உக்ரேனியா
ukrēṉiyā
உக்ரேனியன் சோவியத்துச் சமநிலைக் குடியரசு அல்லது உக்ரேன் (Ukraine) என்பது சோவியத்து உருசிய நாட்டில் உள்ள தன்னாட்சிக் (சமநிலை) குடியரசுகளுள் (Autonomous Republics) ஒன்று.
உக்ரேனியன் சோவியத்துச் சமநிலைக் குடியரசு அல்லது உக்ரேன் (Ukraine) என்பது சோவியத்து உருசிய நாட்டில் உள்ள தன்னாட்சிக் (சமநிலை) குடியரசுகளுள் (Autonomous Republics) ஒன்று. இது 603,700 ச.கி.மீ. பரப்பளவு உடையது. இதன் வடக்கில் பைலோ உருசியாவும், கிழக்கில் உருசியச் சோவியத்துக் கூட்டாட்சிச் சமநிலைக் குடியரசும்; தெற்கில் ஆசாவ் கடலும் கருங்கடலும், மேற்கில் மால்டேவிய சமநிலைக் குடியரசு, உருமேனியா, அங்கேரி, போலந்து, செக்கோசுலோவேக்கியா முதலிய நாடுகளும் இருக்கின்றன.
உருசிய உறுப்பு நாடுகளுள் இதுவே பெரியது. இது 1924–இல் சோவியத்து இணையத்தில் ஓர் இணையக் குடியரசு நாடாக (Union Republic) ஆயிற்று.
உக்ரேனியா
உருசிய நாட்டின் மொத்த வேளாண்மை, தொழில் உற்பத்தியில் 2.7 விழுக்காடு உக்ரேனிலிருந்தே வருகிறது. இந்நாட்டின் நில அமைப்புப் பெருமளவு சமதரையாக இருப்பதாலும், நீர்வளமும் புல்தரையும் மிகுதியாகப் பொருந்தியிருப்பதாலும் இது வேளாண்மைக்கு மிகுதியும் ஏற்றது. உணவுத் தானியங்கள், உருளைக்கிழங்கு, காய்கறிகள், பழங்கள் ஆகியவை மிகுதியாக இங்கே பயிரிடப்படுகின்றன. ஆடு மாடு வளர்ப்பும் மீன்பிடித்தலும் இங்கு முதன்மையான தொழில்கள்.
இங்குக் கூட்டுப் பண்ணைகளும் (Collective Farms) அரசாங்கப் பண்ணைகளும் (State Farms) அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மையில் இயந்திரங்கள் கையாளப்படுகின்றன. மாங்கனிசு, பாக்சைட்டு, பாதரசம், மண்ணெண்ணெய், இரும்பு முதலிய பொருள்கள் இங்குக் கிடைக்கின்றன. பெருமளவில் நீர்மின்சார உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய போக்குவரவு வசதிகளும் ஆற்றுவழிக் கப்பல் போக்குவரவு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு வாழும் மக்கள் கிழக்குச் சிலாவிய இனத்தைச் (East Slavic Group) சேர்ந்தவர்கள்.
வரலாறு
உக்ரேன் எனப்படும் நிலப்பகுதியில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் உருசு (Rus) என்னும் ஓர் அரசாங்க அமைப்பு, வரங்கியின் வழிவந்த (Varangian Origin) ஒரு பிரபுவின் தலைமையில் இருந்தது. இப்போதைய உக்ரேனிய நகரங்களாகிய கீவ் (Kiev), செர்னிகாவு (Chernijgov) முதலியவை இந்த அமைப்பிலிருந்தன. கி.பி. 10–ஆம் நூற்றாண்டில் பைசாண்டிய நகரத்திலிருந்து வந்த கிறித்தவ நெறியை இதன் அரசர் ஏற்றார். ஆனால், பதின்மூன்றாம் நூற்றாண்டில் இவர் பேரரசு தார்த்தாரியர் எனப்படும் நாகரிகமற்ற கூட்டத்தாருடைய படையெடுப்பால் அழிவுக்குள்ளாயிற்று.
கீவ் அரசு வீழுதற்கு முன்பே தெற்கு உகிரேனில் நீசுட்டர் (Dneister) ஆற்றுவெளியில் விளாடிமிர், ஆலிக்கு (Holych) என்ற இரு நகரங்களை மையங்களாகக் கொண்டு இரு சிறிய அரசுகள் தோன்றின. இவற்றை ஒல்கினியாவின் (Volhynia) அரசர் உரோமன் (Roman) கி.பி. 1199–இல் ஒன்றாக இணைத்து, ஒரு புதிய அரசக் குடும்பத்தின் ஆட்சியைத் தொடங்கினார். இவ்வரச குடும்பத்தினரட்சியும் கி.பி. 1383–இல் மறைந்தது. பின்னர்ப் பியசுட்டுக் (Piast) குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அரசரை (Polish) அரசுரிமை வந்தடைந்தது. அவ்வழிவந்த புகழ்மிக்க காசிமிர் (Casimir) என்பாருடைய ஆட்சியில் நாடு விரிவடைந்தது.
போலந்தின் ஆட்சியில் உக்ரேன் வந்தபோது, அதில் இருந்த சுதந்திரக் குடியானவர்கள் உள்ளூரிலிருந்த பெரிய பிரபுக்களுக்கு வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். ஆயினும் ஒரு சில குடியானவர்கள் தங்களுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ளுதற்காக வளமான தென்கிழக்குப் பகுதிக்குத் தப்பிச் சென்று நீப்பர் ஆற்றுவெளியில் (Dnieper River) குடியேறினர். இவர்களே காசக்குகள் (Cossacks) என்று சொல்லப்பட்டனர். நாளடைவில் இவர்களுடைய எண்ணிக்கை பெருகிற்று. இவர்கள் சிறந்த குதிரை வீரர்களாயினர். ஆனால் போலிசு (polish) நிலப்பிரபுக்கள், தப்பிச் சென்ற காசக்குகள் கலகக்காரர்கள் என்றெண்ணினர். அவர்களை நிலப் பிரபுக்கள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல, இருசாராருக்குமிடையே பிளவு தோன்றிற்று. தென் உக்ரேன் பகுதியிலுள்ள சுதந்திரக் காசக்குகளை அடக்குவதற்குப் போலந்து குடக்குக் கோட்டை (Kudak) அமைக்க முற்பட்டபோது (கி.பி. 1635–38) சுதந்திரக் காசக்குகள் கலகங்கள் செய்தனர்; மேலும், சார் அரசர் அலக்சியாவின் பாதுகாப்பை வேண்டினர்.
கீவ் நாட்டை மீட்டுக்கொள்ள வாய்ப்பை எதிர்பார்த்திருந்த மாசுகோவின் உரோமனாவ் அரசர் இவ்வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு போலந்தின்மீது போர் தொடுத்தார். அண்ட்ரூசோவோ உடன்படிக்கையின்படி உக்ரேன் நாடு நீப்பர் ஆற்றின் வழியாகப் பிரிக்கப்பட்டு உருசியாவுக்கும் போலந்துக்குமிடையே பங்கிடப்பட்டது. இந்நிலையில் தோரோ என்ற புதிய காசக்குத் தலைவர் உக்ரேனை ஓட்டோமான் துருக்கியப் பேரரசுக்குட்பட்ட அரசாக ஆக்க விரும்பினார். நான்காம் சுல்தான் முகமது என்னும் ஓட்டோமான் பேரரசர் கி.பி. 1668–இல் உக்ரேனைத் தமது பாதுகாப்பில் கொண்டுவரும் பொருட்டுப் போலந்தினுள் படையெடுத்துச் சென்று, போலந்தின் பகுதியிலுள்ள உக்ரேனை ஓட்டோமானின் ஆட்சியினுள் வைத்தல் வேண்டுமென்று ஓர் ஒப்பந்தத்தைச் செய்தார். இவ்வொப்பந்தத்தைப் போலிசு பாராளுமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை. போலிசு அரசர் மூன்றாம் சான் சோபியசுகி போலிசு உக்ரேனிலிருந்து துருக்கியர்களை அகற்றிவிட்டார்.
உருசியப் பகுதியிலிருந்த உக்ரேனில் காசக்குகளின் தலைவரான ஐவன் மசேபா உருசிய சார் மன்னர் முதலாம் பீட்டருக்கு உதவிசெய்தாலும், இரண்டு உக்ரேன் பகுதிகளையும் ஒன்றாக இணைத்துத் தாமே அரசராதல் வேண்டுமென்ற நோக்கத்துடன் சுவீடன் அரசர் பன்னிரண்டாம் சார்லசுடன் ஓர் ஒப்பந்தம் செய்தார். ஆனால் பீட்டர் ஒரு போரில் சார்லசைத் தோற்கடித்துவிடவே மசேபாவின் எண்ணம் கைகூடவில்லை. உருசியப் பகுதியிலிருந்த உக்ரேன் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. உருசியாவும் பிரசியாவும் இரண்டாம் முறையாகப் போலந்தை கி.பி. 1795–இல் பங்குபோட்டுக் கொண்ட போது, போலிசுப் பகுதியிலுள்ள உக்ரேனும் உருசியாவுக்கு வந்துவிடவே, உருசியாவின் ஒரு பாகமாக உக்ரேன் இணைக்கப்பட்டது.
உக்ரேனின் 30 தொண்டர்கள் கீவ் நகரத்தில் கி.பி. 1846–இல் கூடி ஒரு கழகத்தை அமைத்துச் சுதந்திரம் பெற முயன்றனர். முன்பு ஆசுத்திரியாவுடன் சேர்க்கப்பட்ட உக்ரேன் பகுதியிலுள்ள, உலுவாவ் (Lvov) நகரம் உக்ரேன் தேசியவாதிகளின் செயல்களுக்கு மையமாக இருந்தது. ஒரு சுதந்திர நாட்டினராகத் தாங்கள் அமையும் பொருட்டு, ஒரு தேசிய உக்ரேன் மன்றத்தைத் தேர்ந்தெடுத்தனர். இது 1917–இல் கூடி ஒரு குழுவை அமைத்தது. இக்குழு உருசேவுசுகி (Hrushevsky) என்பவரைத் தலைவராகக் கொண்ட தன்னாட்சியுடைய உக்ரேனியக் குடியரசை அறிவித்தது. இதற்கிடையில் உருசியாவில் புரட்சி நடந்து பொதுவுடைமை அரசாங்கம் அமைக்கப்பட்டது. அது 1917 திசம்பரில் உக்ரேன் சோவியத்து அரசாங்கத்தைக் கார்காவில் (Kharkov) நிறுவிற்று. உக்ரேனிய அரசாங்கம் தன்னைச் சுதந்திர, இறைமையுடைய உக்ரேன் குடியரசு என்று அறிவித்துக்கொண்டது. போரின்போது உக்ரேன் இரண்டாகப் பிரிந்திருந்தாலும். போர்முடிந்ததும் பொதுவுடைமைப் படை கீவையும் மற்ற உக்ரேனிய நகரங்களையும் கைப்பற்றி அதை மீண்டும் (1920) இணைத்தது.
உருசியச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு, பைலோருசியச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு, உக்ரேனியச் சோவியத்துச் சமநிலைக் குடியரசு, திரான்சுகாகேசிய சோவியத்துச் சமநிலைக் குடியரசு ஆகிய நான்கு குடியரசுகளை ஒரு கூட்டாட்சி நாடாக இணைத்து, 1923–இல் ஓர் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. புதிய பொருளாதாரக் கொள்கை அமைக்கப்பட்டது. உக்ரேன் மொழிக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது. இசுடாலினின் ஆட்சியில் பல உக்ரேன் தலைவர்கள் துரோகக் குற்றச்சாட்டுக்குள்ளாகிக் கொலையுண்டனர். இரண்டாம் உலகப் போரின்போது, போலந்தில் ஓர் உக்ரேனிய இரகசிய இராணுவ அமைப்புச் செருமனியின் உதவியுடன் உக்ரேனின் சுதந்திரத்தை மீண்டும் பெற முயன்றது. ஆனால், போரின் முடிவில் உருமேனியாவிடமிருந்தும் செக்கோசுலேவேகியாவிடமிருந்தும் போலந்திடமிருந்தும் புதிய நிலப் பகுதிகள் உக்ரேனோடு சேர்க்கப்பட்டு, அது முன்னைவிட அளவில் இருமடங்கு பெரிதாகி, உருசியக் கூட்டாட்சியின் ஓர் உறுப்பு நாடாக அமைந்துள்ளது.
உக்ரேனின் அரசியலமைப்பு
உக்ரேனின் அரசியலமைப்பு 1937–ஆம் ஆண்டின் அரசியலமைப்பையும் 1944–இல் அதற்குச் செய்யப்பட்ட திருத்தங்களையும் ஒட்டி அமைந்தது. இவ்வரசியலமைப்பு அயல் நாடுகளோடு நேரடியாக உறவுகளை வைத்துக்கொள்ளுதற்கு உக்ரேனுக்கு அதிகாரம் அளிக்கிறது. இது மற்ற நாடுகளோடு உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளவும் தூதியலதிகாரிகளை அமர்த்திக்கொள்ளவும் தனக்குப் படைகளை அமைத்துக்கொள்ளவும் இயலும். உக்ரேனும் பைலோருசியாவும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராகவும், 70 பன்னாட்டு நிறுவனங்களில் உறுப்பினராகவும் இருக்கின்றன. ஆனால், இவை தன்னாட்சியுடைய இறைமையுடைய (Sovereign) நாடுகளல்ல. மேலும், இவற்றால் சோவியத்து நடுவண் அரசாங்கத்தின் கொள்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்த இயலாது.
அரசாங்கம்: சட்டமன்றம்
உக்ரேன் இணையக் குடியரசுக்கு ஓர் ஒற்றை மன்றச் சட்டமன்றம் (Unicameral Legislature) இருக்கிறது. இதற்குத் தலைமைச் சோவியத்து (Supreme Soviet) என்று பெயர். இதன் உறுப்பினர்கள் ஒரே பட்டியலில் அடங்கியுள்ள வேட்பாளர்களிடையே இருந்து 4 ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இது ஆண்டிற்கு இருமுறை கூடி மாசுகோவில் நடுவண் அரசாங்கம் நிறைவேற்றும் வரவு செலவுத் திட்டத்துக்கும் மற்றச் சட்டங்களுக்கும் ஒப்புதலளிக்கிறது. நடுவண் அரசாங்கத்திலிருப்பதுபோல் இங்கும் தலைமை சோவியத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட (19) உறுப்பினர்களையுடைய தலைமைக்குழு (Presidium) என்ற ஒரு சிறு மன்றம் இருக்கிறது. இது சட்டமன்றம் கூடாத காலங்களில் சட்டமன்றத்தின் பணிகளையும் நிருவாகப் பணிகளையும் செய்கிறது.
நிருவாகக் குழு
இவ்வுறுப்புக் குடியரசின் உயர்தர நிருவாகக் குழு அரசை நிருவகிக்கும் அமைச்சர் குழு ஆகும். இதன் தலைவர் தலைமை அமைச்சரை ஒத்திருக்கிறார். தலைமை சோவியத்துச் சட்டமன்றம் நிறைவேற்றும் சட்டங்களெல்லாம் அமைச்சரவையினாலேயே கொண்டுவரப்படுகின்றன. மேலும், நடுவண் அரசாங்கத்தில் எடுக்கப்படும் கொள்கைத் தீர்மானங்களை நிறைவேற்றும் பொறுப்பு அமைச்சர் குழுவைச் சேர்ந்தது.
நீதிமன்றம்
உக்ரேனின் உயர் நீதிமன்றம் தலைமை நீதிமன்றம் (Supreme Court) என்று சொல்லப்படுகிறது. இதன் 5 நீதிபதிகளும் 5 ஆண்டுகளுக்குத் தலைமைச் சோவியத்தினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இது கீழ் நீதிமன்றங்களின் செயல்களை மேற்பார்வை செய்கிறது. அரசியலமைப்புப் பற்றிய கேள்விகளைத் தீர்ப்பதற்குத் தலைமைக் குழுவிற்குத்தான் அதிகாரமுண்டேதவிர, தலைமை நீதிமன்றத்துக்கு அவ்வதிகாரம் இல்லை. உள்ளூர் நிலையில் மக்கள் நீதிமன்றங்களால் (People Courts) நீதி வழங்கப்படுகிறது.
அரசியல் கட்சி
உருசியச் சோவியத்து இணையத்தின் பொதுவுடைமைக் கட்சியின் ஒரு கிளையாக 1918–இல் நிறுவப்பட்ட உக்ரேன் பொதுவுடைமைக் கட்சி மட்டுமே இங்குச் செயற்படுகிற அரசியற் கட்சி. தலைமைச் சோவியத்தினால் ஒப்புக்கொள்ளப்படுகிற சட்டங்களுள் பெரும்பாலானவை இக்கட்சியினிடமிகுந்தே தோன்றுகின்றன அல்லது இதனுடைய ஒப்புதலைப் பெறுகின்றன.
துணை நூல்
Vernadsky George, Russia at the Modern Age, 1959.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 709)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nta4qje2/
தமிழ்“உக்ரேனியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nta4qje2/APA
Oliyon Research. (2026). உக்ரேனியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nta4qje2/MLA
"உக்ரேனியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/nta4qje2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment