இராசேந்திரன், முதலாம்
irācēntiraṉ, mutalām
பேரும் புகழும் பெற்ற பிற்காலச் சோழ வேந்தருள் முதலாம் இராசேந்திர சோழன் குறிப்பிடத்தக்கவன் ஆவான்.
பேரும் புகழும் பெற்ற பிற்காலச் சோழ வேந்தருள் முதலாம் இராசேந்திர சோழன் குறிப்பிடத்தக்கவன் ஆவான். மதுராந்தகன் என்னும் இயற்பெயர் கொண்ட இவன் சோழப் பெருமன்னன் முதலாம் இராசராச சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் மார்கழித் திங்கள் திருவாதிரை நாளில் பிறந்தவன். இவன் கி.பி. 1012–ஆம் ஆண்டில் இளவரசுப்பட்டம் சூட்டப்பெற்றான். தன் தந்தையின் இறப்பிற்குப்பின் கி.பி. 1014–ஆம் ஆண்டில் பரகேசரிப் பட்டத்துடன் சோழ வேந்தனாக மணி முடி சூடினான். கல்வெட்டுகளில் இவன் ‘சோழ ராசேந்திர வித்தியாதரன்’ எனவும் ‘ஸ்ரீ ராசேந்திர சோழதேவன்’ எனவும் குறிப்பிடப் பெறுகிறான்.
இராசேந்திரனின் குடும்பம்
மாமன்னன் இராசேந்திரனுக்கு முக்கோக்கிழானடிகள், அரிந்தவன்மாதேவி, வீரமாதேவி, பஞ்சவன்மாதேவி, நம்பிராட்டியார் உலகுடையார், நக்கன் செம்பியன்மாதேவியார் முதலான மனைவியர் இருந்ததாகக் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம். இவனுக்கு முதலாம் இராசாதிராசன் (கி.பி. 1018–1054), இரண்டாம் இராசேந்திரன் (சுந்தர சோழ பாண்டியன், கி.பி. 1052–1064), பராக்கிரம சோழ பாண்டியன் (மும்முடிச் சோழன், இராச மகேந்திரன், கி.பி. 1059–1063), வீர ராசேந்திர சோழன் (வீரசோழ தேவன், இராசகேசரி வர்மன் மூன்றாம் கரிகாலன், இலங்கையில் சங்கபோதி சோழன், கி.பி. 1063–1070), மதுராந்தகன், பராந்தக தேவன் முதலான ஆண்மக்களும், அருண் மொழி நங்கை, அம்மங்காதேவி, குணவடிகள் முதலான பெண்மக்களும் இருந்தனர்.
வெற்றிகள்
மாவீரனாகிய இவன் தன் தந்தையார் விட்டுச் சென்ற சோழப் பேரரசைக் கட்டிக் காத்ததுடன், தன் போராற்றலால் அதனை மேலும் விரிவுபடுத்திச் சோழரின் புகழினை உயர்த்தினாள். பேராற்றல் மிக்க இவ்வேந்தனது வெற்றிகள், ‘திருமன்னி வளர’ என்னும் தொடக்கத்தினைக் கொண்ட இவனது மெய்க்கீர்த்திகளால் நன்கு புலனாகின்றன. இவன் இளவரசனாக இருந்த காலத்தி- லேயே இடைதுறைநாடு (இரெய்ச்சூர்ப் பகுதி), வனவாசி (குல்பர்க்கு), மண்ணைக் கடக்கம் (மால்கெட்டு) முதலான நாடுகளை வென்றான். வலிமை மிக்க கப்பற் படையைப் பெற்றிருந்த இவன், கி.பி. 1017–இல் ஈழ நாட்டின்மீது படையெடுத்து, ஐந்தாம் மகிந்தனைத் தோற்கடித்து, அவனைச் சிறை பிடித்ததுடன், ஈழ நாட்டையும் சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். வென்று வாகை சூடிய சோழன் ஈழ வேந்தர் வாழையடி வாழையாகப் புனைந்துகொள்ளும் அரச முடியையும், அவர் தேவியர் முடிகளையும் (Crown), ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் ஈழ வேந்தனிடம் அடைக்கலமாக விட்டுச் சென்ற பாண்டியர் முடியையும், இந்திரன் ஆரத்தையும் கவர்ந்து கொண்டு மகிழ்ச்சிப் பெருக்குடன் சோழநாடு திரும்பினான்.
ஈழநாட்டில் இணையற்ற வெற்றி பெற்ற இராசேந்திரன் பின்னர்ச் சேரநாட்டின் மீது படையெடுத்துச் சேரனை வென்றடக்கித் தன் மேலாண்மையை அங்கு நிறுவினான். அடுத்து, பழந்தீவுகளும் சாந்திமத்தீவும் இச்சோழனால் கைக்கொள்ளப்பட்டன, சாந்திமத் தீவென்பது ‘அண்ட் ரோத்’ என்னும், தீவாக இருத்தல் கூடும். அடுத்து, இவ்வேந்தன் பாண்டியரை வென்று வெண்முத்துகளைக் கவர்ந்து கொண்டான். பாண்டிய நாட்டில் சோழராட்சியை நிலைநிறுத்தும் பொருட்டு, மதுரை மாநகரின்கண் அரண்மனை அமைத்துத் தன் மகனைச் ‘சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன்’ என்னும் பெயரில் அங்கு அரியணையேற்றிச் சோழப் பேராளனாக ஆண்டு வரச் செய்தான். இதனைப் ‘பாண்டிய மண்டலத்து மதுரையில் மாளிகை எடுப்பித்துத் தன் மகன் சோழ பாண்டியன் என்று அபிடேகம் செய்து’ என்னும் திருவாண்டார் கோயில் கல்வெட்டால் அறியலாம். இச்சோழபாண்டியர் தம் பெயரில் தனித்துக் கல்வெட்டுகள் வெளியிடவும் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர்ச் சேரநாட்டு ஆட்சிப் பொறுப்பும் இச்சோழ பாண்டியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாளுக்கியரைத் தோற்கடித்தல்
இராசேந்திரன் கி.பி. 1021–இல் சோழரின் தீராப் பகைவரான மேலைச் சாளுக்கியரின் மீது படையெடுத்துச் சென்று, சயசிங்கனை முயங்கிப் போர்க்களத்தில் தோற்கடித்தான். இதன் விளைவாகத் துங்கபத்திரை ஆறு மீண்டும் சோழர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் இடையே எல்லையாயிற்று.
சோழப்படை அடுத்துக் கலிங்கரையும் ஒட்டரையும் (ஒரிசா வேந்தன்) தெலுங்கரையும் வெற்றி கொண்டு, கி.பி. 1019–இல் வேங்கியில் (கீழைச் சாளுக்கியரின் தலைநகரம்) இராசராச நரேந்திரனுக்கு எதிராகச் சயசிங்கன் மேற்கொண்ட சதித்திட்டத்தை முறியடித்து, வேங்கியில் அமைதியை நிலை நாட்டியது. இவ்வெற்றிகளின் விளைவாக இராரேந்திரனின் புகழ் தென்னக முழுவதும் பரவியது.
கங்கைப் படையெழுச்சி
இராசேந்திரனின் வெற்றிகளுள் கங்கைப் படையெழுச்சியே முதன்மை வாய்ந்தது. வேங்கியில் வெற்றிபெற்ற சோழப்படை அங்கிருந்து வடநாடு நோக்கி முன்னேறியது. சோழர் வெற்றிப்படை சக்கரக் கோட்டம் (சித்திர கூடம்), ஆதிநகர், தண்டபுத்தி (மிதுனபுரி), தக்கணலாடம், கீழ் வங்காளம், உத்தரலாடம் முதலான வட இந்திய அரசுகளை வென்று, தமிழரின் வீரத்தை ஆங்கு நிலை நாட்டியது. தண்டபுத்தியை ஆண்ட தரும பாலன், தக்கணலாடத்தை ஆண்ட இரண சூரன், வங்கத்தை ஆண்ட கோவிந்த சந்திரன், உத்தர லாடத்தை ஆண்ட மகிபாலன் முதலான வட இந்தியப் பெருமன்னர்கள் சோழர் படையால் தோற்கடிக்கப்பட்டனர் என்பது இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது. இவ்வெற்றிகளை இராசேந்திரனது மெய்க்கீர்த்தி, ‘விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமும்–முதிர்பட வல்லை....காமிடை வளைஇய நாமணக் கோணமும் – வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் – பாசடைப் பழன மாசுணி தேசமும் ......... ஒட்ட விசயமும் – பூசுரர் சேருநற் கோசல நாடும் - தன்ம பாலனை வெம்முனையழித்து வண்டுறை சோலைத் தண்ட புத்தியும் ......... தங்காத சாரல் வங்காள தேசமும் ...... நித்தில நெடுங்கடல் உத்தர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத்தெறிபுனல் கங்கையும்’ என்று முறைப்படுத்திக் கூறுகிறது.
விளைவுகள்
இம்மாபெரும் வரலாற்றுப் புகழ் மிக்க வெற்றியின் விளைவாகச் சோழரின் புகழ் வடஇந்தியாவிலும் பரவலாயிற்று. காவிரி நாடனான இராசேந்திரன் கங்கைக்கரையில் வெற்றி பெற்றதால், ‘கங்கை கொண்ட சோழன்’ என்னும் விருதுப் பெயரினைப் பூண்டான். இவ்வெற்றியின் நினைவாக இவ்வேந்தன் திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டத்தில் செயங்கொண்ட சோழபுரத்திற்கு அருகில் ‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்னும் அழகிய புதிய நகரத்தை உருவாக்கினான்; சோழர் படை கங்கையிலிருந்து கொண்டு வந்த புனித நீரை ஊற்றிச் ‘சோழகங்கம்’ என்னும் பேரேரியை உருவாக்கி, நீர்மயமான வெற்றித் தூணை அமைத்தான். இதனைத் திருவாலங்காட்டுச் செப்பேடு ‘சலமயமான சயத்தம்பம்’ என்று குறிப்பிடுவதால் அறியலாம். கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ–கங்கத்தை வெட்டிய இராசேந்திரன் ஆங்கு மாபெரும் சிவன் கோயில் ஒன்றினையும் கட்டி, ‘கங்கை கொண்ட சோழேச்சுரம்’ என அதற்குப் பெயர் சூட்டினான். இராசேந்திரன் தன் தலைநகரைத் தஞ்சையிலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினான்.
சோழரின் கங்கைப் படையெழுச்சியின் பயனாகத் தமிழர் நாகரிகம் வங்க மாநிலத்தில் பரவியது. கங்கைப் படையெழுச்சியில் கலந்து கொண்ட படைத் தலைவன் ஒருவன் (கருநாடகன்) மேற்கு வங்காளத்தில் தங்கினான். அவன் வழியில் வந்த சாமந்த சேனன் என்பான் கி.பி. 1050–இல் வங்கச் சேன் மரபினைத் தோற்றுவித்தான். எனவேதான் ஆர்.டி. பானர்சி (R.D. Banerji) இராசேந்திரனின் கங்கைப் படையெழுச்சி வங்கத்தில் நிலையான அடையாளங்களை விட்டுச் சென்றதாக ‘வங்க பாலர்கள்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். வங்கச் சைவ மரபும் தமிழ்ச் சைவ மரபும் ஒருங்கிணைவதற்கும் இப்படையெழுச்சியே காரணமாயிற்று.
கடாரப் படையெழுச்சி
சோழநாட்டின் கடல் வாணிகத்தைப் பெருக்கும் பொருட்டோ தமிழ் வணிகர்களுக்கு இன்னல்கள் புரிந்து வந்த கடார அரசினைத் தண்டிக்கும் பொருட்டோ இராசேந்திரன் கடார நாட்டின் மீது படையெடுக்க நேர்ந்தது. இவன் கி.பி. 1025–ஆம் ஆண்டிற்கு முன்பே இப்படைவெழுச்சியை மேற்கொண்டான். சோழரின் கப்பற்படை கடாரம் என்ற மலாயா, பினாங்கு பகுதியின் கெடாவையும், இந்தோனேசியாவின் தென்கிழக்குப் பகுதியான சிரீ விசயத்திலுள்ள பாலம் பாங்கு என்னுமிடத்தையும் தாக்கிக் கைப்பற்றிக் கொண்டது. போரில் தோற்கடிக்கப்பட்ட கடார வேந்தனான சங்கராம விசயோத்துங்கவர்மன் சிறை பிடிக்கப்பட்டான். இவ்வெற்றிகளை இராசேந்திரனது 13–ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டும் திருவாலங்காட்டுச் செப்பேடும் விரித்துரைக்கின்றன.
இவ்வெற்றியின் விளைவாக இராசேந்திரன் ‘கடாரம் கொண்ட சோழன்’ என்னும் விருதுப் பெயரினைப் பூண்டான். இவ்வெற்றியினை அடுத்துத் தோன்றிய இவன் கல்வெட்டுகள் இவ்வேந்தனைப் ‘பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன்’ என்று குறிப்பிடுகின்றன.
பிற வெற்றிகள்
இவ்வெற்றியைத் தொடர்ந்து இராசேந்திரன் கீழ் கரையில் உள்ள பண்ணை (சுமத்திராவின் கீழ் கரை), மலையூர் (மலாயா), இலங்கா–சோகம் (கெடாவிற்குத் தென்பகுதி) மாயிருடிங்கம் (மலாயாவின் நடுப்பகுதி), பப்பாளம் (கிரா பூசந்திக்கு அருகில் உள்ளது), தக்கோலம் (தகோபா–மலாயா), அதனருகில் உள்ள இலிம்பங்கம், வளைப்பந்துார் ஆகியனவற்றையும், இலாமுரி தேசம் (வடசுமத்திரா), நக்கவாரம் (நிக்கோபார்த் தீவு), தாமலிங்கம் (மலாயாவின் மெலிங்நகர்) முதலான நாடுகளையும் வென்று தன்னடிப்படுத்திச் சோழரின் புகழை ஆங்குநிலை நாட்டினான். தன் சுப்பற் படையின் வலிமையால் கடல் கடந்த நாடுகளின் வியத்தகு வெற்றிகள் பல பெற்ற இராசேந்திரன், இந்தியப் பேரசர்களுள் தலைசிறந்தவனாகவும் கடலாண்ட காவலனாகவும் போற்றப்படுகிறான். கடல் கடந்த நாடுகளை வென்ற வகையில் இச்சோழ வேந்தன் கிரேக்க நாட்டு மாவீரனான அலெக்சாந்தருடனும் பிரான்சு நாட்டு நெப்போலியனுடனும் ஒப்புமை கூறத்தக்கவனாவான்.
கடல் கடந்த நாடுகளைக் கொண்டதன் விளைவாகத் தமிழரின் கட்டடக்கலை, வழிபாட்டு உருவங்கள், சமயக் கோட்பாடுகள், சிற்பக்கலை ஆகியன கிழக்கிந்தியத் தீவுகளிலும், பர்மா, மலாயா, சயாம், இந்தோ–சீனா முதலான நாடுகளிலும் பரவின. தமிழரின் கடல் கடந்த வாணிகமும் ஆங்கு வளர்ந்தது. தமிழகத்தில் புத்துயிர் பெற்றுத் திகழ்ந்த இந்து சமயத்தின் கருவான ஆன்மிகப் பண்பாடு கீழை நாடுகளில் பரவி வேரூன்றியதையும், இவ்வேந்தனது கடாரப் படையெழுச்சியின் விளைவுகளுள் தலையாயதாகக் கொள்ளலாம். இவனால் வெல்லப்பட்ட கடாரப் பகுதிகள் அனைத்தும் இசுலாம் மதத்தைத் தழுவிய பின்னரும், இந்து சமயப் பண்பாட்டுச் சாயல்களைக் கொண்ட வாழ்வு முறையை மேற்கொள்ளும் அளவிற்கு அகண்ட இந்தியா (Greater India) என்ற பண்பாட்டு விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்த பெருமை இராசேந்திரனையே சாரும்.
ஆட்சிப் பரப்பு (எல்லை)
மேற்கூறப்பட்ட தரைப்படை, கடற்படை வெற்றிகளால் சோழப் பேரரசு இராசேந்திரனது ஆட்சிக் காலத்தில் மிகப் பரந்து விரிந்து கிடந்தது. சுருங்கக் கூறின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசின் எல்லை உச்ச நிலையில் இருந்தது எனலாம். தமிழ்நாடு, தெலுங்கு தேசம், கர்நாடகம், ஒரிசா மாநிலத்தின் தென் பகுதி, சிரீலங்கா ஆகியன சோழரின் நேரடி ஆட்சிக்குட்பட்டிருந்தன. பரமார வேந்தனான போசராசனுடனும், சேதி நாட்டு மன்னனான காலசூரி வம்சத்துக் காங்கேயனுடனும், சாந்தல மன்னனான வித்தியாதரனுடனும் இவன் நட்புறவு கொண்டு, சோழரது பெருமையை உயர்த்தினான் என்பதும் இங்குக் குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி
தனது ஆட்சிக் காலத்தின் பெரும் பகுதியை அண்டை நாடுகளுடன் போரிட்டுச் சோழரின் மேலாண்மையைப் பரப்புவதில் செலவிட்ட இராசேந்திரன், தன் மக்களின் நலன் கருதி நல்- லாட்சி நல்குவதிலும் கண்ணும் கருத்துமாக இருந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, அவை ‘மண்டலி’ அல்லது ‘மண்டல முதலிகளால்’ ஆளப்பட்டு வந்தன. மண்டலங்கள் வளநாடுகள், நாடுகள் (கூற்றம்), ஊர்கள் எனப் பகுக்கப்பட்டு நிருவாகம் செய்யப்பட்டன. ஐம்பெருங்குழு, எண்பேராயம், உறுதிச் சுற்றம், அரசியல் பொறுப்புச் சுற்றம் ஆகியன மன்னனுக்கு நாடாட்சியில் துணை புரிந்தன. கிராம ஆட்சிமுறை போற்றத்தக்க வகையில் செயற்பட்டது. குடவோலை முறையில் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மிலாடுடையார், பாண்டியர், வாணர், வைதும்பர், தெலுங்குச் சோழர், கொங்காள்வார், சங்காள்வார் முதலான குறுநில வேந்தர்களும், மாராயன் அருண்மொழி, இராசேந்திர சிங்க மூவேந்த வேளான், இராசராசபிரமமாராயன், விக்கிரம சோழச் சோழிய வரையன் முதலான அரசியல் அதிகாரிகளும் மன்னனுக்கு நிருவாகத்தில் துணை புரிந்தனர். அரையன் இராசராசன், கிருட்டிணன் இராமன், உத்தம சோழப்பல்லவரையன், உத்தம சோழக் கோன், இராக மல்ல முத்தரையன், வல்லவரையன் வந்தியத்தேவன் முதலான படைத்தலைவர்கள் சோழர் படைக்கு வெற்றி ஈட்டித் தந்ததுடன், எல்லைப் புறங்களில் அமைதியையும் காத்தனர். வேளாண்மை, வாணிகம், தொழில், கைத்தொழில், கல்வி ஆகியன வளர்ச்சி பெறத் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாட்டில் மக்கள் நலம் பேண மருத்துவமனைகள் நிறுவப்பட்டு, முறையாகப் பாதுகாக்கப்பட்ட செய்திகளைப் பண்டாரவாடை, திருவாமாத்தூர் போன்ற இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள் விரித்துரைக்கின்றன.
சமயம்
இராசேந்திரன் தன் முன்னோர்களைப் போன்று சைவ சமயம் தழைத்தோங்கப் பெரு முயற்சிகளை மேற்கொண்டான். சைவ நெறி தழைத்தோங்க இவன் கங்கைக்கரை நாடுகளிலிருந்து பல சைவ சமய ஆச்சாரியர்களைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தான். சர்வ சிவ பண்டிதர் என்னும் சிவாச்சாரியார் இவ்வேந்தனது அரச குருவாகத் திகழ்ந்ததாகத் தெரிகிறது. இவன் பல சைவக் கோயில்களையும் மடங்களையும் கட்டியதுடன் அவற்றைப் பாதுகாக்க எண்ணிறந்த அறக்கொடைகளும் செய்தான். இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் தான் பெண் தெய்வ வழிபாட்டிற்கும் உரிய இடம் அளிக்கப்பட்டது. திருக்காமக் கோட்டம் எனச் சொல்லப்படும் ஈசர் கோயிலின் அருகில் அம்மனுக்குத் தனிச் சந்நிதி அமைக்கும் வழக்கத்தைப் புகுத்திய பெருமையும் இவனையே சாரும். திருக்கோயில்களில் வழிபாடுகள் தொடர்ந்துமுறைப்படி நடைபெறவும். திருவிழாக்கள் நடைபெறவும் உரிய ஏற்பாடுகளை இவன் செய்தான். சைவ நெறியே செந்நெறி என உணர்ந்து சிவத்தொண்டு புரிந்த இவன், பிற சமய வளர்ச்சிக்கும் ஆதரவு நல்கினான். சிவன் கோயில்களை எழுப்பிய இவன், எண்ணாயிரத்தில் சுந்தர சோழ ஆழ்வார் கோயில், கர்நாடகத்தில் சிக்ககன் சோ, சிரீலங்காவில் (ஈழம்) இராசேந்திர சோழப் பெரும்பள்ளி ஆகியன அமைக்கப் பெறுவதற்கும் நாகப்பட்டினம் புத்தவிகாரைக்கு அளிக்கப்பட்ட பள்ளிச்சந்தத்தை உறுதி செய்வதற்கும் பேருதவி புரிந்தான். எம்மதமும் சம்மதம் என்னும் பரந்த சமயக் கொள்கையைக் கடைப்பிடித்த வகையில், இவன் மாமன்னன் அசோகருடனும் அர்சருடனும் (Harsha) ஒப்பிடத்தக்கவன் ஆவான்.
கலைப்பணி
இராசேந்திர சோழன் தன் குல முன்னோர்களைப் போன்று கட்டடக்கலை, சிற்பக் கலை, ஓவியக்கலை, இலக்கியக்கலை ஆகியவற்றை வளர்ப்பதில் பேரார்வம் காட்டினான். இவ்வேந்தனது ஆட்சிக்காலத்தில் கட்டடக்கலை முழுமை அடைந்தது. பேரழகு வாய்ந்த திருக்கோயில்கள் பல இவ்வேந்தன் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பெற்றன. கங்கை கொண்ட சோழபுரத்தில் எழில் வாய்ந்த கங்கைகொண்ட சோழீச்சுரத்தை அமைத்த இவன், வடார்க்காடு மாவட்டம் வந்தவாசி வட்டம் கூழம் பந்தலில் கங்கை கொண்ட சோழீச்சுரர் ஆலயத்தையும், கர்நாடக மாநிலத்தில் கொத்த கெரே, தொட்டமளூர் என்னுமிடங்களில் சிவன் கோயில்களையும், சிரீலங்காவில் (ஈழம்) மாந்தோட்டம், மாத்தோட்டம் என்னுமிடங்களில் சிவன் கோயில்களையும் கட்டினான். இவன் கன்னியாகுமரியில் கோனேரீசுவரன் கோயில், தென்னார்க்காடு மாவட்டம் எண்ணாயிரத்தில் சுந்தரசோழ ஆழ்வார் கோயில், பனையவரத்தில் (விழுப்புரம் அருகில்) பரவை ஈசுவரமுடைய மகாதேவர் திருக்கோயில், அகரத்தில் கைலாயநாதர் கோயில் முதலானவற்றையும் கட்டியுள்ளான். இவன் தனது பட்டத்தரசி பஞ்சவன் மாதேவியின்மீது கொண்ட எல்லையற்ற காதலின் நினைவுச் சின்னமாகப் பழையாறையில் பஞ்சவன் மாதேவீச்சுரம் (இன்று இராமநாதன் கோயில் என வழங்குகிறது) என்னும் பள்ளி படைக் கோயிலைக் கட்டியுள்ளான். தன் உள்ளம் கவர்ந்த நங்கை நல்லாள் பரவை நங்கையின் வேண்டுகோளுக்கு இணங்கத் திருவாரூர்க் கோயிலில் வீதிவிடங்கப் பெருமானின் கோயிலைக் கற்றளியாக இவ்வேந்தன் மாற்றினான்.
இராசேந்திரன் ஆட்சிக் காலத்தில் கர்நாடக மாநிலத்தில் பேலத்துருவிலும், கோலாரிலும் (கோலாரம்மா கோயில்) கோயில்கள் புதுப்பிக்கப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் உள்ள திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில், தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் தக்கண (தென்) கைலாயம், வான மங்கையில் கைலாசநாதர் கோயில் ஆகியன புதுப்பிக்கப்பட்டன. அளகாதிரிப்புத்தூர்ச்சூரியன் கோயில், திருவல்லம் திருவையா ஈசுவரம் (வில்வவனேசுரர் கோயிலின் தென்புறம்) ஆகியன எடுக்கப்பெற்றதும் இவனது ஆட்சிக் காலத்திலேயாகும்.
பல கோயில்களைக் கட்டியும் புதுப்பித்தும் அருந்தொண்டு ஆற்றிய இக்கலைப் புரவலன் எண்ணிறந்த திருக்கோயில்களுக்கு அறக்கொடைகளும் அளித்துள்ளான். அவற்றுள் காமரசவல்லி கார்கோ பீசுவரம் (திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டம்), திருவாலங்காட்டுச் சிவன்கோயில், வேம்பற்றூர்ச் சிவன் கோயில், திருச்சின்னாபுரச் சிவன் கோயில், கூழம் பந்தல் சிவன் கோயில் ஆகியன குறிப்பிடத்தக்கன. இராசேந்திர சோழனால் புதிதாகக் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரத்தின் திட்டமும் அமைப்பும் இன்றும் பாராட்டத்தக்க அளவில் உள்ளன.
கங்கை கொண்ட சோழபுரம்
சிற்பங்களும் படிமங்களும் (Sculptures and Bronzes)
இவ்வேந்தனது காலத்தில் சிறப்புற்று விளங்கிய கலைகளுள் சிற்பக்கலையும் ஒன்று. இன்றும் குன்றா அழகுடன் கங்கை கொண்ட சோழபுரச் சிவன் கோயிலில் காட்சி தரும் கலைமகள், சண்டீசப்பதம் தரும் சிவன் (சண்டீச அனுக்கிரக மூர்த்தி), திருமகள் ஆகியன இவ்வேந்தன் காலத்தைய சிற்பக் கலை உயர்ச்சிக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். உலகப் புகழ்பெற்ற இச்சிற்பங்களின் மாற்றுரு இன்றும் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளமை போற்றுதற்குரியது. கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் காணப்படும் சோமாசுகந்தர், சுப்பிரமணியர், துர்க்கை, போக சக்தி, அதிகார நந்தி போன்ற நுண்ணிய வேலைப்பாடமைந்த செப்புப் படிமங்கள், சோழர் கலைச் சிறப்பை நன்கு உணர்த்துகின்றன. இச்சிற்பங்களைக் கண்டுகளிப்போர் இவ்வேந்தனது ஆட்சிக்காலம் சோழர் சிற்பக் கலையின் பொற்காலம் என்பதனை நன்குணர்வர்.
கல்வி வளர்ச்சி
இராசேந்திரனது ஆட்சிக்காலத்தில் கல்வி நன்கு வளர்ச்சி பெற்றது. தமிழ், வடமொழி, வேதம், இலக்கணம், வேதாந்தம், மீமாம்சம் முதலானவையும் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன. திருக்கோயில்களும் மடங்களும் சிறந்த கல்வி நிலையங்களாகத் திகழ்ந்தன. தென்னார்க்காடு மாவட்டத்தில் எண்ணாயிரம் என்னுமிடத்தில் இச்சோழ வேந்தனது காலத்தில் புகழ் மிக்கதொரு கல்லூரி சிறந்த கல்விப் பணியாற்றியது. திருவொற்றியூரில் மூன்று கல்லூரிகளும் வேப்பத்தூரில் ஒரு வடமொழிக் கல்லூரியும் திருமுக்கூடலில் வடமொழி விடுதிக் கல்லூரியும் பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள திரிபுவனியில் ஒரு கல்லூரியும் இராசேந்திரனது ஆட்சிக்காலத்தில் சீரிய கல்விப்பணியாற்றி வந்தன என்பதனைக் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம். ‘சரசுவதி பண்டாரம்’ என்னும் பெயரில் நாட்டின் பல இடங்களில் நூலகங்களும் (Libraries) நிறுவப்பட்டிருந்தன.
இச்சோழ வேந்தனது ஆட்சிக் காலத்தில் சர்வ சிவ பண்டிதர், இலகுலீச பண்டிதர், ஈசான சிவ பண்டிதர், காச்ம கிராரி ஆராவமுது புருடோத்தமனான இராசேந்திர சிம்மப் பேராசிரியன், காச்ம கிராரி கிருட்டிண ரெங்கனான திரிபுவனமாதேவிப் பேராசிரியன், நம்பியாண்டார் நம்பி, நம்பி காடவ நம்பி, கருவூர்த்தேவர், அமிதசாகரர், குணசாகரர், நாராயண கவி முதலான அறிஞர்களும் பெரும்புலவர்களும் வாழ்ந்து இலக்கியப் பணி புரிந்துள்ளதால் தமிழ், வடமொழி இலக்கியங்கள் நல்ல வளர்ச்சி பெற்றன. கற்போரைக் கசிந்துருகச் செய்யும் திருவிசைப்பாக்களை இயற்றியவர் கருவூர்த்தேவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இவ்வேந்தனது திருவாலங்காட்டுச் செப்பேட்டின் வடமொழிப் பகுதியினைச் சிறப்பான முறையில் இயற்றிய பெருமை சங்கரரின் மகனான நாராயண கவியைச் சாரும். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் செப்பேடுகள் திருக்களர்ச் செப்பேடுகள் ஆகியனவும் இராசேந்திரனது ஆட்சிக்காலத்தில் எழுதப்பட்டனவே என்பதும் இவை சிறந்த இலக்கிய நயம் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கன. இவன் கல்வி வளர்ச்சிக்கு ஆதரவு நல்கியதாலும். கல்வியில் நாட்டம் கொண்டிருந்ததாலும் ‘பண்டித சோழன்’ என்னும் சிறப்புப் பெயருக்கு உரியவன் ஆனான்.
வெளிநாடுகளுடன் உறவு
இச்சோழ மன்னன் பரமாரம், சேதிநாடு, சாந்தலம், சீனம், காம்போசம் (கம்போடியா), வியட்நாம் ஆகிய நாடுகளுடனும் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் நட்புறவு கொண்டிருந்தான். இவன் தன் தந்தையைப் போன்று சீன நாட்டுடனும் நட்புறவு கொண்டான். எனவே கி.பி. 1020 கி.பி. 1033–ஆம் ஆண்டுகளில் சீன மன்னனிடம் தூதுக்குழுக்களை அனுப்பினான். சீன வேந்தனும் சோழ அரசவைக்குத் தன் தூதர்களை அனுப்பினான். இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையே வணிக உறவும் நட்புறவும் நீடித்தன. இந்நல்லுறவினைத் தஞ்சை மாவட்டத்தில் கிடைத்துள்ள 2165 சீன நாணயங்களும் உறுதி செய்கின்றன. இராசேந்திரன் காலத்தைய சீனவேந்தர் காலத்தில் வெளியிடப்பட்ட இந்நாணயங்களைச் சென்னை அருங்காட்சியகத்தில் இன்றும் காணலாம். அரசியல் திறனில் பண்பாட்டு உறவும், வணிக உறவும், நட்புறவும் கொண்டு, சோழரின் வெளிநாட்டுறவுக் கொள்கையில் புதியதோர் கட்டத்தை இராசேந்திரசோழன் தொடங்கினான் என்பது நினைவு கூரத்தக்கது.
சிறப்புப் பெயர்கள்
இராசேந்திரசோழன் வீரம், வெற்றி, ஆற்றல், செயல்திறன், கொடை, அரசியல் திறன் முதலான அருங்குணங்கள் அடையப் பெற்றான். இவன் கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்ட சோழன், மண்ணை கொண்ட சோழன், கடக்கம் கொண்ட சோழன், பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பர கேசரிவர்மன், முடி கொண்ட சோழன், மலை நாடு கொண்டான், இரட்டைபாடி கொண்ட சோழன், வீரசோழன், வீர ராசேந்திரன், பராக்கிரம சோழன், சோழேந்திர சிம்மன், சயசிம்ம சிம்ம சரபன், மகிபாலகுலகாலன், இராசராசேந்திரன், உத்தமசோழன், விக்கிரம சோழன், பண்டிதசோழன், அதிசய சோழன், மனுகுல சோழன், இராச வித்தியாதரன், உதார விடங்கன், தான வினோதன், நிருப திவாகரன், பார்த்திவேந்திரன் முதலான சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தான் என்பதனைக் கல்வெட்டுகளாலும் செப்பேடுகளாலும் அறியலாம். கர்நாடக மாநிலத்தில் காணப்படும் இவ்வேந்தனின் கல்வெட்டுகளில் இவ்வேந்தனுக்கு வீரராட்சசன், கல்யாணபுரம் கொண்ட சோழன், கலிகந்தகா முதலான விருதுப் பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றால் இராசேந்திரனின் சிறப்பினையும் பெருமையினையும் அறியலாம்.
இறப்பு
ஏறத்தாழ 33 ஆண்டுகள் சீருடனும் சிறப்புடனும் ஆட்சி புரிந்து, புகழை உயர்த்திய பரகேசரி முதலாம் இராசேந்திர சோழன் கி.பி. 1044–ஆம் ஆண்டில் தொண்டை நாட்டில் உள்ள பிரமதேசம் (வடஆர்க்காடு மாவட்டம்) என்னுமிடத்தில் இவ்வுலக வாழ்வை நீத்தான். வீரமாதேவி என்னும் அரசியார் தம் கணவனுடன் உடன்கட்டையேறினார்.
இராசேந்திரனின் திருவுருவம்
செயற்கரிய செயல்புரிந்த செயல் வீரர்களுக்கு அவர்கள் நினைவாகத் திருவுருவச் சிலை வடித்தல் தமிழரின் மரபு. அவ்வகையில் மாவீரனாகவும் மாமன்னனாகவும் அறிவுசால் ஆட்சியாளனாகவும் நிகழ்ந்த இராசேந்திரனுக்குக் கோவிந்தபுத்தூர், திருவாரூர், திருநாரையூர், கோலார் முதலான இடங்களில் திருவுருவச் சிலைகள் எடுக்கப்பட்டன. இராசேந்திரனின் பூதவுடல் மறைந்தாலும், அவனது மங்காப் புகழினை இத்திருவுருவங்கள் இன்றும் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
மதிப்பீடு
இராசேந்திரன் சோழப் பெருமன்னன் இராசராசனின் மகனாகப் பிறந்து, தந்தையையும் விஞ்சிய மாவீரனாகவும் நல்லாட்சியாளனாகவும் விளங்கினான். இவன் சோழரின் புகழைத் தென்னிந்தியாவில் மட்டுமன்றி, வடநாட்டிலும் கடல் கடந்த நாடுகளிலும் விரிவடையச் செய்த செயல் வீரன் ஆவான். சோழப் பேரரசினை உச்ச நிலைக்குக் கொண்டு வந்து பொற்காலம் ஒன்றினை உருவாக்- கிய ஆற்றல் மறவனாகிய இராசேந்திரன், சோழரின் கலை வரலாற்றில் தலை சிறந்ததோர் இடத்தினைப் பெறுகிறான். அலெக்சாந்தரும் சமுத்திர குப்தனும் அசோகரும் நரசிம்மவர்மனும் தம் தந்தையைக் காட்டிலும் மிக்க புகழுடையவர்களாகத் திகழ்ந்தது போன்று, இவனும் இராசராசனை விட மேம்பட்ட சிறப்புடையவனாகத் திகழ்ந்தான். இவ்வேந்தன் கடல் கடந்த வெற்றிகளில் பாரசீக நாட்டு மகாசைரசுக்கும், கட்டடக் கலையைப் பேணிவளர்ப்பதில் உரோம்நாட்டு அகசுடசுக்கும் (Augustus), சமயப் பொறையில் மாமன்னன் அசோகருக்கும், நல்லாட்சி வழங்கியதில் சூர் வமிசத்து செர்சாவுக்கும் ஒப்பானவனாக விளங்கினான்.
தன் படை வலிமையாலும், பண்பாட்டு உறவுகளாலும், அன்றைய உலகெங்கும் மதிக்கத்தக்க அளவில், இந்தியாவில் ஓர் இந்துப் பேரரசைக் கட்டிக்காத்தவன் இராசேந்திரனே என்பது வரலாற்று உண்மையாகும். கங்கை கொண்ட சோழபுரம் என்னும் அழகிய நகரை அமைத்து, அதனைச் சிற்பக் கூடமாகவே மாற்றி, உலகோர் போற்றும் வகையில் மாபெரும் கலைப் புரவலனாகத் திகழ்ந்த இவன், இந்தியப் பெருமன்னர்களுள் தலை சிறந்த தமிழ்வேந்தன் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.ம.இரா.த.
துணை நூல்
Nilakanta Sastri, K.A., History of South India, Oxford University Press, Delhi, 1983.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 53)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ndgcrn89/
தமிழ்“இராசேந்திரன், முதலாம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ndgcrn89/APA
Oliyon Research. (2026). இராசேந்திரன், முதலாம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ndgcrn89/MLA
"இராசேந்திரன், முதலாம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ndgcrn89/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment