நீதிமன்றத்தால் குற்றம் செய்தவனாக முடிவு செய்யப்படும் இளவயதினன் (Young Person) இளங் குற்றவாளியாகிறான் (Juvenile Offender), பெரும்பான்மையான இளம் வயதினர் குற்றவாளிகளாக மாறுவதற்கு அவர்களே காரணமாயிருக்க மாட்டார்கள். பெற்றோர் அல்லது காப்பாளர் இல்லாத நிலையினாலும் அவர்களே கைவிட்டதினாலும், அவர்கள் தீய ஒழுக்கத்தில் ஊறியிருப்பதாலும், தீயவர்களுடைய நட்பு ஏற்படுவதனாலும் இளம் வயதினன் குற்றவாளியாக மாறும் நிலை ஏற்படுகிறது. முற்காலத்தில் இளங் குற்றவாளிகள் வயது வந்த குற்றவாளிகளுக்குச் சமமாகப் பாவிக்கப்பட்டு வந்தார்கள். எடுத்துக்காட்டாக, இளம் வயதினன் ஒருவனும், வயது வந்த ஒருவனும் கூட்டாக ஒரு குற்றத்தைச் செய்தால் அவ்விருவரும் ஒன்றாக விசாரணை செய்யப்பட்டு ஒரே தன்மையான தண்டனைக்குட்படுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் குற்றவியல் சம்பந்தமாகப் புதிய கருத்துகள் தோன்றத் தொடங்கின. குற்றம் நிகழாமல் தடுக்கக் தண்டனை விதித்தால் மட்டும் போதாது; குற்றவாளியையும் சீர் திருத்திச் சமூகத்தில் பயனுள்ளவனாக வாழச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் காலப்போக்கில் தோன்றிப் பரவத் தொடங்கியது. அதையொட்டி வயது வந்த குற்றவாளிகளைப் பொறுத்துப் பல சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்டன. இளங் குற்றவாளிகளைப் பொறுத்த மட்டிலும் இவர்களை வயது வந்த குற்றவாளிகளிடமிருந்து பிரித்துக் குற்றப்பாதையிலிருந்து மாற்றும் முயற்சி தொடங்கப்பட்டது. முக்கியமாக இலர்களுக்குத் தண்டனை விதிக்காமல் சீர்திருத்தப்பள்ளிகளில் தங்க வைப்பதற்கு வகை செய்யப்பட்டது. அப்பள்ளிகளில் கல்வி தொழிற்கல்வி போன்றவை போதிக்கப்படுகின்றன. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள நியூயார்க்கு நகரத்தில் முதன் முதலாக கி.பி. 1824–ஆம் ஆண்டில் இளங் குற்றவாளிகள் சீர்திருத்தப் பள்ளி நிறுவப்பட்டது. அங்குள்ள பாசுட்டனில் (Boston) கி.பி. 1870–ஆம் ஆண்டில் இளங் குற்றவாளிகளைத் தனியாக விசாரணை நடத்த நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேலும், அந்நகரத்தில் 1938 இல் இளவயதினர் நீதிமன்றச் சட்டம் (Juvenile Courts Act) இயற்றப்பட்டது. அதாவது குற்றம் சாட்டப்பட்ட இளவயதினரை விசாரணை செய்வதற்கென்று தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்த வகை செய்யப்பட்டது. இந்தியாவில் சில மாநிலங்களில் இளங்குற்றவாளிகளைப் பொறுத்த மட்டிலும் தனித்தனியாகக் சட்டங்கள் இயற்றப்பட்டன. தமிழ் நாட்டில் 1920–ஆம் ஆண்டில் குழந்தைகள் சட்டம் (Tamil Nadu Childran Act 1920) இயற்றப்பட்டது. அது 1958–ஆம் ஆண்டில் திருத்தப்பட்டது. வங்காளத்தில் 1922–இலும், பம்பாயில் 1924–இலும் மத்திய மாநிலங்களில் 1928–இலும், ஆந்திராவில் 1951–இலும், அசாமில் 1969–இலும், பீகாரில் 1970–இலும் குழந்தைகள் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியக் குடியரசானது 1960–ஆம் ஆண்டில் குழந்தைகள் சட்டத்தை (The Children Act 1960) இயற்றியது. இச்சட்டம் இந்திய யூனியன் பிரதேசங்களுக்கு மட்டும் செல்லத் தக்கது இளம் குற்றவாளிகளைத் திருத்த வேண்டும் என்ற அடிப்படையான கருத்து மேற்கூறிய எல்லாச் சட்டங்களிலும் உள்ளது. இளம் வயதினரைத் தனியாக விசாரணை செய்து தண்டனைக்குட்படுத்தாமல் சீர்திருத்தப் பணி செய்யும் அமைப்புகளுக்கு இவர்களை அனுப்ப வேண்டும் என்ற கருத்து அச்சட்டங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு குழந்தைகள் சட்டம் மட்டும் செல்லத்தக்கது (இனி வரும் இக்கட்டுரையில் இச்சட்டம் மட்டில் விளக்கப்படும்). 14 வயதுக்குக் கீழ் உள்ளவன் குழந்தை என்றும், 14 வயதுக்கு மேற்பட்டும் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டும் உள்ளவன் இளம் வயதினன் (Young Person) என்றும், 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவன் சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்தவனாக நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படும்போது அவன் இளம் குற்றவாளியாகிறான் (Youthful Offender) என்றும் இச்சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது. இளம் குற்றவாளியின் குறைந்த வயது என்னவென்று இச்சட்டத்தில் சொல்லப்படவில்லை. 7 வயதுக்கு மேற்படாத குழந்தையைத் தான் செய்யும் செய்கையின் விளைவுகளை அறிய முடியாத காரணத்தால் குற்றம் செய்தவனாகக் கருதமுடியாது என்று இந்தியத் தண்டனைச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. எனவே, 7 வயதுக்கு மேற்பட்டவனும் 18 வயதுக்குக் கீழ்ப்பட்டவனுமான இளம் வயதினன் நீதி மன்றத்தால் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்படும்போது தமிழ்நாடு குழந்தைகள் சட்டப்படி அவன் இளம் குற்றவாளியாகிறான். 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட நிலையில் குற்றம் செய்திருந்தாலும் குற்றவாளி என முடிவு செய்யும் நேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டிருந்தால் அவனை இளம் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்க முடியாது. தண்டம் மட்டும் விதிக்கக்கூடிய குற்றத்தைச் செய்திருந்தாலும் அவனை இளம் குற்றவாளி எனக் கூறமுடியாது. குற்றம் சாட்டப்படும் இளம் வயதினரை விசாரணை செய்யத் தனிப்பட்ட நீதிமன்றம் ஏற்படுத்த இச்சட்டத்தின் 36–ஆம் பிரிவில் வகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான தனிப்பட்ட நீதிமன்றம் கொலையுட்பட எல்லா வகையான குற்றங்கள் தொடர்பாகவும் விசாரணை செய்யலாம். அவ்வாறு தனிப்பட்ட நீதிமன்றம் அமைக்கப்படாவிட்டால் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ஏனைய நீதிமன்றங்களில் விசாரணை செய்யலாம். எந்த நீதிமன்றமாயிருந்தாலும் இளம் வயதினனை விசாரணை செய்யும்போது நீதி விசாரணை நடப்பது போல் அல்லாமல் ஏறத்தாழ ஒரு குடும்ப விசாரணை நடப்பது போன்ற சூழ்நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். மேலும், வயது அடைந்த எதிரியுடன் சேர்த்து இளம் வயதினனை விசாரணை செய்யக் கூடாது. அவ்விருவரும் சேர்ந்து ஒரு குற்றத்தைச் செய்ததாக இருந்தாலும் இருவரையும் தனித்தனியாக விசாரணை செய்ய வேண்டும். இளம் குற்றவாளியைக் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து நடத்த வேண்டும். மன்னித்து விடுதலை செய்யலாம்; பெற்றோர் அல்லது காப்பாளர் அல்லது அவர்களின் உறவினர் பிணைப்பத்திரம் எழுதிக் கொடுத்து இளம் குற்றவாளியின் நன்னடத்தைக்குப் பொறுப்பேற்றால், அவர்கள் பாதுகாப்பில் இளம் குற்றவாளி குறிப்பிட்ட காலத்துக்கு ஒப்படைக்கப்படலாம். இளம் குற்றவாளியைப் பாதுகாக்க எவரேனும் முன்வந்தால் அவர் பாதுகாப்பிலும் ஒப்படைக்கலாம். அவ்வாறு மற்றவர் பாதுகாப்பில் ஒப்படைக்கும்போது, இளம் குற்றவாளியை நன்னடத்தை அலுவலர் கண்காணிப்பிலும் வைக்கலாம். ஒறுப்புக் கட்டணம் குற்றத்திற்கு விதிக்கப்பட்டதாயின் இளம் குற்றவாளியின் சார்பில் அவன் பெற்றோர் அல்லது காப்பாளர் அதனைக் கட்ட வேண்டும் என்று ஆணையிடலாம். இளம் குற்றவாளியைப் பாதுகாப்- பதில் தாங்கள் எவ்விதத்திலும் தவறு இழைக்கவில்லை என்று மெய்ப்பித்தால் அவர்கள் அந்த ஒறுப்புக் கட்டணத்தைக் கட்ட வேண்டியதில்லை. சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாயிருந்தால் 12–உம் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய இளம் குற்றவாளியை முதுநிலைச் சீர்திருத்தப் பள்ளிக்கு (Senior Approved School) அனுப்பலாம்; 12 வயதுக்குக் கீழ்ப்பட்ட இளம் குற்றவாளியை இளநிலைச் சீர்திருத்தப்பள்ளிக்கு (Junior Approved School) அனுப்பலாம். அப்பள்ளிகள் அரசால் நடத்தப்படுகின்றன. அங்குக் கல்வி, தொழிற்கல்வி, நல்லொழுக்கம் ஆகியவை போதிக்கப்படும். 18 வயது வாராத இளம் குற்றவாளிக்கு எக்கட்டத்திலும் மரண தண்டனை விதிக்கக் கூடாது. 14 வயதுக்குக் குறைந்த இளம் குற்றவாளிக்கு எக்கட்டத்திலும் சிறைத்தண்டனை விதிக்கக் கூடாது. ஆனால், 14 – வயதுக்குமேற்பட்டு 18 வயது அடையாத இளம் குற்றவாளி மிக மோசமான நடத்தையுள்ளவனாக இருந்தால். சிறைத்தண்டனை விதிக்கலாம். குற்றம் மிகக் கடுமையானதாக இருந்து சட்டத்தின் படி விதிக்கக்கூடிய தண்டனை போதுமானது அன்று என்று முடிவு செய்தால். அவ்வாறான இளம் குற்றவாளி குறித்து நீதிமன்றம் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பலாம். அந்த இளம் குற்றவாளி புரிந்த குற்றத்துக்குச் சட்டப்படி விதிக்கக்கூடிய சிறைத்தண்டனை காலத்துக்கு நீடிக்காமல் இளம் குற்றவாளியை உசிதம்போல் தக்க பாதுகாப்பில் வைக்க மாநில அரசு உத்தரவிடலாம். குற்றம் ஏதும் புரியாத நிலையிலும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களைக் கீழ்க்காணும் காரணங்களுக்காக இளநிலைச் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்ப இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. நிலையான குடியிருப்பு இல்லாமல் ஊர் சுற்றித் திரிதல், பெற்றோரோ காப்பாளரோ இல்லாமல் திக்கற்ற நிலையில் இருத்தல் பெற்றோர் அல்லது காப்பாளர் இருந்தும் சிறுவனைப் பாதுகாப்பதில் போதுமான கவனம் செலுத்தாதிருத்தல், பெற்றோர் சிறையிலிருப்பதால் சிறுவன் திக்கற்றவனாக இருத்தல். பெற்றோர் அல்லது காப்பாளர் தீய ஒழுக்கம் காரணமாகச் சிறுவனைக் தங்கள் வசம் வைத்திருக்கத் தகுதியில்லாதிருத்தல், பொது இடங்களில் சிறுவன் பிச்சை எடுத்தல், எல்லோருக்கும் திருடன் எனத் தெரிந்தவனுடன் சிறுவன் நட்புக் கொண்டிருத்தல். ஒழுக்கம் கெட்ட காரியங்களுக்காகப் பயன்படுத்தப்படும் வீட்டில் சிறுவன் வசித்தல், விபசாரத்துக்காகப் பயன்படுத்தக்கூடிய சூழ் நிலையில் உறுவன் இருத்தல் ஆகியவையாகும். கட்டுக்கடங்காத குழந்தை அல்லது இளம் வயதினனைப் பெற்றோர் அல்லது காப்பாளரது கோரிக்கையின் அடிப்படையில் சீரதிருந்தப்பள்ளிக்கு அனுப்ப இச்சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. இளநிலைச் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுபவன் அங்கு இரண்டாண்டுக் காலத்துக்குக் குறையாமல் தங்க நேரிடும். ஆனால், அங்குத் தங்க வேண்டிய காலம் 18 வயதை அடையும் காலத்துக்கு மேல் நீடிக்கக் கூடாது. முதுநிலைச் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டால் இரண்டு ஆண்டுக்குக் குறையாமலும் ஐந்து ஆண்டுக்கு மேற்படாமலும் தங்க வேண்டும். ஆனால், 21 வயதை அடைந்தவுடன் அங்குத் தங்கக் கூடாது. (இக்கட்டுரையில் வரும் சிறுவன், இளம் வயதினன், இளம் குற்றவாளி என்ற சொற்கள் இருபாலாரையும் குறிக்கும்). எஸ்.நா.