ஒரு நாடு தன் மக்கள் தொகையில் குழந்தைகள், குமரப் பருவத்தினர் (Adolescents), இளைஞர்கள் (Young adults) ஆகியோரை மிகுதியாகக் கொண்டிருப்பின். அந்நாட்டை இளைய மக்கள் தொகையைக் கொண்ட நாடு எனலாம். இம்மக்கள்தொகை குறைவான இடைநிலை வயதைக் (Median age) கொண்டு வளரக்கூடிய ஆற்றல் மிக்கதாயிருக்கும். மக்கள் தொகையில் குழந்தைகளின் விகிதம் குறைவாகவும் முதியோர் விகிதம் மிகுதியாகவும் இருப்பின் இம்மக்கள்தொகை முதிய மக்கள் தொகை எனப்படுகிறது. இந்தியா, எகிப்து, சீனா முதலான வரலாற்றுத் தொன்மையுடைய நாடுகள் இளைய மக்களை மிகுதியாகப் பெற்றுத் திகழ்கின்றன. இங்கிலாந்து, பிரான்சு, இசுவீடன் (Sweden), அமெரிக்கா போன்றவை முதிய மக்களை மிகுதியாகக் கொண்டுள்ளன.