கி.பி. 842–க்கும் 877–க்கும் இடையில் இலங்கையில் அரசராயிருந்தவர் இரண்டாம் சேனர் ஆவார். பாண்டியர்களைப் பழிக்குப்பழி வாங்க முயன்ற இவருடைய வரலாற்றைச் சூளவம்சம் விவரிக்கிறது. இரத்தினவசதா என்னுமிடத்தில் வைக்கப் பெற்றிருந்த புத்தர் பெருமானின் தங்க உருவச் சிலையை உடைத்த பாண்டியர்களைப் பழிவாங்க எண்ணிப் பாண்டிய நாட்டின்மீது படையெடுக்க முடிவு செய்த வேளையில், பாண்டிய அரச குடும்பத்தைச் சார்ந்த உறுப்பினர் ஒருவர் இலங்கைக்கு ஓடிச் சென்று, இரண்டாம் சேனரிடத்தில் தஞ்சம் புகுந்தார். இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு இரண்டாம் சேனர் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தார். வெற்றிபெற வேண்டிப் பல்லவ மன்னர் நிருபதுங்கனுடனும் இவர் உடன்படிக்கை செய்து கொண்டார். இவ்விருவரின் கூட்டுப் படைகள் பாண்டிய நாட்டை வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் தாக்கின. பாண்டிய அரசர் வடபால் படையெடுத்துப் பகைவர்களைச் சந்தித்து அரிசித்து (Arichit) என்னுமிடத்தில் நடந்த போரில் தோல்வி அடைந்தார்.