ஆந்திரப்பிரதேச அனந்தப்பூர் மாவட்டத்தில் இந்துப்பூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர், இவ்வூர் கோயிற் கட்டடக்கலைக்கும் ஓவியங்களுக்கும் புகழ்பெற்றது இவ்வூர் கி.பி. 6–ஆம் நூற்றாண்டில் சிறந்த வாணிக நகரமாகவும் புண்ணியத்தலமாகவும் விளங்கியது. விசயநகரப் பேரரசர் சதாசிவராயரின் காலத்தில் அவரது ஆட்சியின்கீழ் இருந்த நாயக்கக் குறுநில மன்னர்களான வீரண்ணா, விருப்பண்ணா ஆகியோர் இவ்வூரில் உள்ள பாபனேசுவரர் கோயிலை விரிவாக்கினர். இக்கோயிலில் சதாசிவராயரின் கல்வெட்டொன்று உள்ளது. அதன்படி மூன்று தெய்வங்களுக்கான மூன்று கோயில்கள் கட்டப்பட்டதெனத் தெரிய வருகிறது. பாபனேசுவரர் கோயிலின் கோபுரங்கள் வடக்கிலும் மேற்கிலும் அமைந்துள்ளன. இக்கோயில் சிற்பக் கலைச் சிறப்புடையது. ஒரே கல்லினாலான நாகலிங்கம், பெருவடிவிலான கணேசர் ஆகியன இங்குள்ள சிற்பங்களுள் குறிப்பிடத்தக்கவை. கோயிலில் உள்ள நந்தி ஒரே கல்லினாலானது. இந்த நந்திதான் தென்னிந்தியாவில் காணப்படும் பெரிய நந்திகளுள் முதன்மை வாய்ந்தது எனக் கருதப்படுகிறது. கண்ணைக் கவரும் சிற்பங்கள் பல இக்கோயிலின் நடன சாலையில் உள்ள தூண்களில் காணப்படுகின்றன இவற்றுள் இசைக்கலைஞர்கள், நடனமாடுவோர். அரம்பையின் நடனம், நடராசரின் ஆனந்தத் தாண்டவம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இலேபாட்சிக் கோயில் இக்கோயிலில் காணப்படும் ஓவியங்கள் புகழ்பெற்றவை. ஓவியங்களுள் சில அழிந்துபட்ட நிலையில் இருப்பினும், பல இன்றும் அழகு மிக்கதாகவும் அழிவுறா வண்ணம் பாதுகாக்கப்பட்டும் வருகின்றன. ஓவியங்களுள் திருமாலின் பத்து அவதாரமும், வீர பத்திரருடைய மிகப் பெரிய ஓவியமும் குறிப்படத்தக்கவை. இந்த ஓவியங்களின் வண்ணங்கள் கருத்தையும் கண்களையும் கவருவன.