கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர். இவர் தொண்டை நாட்டிலுள்ள அரும்பாக்கம் என்னும் ஊரினர்; மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவர். மூன்றாம் குலோத்துங்கனின் அரசு அதிகாரிகளுள் ஒருவராக இருந்து பல சிறப்புப் பெயர்களையும் பெற்றவர். இவரது சிறப்புப் பெயர்களுள் ஒன்று ‘வத்சராசன்’ என்பதனைக் கல்வெட்டுவழி அறியமுடிகிறது. இதனால், இவர் வச்சர், வச்சவர், வத்தவர், வத்தர் என வழங்கப் பெற்ற சிற்றரசர் மரபில் தோன்றியவர் என்பது தெரிகிறது. வச்சத் தொள்ளாயிரம் எனும் நூல் இம்மரபில் வந்த தலைவன் மீது பாடப்பட்டதாக இருத்தல் வேண்டும். “மணவிற் கோட்டத்துத் திருப்பழையனூர் நாட்டுத் திருவாலங்காட்டுத் திருவரங்கில் அண்டமுற நிமிர்ந்தருளின நாயனாருக்குக் திருநந்தா விளக்கொன்று, ‘குன்ற வர்த்தனக் கோட்டத்து இல்லத்தூர் நாட்டு அரும்பாக்கமுடைய அருணிலை விசாகன் திரைலோக்கிய மல்லன், வத்சராசன்’ என்பவனால் அமைக்கப்பட்டது” என்று திருவாலங்காட்டுக் கல்வெட்டு கூறுகிறது. இது மூன்றாம் குலோத்துங்கனின் முப்பத்திரண்டாம் ஆட்சி ஆண்டில் வெளியிடப் பெற்ற கல்வெட்டு ஆகும். இதே கல்வெட்டு, “பாரதத்தை அருந்தமிழ்ப் படுத்துச் சிவநெறி கண்டவர்” என்று அருணிலை விசாகன் பற்றிக் குறிப்பிடுகின்றது. இதனால் அருணிலை விசாகன் தமிழில் எழுதிய ஒரு பாரதம் இருந்தமை புலப்படும். இப்பாரத மொழி பெயர்ப்பு இப்போது வழக்கில் இல்லை. ‘சிவநெறியில் ஒழுகுபவன்’ எனக் கல்வெட்டில் குறிக்கப் பெற்றிருப்பதால் சைவ சமயத்தில் இவருக்குள்ள ஈடுபாடும் பற்றும் தெளிவாகப் புலனாகின்றன. பாரதத்தைத் தமிழ்ப் படுத்தினார் என்பதனால், இவர் சிற்றரசராகவும், சோழனின் அரசு அதிகாரியாகவும் இருந்ததோடு, வடமொழி வல்ல சிறந்த தமிழ்ப் புலவராகவும் விளங்கியவர் என்பது புலனாகிறது. சதாசிவ பண்டாரத்தார் இவரை ‘அறநிலை விசாகன்’ என்று குறிப்பிடுகிறார்.மு.த.