, மிகவும் பொருத்தமான காலமாகும். —அ. கதிரேசன்